Friday, December 5, 2008

மனசாட்சி.....8

உச்சி வெய்யில் உடலைத்தாக்க, உள் மனதோ அவனைத்தாக்க கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் வரை வழிந்தோட..ஏதும் அறியாத கோபால்......போகும் பாதையில் குறுக்காகப்போகும் ஆட்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும்......டிங்..டிங்டிங்...என்று வாயினால் ஒலி எழுப்பி பெல்சத்தம் போடவும்......தாகம் எடுக்க வீதியோரத்தே இருந்த தண்ணீர்க் குழாயைக் கண்டவுடன் சயிக்கிளால் மெல்ல இறங்கி.......கோபாலிடம் சயிக்கிளைக்கொடுத்துவிட்டு நிரைய நீர் அருந்தினான் மாயாவி.

அப்பா எனக்கும் தண்ணீர் விடாய்க்குதப்பா.......சொன்னவன் சயிக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு வலக்கை விரல்களை ஒன்றாகக் குவித்து வழிந்தோடும் தண்ணிரைப் பருகினான்....கோபால்.

கழுத்தில் போட்டிருந்த மெல்லிய துண்டை குழாய்தண்ணியில் நனைத்து அதனைப்பிழிந்து முகத்தைதுடைத்து கண்ணீரைக்கழுவினான் மாயாவி....அப்போது மகனை ஏறிட்டு பரிதாபமாகப்பார்த்தான்......மீண்டும் அவன் கண்கள் கலங்க ஆரம்பித்தது. மீண்டும் மகனையும் ஏற்றிச்சென்று அருகிலிருந்த பாட்டா கடைஒன்றிற்கு அருகில் நிறுத்தி.....கோபாலுவோடு அக்டையின் உட்சென்றான்....

அங்கே மகனுக்கு கால்செருப்பு ஒன்று எடுத்துத்தரும்படி விற்பனையாளரிடம் கூற , அவ்வாறே அவனுக்கு அளவாக..பாட்டா செருப்பு அவனுக்குப்பிடித்த நீலநிறத்தில் எடுத்துக்கொடுக்க....உள்ளம் பூரிப்படைந்து துள்ளிக்கொண்டிருந்தான் கோபால்....அளவான செருப்பு கிடைத்துவிட்டது. விலை ரூபா 99.99 சதமாகயிருக்க....மகேஸ்வரி அம்மா கொடுத்த அந்த 100 ரூபாய்தாளை கொடுத்துஅதனைப்பெற்றுக்கொண்டான்.பழைய செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மகனை மீண்டும் ஏற வைத்துக்கொண்டு ஹொஸ்பிட்டல் நோக்கிச் சென்றான்...மாயாவி.

அப்பா எதுகப்பா.....எனக்கு புதுசு பாட்டா...(செருப்பு)...அம்மா எப்பவும்... வேண்டேக்க கொஞ்சம் பெரிசாத்தான் எடுத்துதருவா.அப்பத்தான் வளரவளர போடலாம் என்று......ஆனா இது எனக்கு நல்லம்....எதுக்கப்பா....? நாளைக்கு ஸ்கூலுக்கு போறனா...? அப்...பா......என சயிக்கிள் கான்டிலை அங்குமிங்கும் ஆட்டினான் முன்னுக்கு இருந்தபடி கோபால்...

டேய்.....சும்மாயிருடா....அந்தச்செருப்பு பழசாகிப்போயிட்டுதா......அதுதான்டா எடுத்தேன்..உனக்கு வேணாம்னா சொல்லு கடையில கொடுத்திரலாம்.......

இல்லப்பா......வேணும் எனக்கு....என்று கீழே குனிந்து கால் செருப்பைப் பார்த்துகொண்டான்...சிரித்தான்.....பின்பு கவலையடைந்தான்.......எதுவுமே பேசாது இருந்தான்.....எந்நேரமும் வாய் வலிக்காது பேசிக்கொண்டிருக்கும் கோபால் அமைதியாக இருப்பதை எண்ணி மாயாவி பேச்சுக்கொடுத்தான்.....

என்னப்பா சத்தத்தைக்காணோம்....

ம்.....அப்பா....என்னோட விளையாட வருவாங்களே ரகு, காந்தன்.......அவங்க ஒரே என் செருப்பை எடுத்து ஒளிச்சு வைப்பாங்கப்பா........அதுதான் அவங்களுக்கு காட்டவேணும் என்று யோசிக்கிறன்.....எப்ப காட்டவேன் என்றிருக்ப்பா....அதுதான் இப்ப கவலை....

சிரிக்கிறான் மாயாவி.....ம்.......அம்மாவைப் பார்க்கப்போறோம் ஆஸ்பத்திரி வந்திட்டுது இறங்கப்பா......அங்க சத்தம் ஒன்னும் போடாதே என்ன பேசாம வா....சத்தம் போட்டா வெளியில துரத்திவிடுவாங்க...

இல்லப்பா.......இப்ப விசிட்டர்ஸ் நேரம்தானே.....நாங்க சத்தம் போடலாம்.....

இல்லடா......மற்றாக்களுக்கு தொந்தரவாகிப்போடும்.....அதுதான் பேசாம வா..

ம்...என்றவன்....அடிக்கடி தன் செருப்பைக்குனிந்து பார்த்துக்கொண்டான்....பின்னால் திரும்பியும் அதன் அழகைப் பார்க்கிறான்....டக்கென்று நின்றுவிட்டு ஒரு கையில ஒரு செருப்பைமட்டும் எடுத்து அதன் பின்பக்கம் திருப்பி ஊத்தை படிந்துவிட்டதா என பார்த்தான்..வாயால் ஊ.ஊ என்று ஊதிவிட்ட மீண்டும் காலில் மாட்டுகிறான்...

கோபாலுவின் இந்தச்செய்கை மாயாவிக்கு சிரிப்பை உண்டுபண்ணியது.......சிரித்துக்கொண்டு சொல்லுகிறான்....இது பழுதாய்ப்போனா உனக்கு அப்பா புதுசு வாங்கி தருவேன்....இப்ப வாடா......

கோபாலும் சிரித்துக்கொண்டு போகிறான்......அதோ தெரிகிறது அம்மாவின் வார்ட்டு....கிட்ட வந்தவுடன் ஓடிப்போகிறான்.....போனவன் அங்கிருந்து அப்பாவைப்பார்க்கிறான்...

வாப்பா.....கெதியா வாங்க.....

அமைதியான தூக்கம்....மங்கா.

ஒருதடவை அவளை எட்டத்தில் நின்றே பார்த்த மாயாவியின் கண்கள்....அந்த வார்ட்டில் அட்மிட்டாகயிருந்த அந்த 3 பிள்ளைகளின் தாய் இருந்த இடத்தைப்பார்க்கிறான்.......அங்கே அவள் கணவனுடன் வீட்டிற்குச்செல்ல தயாரிக்கொண்டிருந்தார் மாயாவி....கொஞ்சம் இரண்டடி முன்னுக்கு நடந்தவனாய்.....ஐ...யா.....ஐயா......

என்னங்க உங்களத்தான் அந்தஆள் கூப்பிடுகிறார் போல.....போய் என்னென்டு கேட்டிட்டு வாங்க...

அட ஆமா....ஏதும் உதவி கேட்கப்போறோனோ தெரியல்ல...பாவம் அவனும், அந்தப்பெடியனும் ........என்று கூறிக்கொண்டு அவன் அருகில் சென்றார் அந்தப்பெரியமனிதர்.....

ஈஸ்வரா........இஞ்சவாப்பா.....அழைத்த குரல் கேட்டுத் திரும்பி பார்த்தார் அந்தப்பெரிய மனிதர் ஈஸ்வரன்..என்னம்மா என மெதுவாக 4 விரல்களை உள்மடக்கி பெருவிரலை மட்டும் உயர்த்திக் கேட்டார் ஈஸ்வரன்...

அட இஞ்ச வாப்பா.......கிட்ட வா....ம்.என்றபடி மாயாவியைத்திரும்பிப் பார்க்க...மாயாவி....போங்கய்யா போயிட்டு வாங்க..பெரியம்மா கூப்பிடுறாங்க.....நான் இங்க நிற்கிறன்......போயி பேசிட்டு வாங்கய்யா....

ம்........இருங்க வாறன்.....

என்னம்மா இவ்வளவு நேரமும் இங்கதானே நின்றனான்..........இப்பபோய் கூப்பிடிறீங்களே.......

அட அவசரப்படாதேயடா என்று மெதுவாக அவர் காதருகில் ஏதோ கூறினார் ஈஸ்வரனின் தாயார்.....அதனைக்கேட்ட ஈஸ்வரனின் மனைவி வாசுகியும் மெல்லச்சரித்துக்கொண்டாள்....தூரத்தே நின்று எதுவும் புரியாது மனது ஒருநிலையில்லாது தவித்துக்கொண்டிருந்தான் மாயாவி......

மீண்டும் ஈஸ்வரன் மாயாவி பக்கம்......ம்.சொல்லுங்க.....ஏதாவது உதவி வேணுமா...? இப்ப உங்க மனைவிக்கு எப்படியிருக்கு...? வேறு யாருமே உதவிக்கில்லையா......?

ஒரு தடவை.....மகனைத்திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் அழுதான் மாயாவி....

அடடா ஏன் அழுகிறீங்க.....சொல்லுங்க....நான் ஏதும் உதவி பண்ணனுமா....? இனி நாங்க வரமாட்டோம்......இன்னைக்கு ராத்திரியே நம்ம ஊருக்கு இரத்தினபுரிக்குப்போகிறோம்......இனி உங்கள காணமாட்டோம்......கடவுளை நாங்க குடும்பமா வேண்டிக்கிறோம்.....இப்ப என்ன உதவி நான் செய்ய வேண்டும் என்று சொல்லுங்க.....கார் வரப்போகுது.........சொல்லிக்கொண்டிருக்கும் போதே....அவருடைய 3 சின்னப்பிள்ளைகளும் அப்பா என்று ஓடி வந்து கையையும் காலையும் கட்டிப்பிடித்தார்கள்......அவர்களோடு கார் டிறைவரும் கூட வந்தார்....

நீங்க சொல்லுங்க....

ஐயா....ஐயா......என்று தோளில போட்டிருந்த துண்டை எடுத்து வாயி்ற்கு கிட்ட வைத்து அழுதான்.தேம்பித்தேம்பி அழுதான் மாயாவி.....அவன் அழுவதைக்கண்டவுடன் கோபால் ஓடி வந்து அப்பா அப்பா என அவனை தட்டித்தட்டி கூப்பிட்டான்.....ஏனப்பா அழுவுறீங்க...

ஐயா.....எனக்கு இவன் ஒரேயொரு பையன்.....அன்னைக்கு அந்த அம்மா கட்டிலுக்கிட்ட இவன் நின்னுட்டு இருந்தப்போ.....அந்தம்மா சொன்னாங்க..............உங்க....ளுக்கு....உதவிக்கு வீட்டு வேலைக்கு சின்னப்பையன் வேணும் என்னு.....

அட ஆமா..ஆமா.....இப்ப கூட என் அம்மா கூப்பிட்டு அதைத்தான் சொன்னாங்க.....ஆமா அதுக்கு...

ஐயா......இவனை கூட்டிட்டுப்போங்கய்யா.....அவன் நல்லா கணக்கு எல்லாம் செய்வான்.....சயிக்கிள் எல்லாம் ஓட்டுவான்......ரொம்ப நல்ல பையன்.......எங்க விளையாடப்போனாலும்..வூட்டுக்கு டைமுக்கு வந்துவானய்யா......என்னோட கடையில கூட வேலை செய்தபழக்கமிருக்கய்யா....ஐயா....என விக்கி விக்கிஅழுதான்...

ஓ......அப்படியா...நாடியில் கைவைத்தார் ஈஸ்வரன்....யோசித்துவிட்டு கோபாலைப்பார்த்தார்.....அவருடைய பிள்ளைகள் அவர்கள் அம்மா இருந்த இடம் போக திரும்பிப்பார்க்கிறார்......இஞ்ச வாப்பா என்று கூப்பிட்டார்....கோபாலை.....

அவனோ.....எல்லாம் புரியாதுவிட்டாலும்....தன்னை தன் அப்பா மாயாவி யாருக்கோ தள்ளிவிடப்போகிறார் என்று மட்டும் உணர்ந்துகொண்டவனாய்...வேணாப்பா......நான் போகமாட்டேன்.....நா மாட்டேன்.....என்று மாயாவியின் கால்களை இறுக்கிப்பிடித்துக்கொண்டு தலையாட்டினான்......

ஈஸ்வரனோ......மாறிமாறி இருவரையும் பார்க்கிறார்.....பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களைக்கடந்து பிள்ளைகளும், தாயும், ஈஸ்வரனின் அம்மாவும், டிறைவர் கைகளில் பைகளையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள்......அப்போது அங்கே வந்த ஈஸ்வரனின் தாயார்......என்னவாம்... என்று கேட்க.....ஈஸ்வரனும் விசயத்தைச்சொல்ல மறுபேச்சுக்கிடமின்றி....அட நல்லதாகிப்போச்சு.....ம்ம்....கூட்டிக்கொண்டு வாற வழியைப்பாரு என்றுவிட்டு முதலில் பேசிக்கொண்டிருக்காம காசைக்கையில வை என்று மெதுவாக மகனிடம் கூறிவிட்டு அவ்விடததை விட்டு நகர்ந்தார்கள்....

கோபால் இந்த ஐயாகூட போங்க ..அப்பா வந்து கூட்டிவருவேன்......என்று மாயாவி சொல்ல.

அவனோ......

வேணாம்ப்பா நான் போகமாட்டேன்......நான் ஒருஇடமும் போகமாட்டேன்....எனக்கு அம்மாவும், நீங்களும் வேணும் யாரும் வேண்டாம் வேணாப்பா......என்னை விடுங்க நான் போகல்ல........நான் ஒண்ணுமே இனி கேட்கமாட்டேன் விளையாடப்போகமாட்டேன்..அடம்பிடிச்சு கத்தமாட்டேன்......என்னை அவங்ககூட அனுப்பாதிங்கப்பா...அப்பா...நான் போகல்ல......எனக்கு நீங்கதான் வேணும்....ப்பா.......அம்மா........அம்.........அம்மா.......

அழுதான்......பணக்கஷ்டத்தின் கொடுமையில் தவிக்கும் மாயாவி......மகனை அடக்கு வைக்கத்துணிந்தான்.....அவன் எடுத்த எந்த முயற்சியும் அவனுக்கு இடமளிக்கவில்லை.....ஏழையின் பாரம் இறங்க......இறைவன் வழிவகுக்கவில்லை.....எதற்கும் ஆசைப்படாத மனசு இன்று காலத்தின் கொடுமையில் ஒரு உயிரை விலைபேசுகிறது.....பார்ப்போர் நெஞ்சை உருக்கி கசக்கிப்பிழியும் காட்சியது.....இனி தாமத்தால் எங்கே கைநழுவிப்போய் விடுமோ என சிந்தித்தவாறு ஈஸ்வரன்......மடமடவென பொக்கட்டினுள் கையை விட்டு ரூபா.......1500.00 எடுத்து மாயாவியின் கைகளில் வைத்தான்..
மாசாமாசம் உங்களுக்கு பணம் கிடைக்க வழி பண்ணுறன்........உங்க வீட்டு விலாசம்....

பையனுக்குத் தெரியுமய்யா....என ஐயா என.....பணத்தையும் வாங்கிக்கொண்டு காலில் விழுக்கிறான்.....,ஈஸ்வரனின் பாதங்களை கண்ணீர் கொண்டு கழுவுகிறான்.....

மாயாவியைத் தொடமலே எழும்புங்க.இது என்ன வேலை.......எழும்புங்க.....சொல்லுறன்.எழும்புகிறான்.....மாயாவி அழுகிறான்...

கோபாலோ... நிலத்திலே குந்தியிருந்து கண்களைப்பொத்திக்கொண்டு அழுகிறான்....அவன் மனசுக்கு கடவுளை எல்லாம் கேள்வி கேட்த்தெரியவில்லை...அம்மா....அம்மா என்று மட்டுமே திரும்பத்திரும்பத் சொல்லி அழுதான்....

மாயாவி அவன் தோள்களைப்பிடித்து தூக்கிஎழும்பவைத்தான்......அவன் மூக்கால் வழியும் மூக்கு நீரை தன் தோள் துண்டுகொண்டு துடைத்துவிட்டு.......என்ர ராசா........கோபாலு....இந்த ஐயா ரொம்ப நல்லவரய்யா.....உன்னை நல்லா வச்சு பார்ப்பாங்க.இப்ப அம்மாக்கு உடம்பக்கு முடியல்ல....வாற மாசம் உன்னை இங்க கூட்டிவருவேன்.ஒவ்வொரு மாசமும் நான் கூட்டிவருவேனப்பா.......அழுவாதேடா...

அழுகிறான்.....போ.....என்னோட பேசாதிங்க.....என்.அம்.மா...அம்மா வேணும்.......நீங்க நல்லமில்ல போங்கோ...எனறு அப்பாவை தள்ளிவிட்டு மீண்டும் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதான்.....அந்த இடத்தில இருந்தால் எங்கே மனம் மாறிவிடுமோ என எண்ணியவாறு ஈஸ்வரனும் கோபாலை கையால் கிட்டப்போய் தொட்டு அவன் ஒரு கையை பிடித்தார்......நிமிர்ந்து பார்த்தான்...ஈஸ்வரனின் பிடியில் கை தளர்த்திக்கொண்டு மீண்டும் மாயாவிடம் அப்.....பா நான் போகமாட்டேன்......அவங்கள போகச்சொல்லுங்க....நான் போக மாட்டேன்....

இரு மனங்களின் வேதனைகள்.......உடல் மட்டுமிருக்க உயிருக்காகப்போராடும் இன்னுமொரு அவலநிலையில் மங்கா.....இவர்களுக்கடையில் தேடிவந்த வேலை சுலபமாகிவிட்டநினைப்பில் ஈஸ்வரன்......

இனியும் தாமதித்தால் நல்லதல்ல என்றபடி....வேறு என்ன..இந்தாப்பா இதுதான் என்னோட அட்ரஸ்......இரத்தினபுரியில கடை வச்சிருக்கேன்....வீட்டு வேலைக்கு கடைக்கு அங்க இங்க போக கை உதவிக்கு ஒரு பையன் தேவை என்றிருந்தேன்......சரி என்ன செய்வது.......கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரி அளந்துவைக்கல்லையே.....

சரி நான் இவனையும் கூட்டிட்டுப்போறன்.......

இந்தாங்கய்யா.....இதில அவனோட உடுப்புகளிருக்கய்யா....நான் பணம் சேர்ந்ததும் பையனை கூட்டிவரவருவேனய்யா......

சரி அதை அவனிட்டையே குடப்பா.......சாமியை வேண்டிக்கிறன்.....அவங்க அம்மா சுகம்பெற....

அழுதான் கோபால்.....அம்.மா.அம்மாவைப்பார்க்கவேணும்......யாருமே அவன் பேச்சுக்கு இடமளிக்கவில்லை.மனமிரங்கவில்லை.......மாயாவி பாவம் என்ன செய்வான்.....அழுகிறான்.ஐயோ.....நான் பாவம் செய்கிறேனே என்று அழுதான்.......மகனை கட்டிப்பிடித்து கண்களைத் துடைத்துவிட்டு முத்தமிடுகிறான்...தலையைத்தடவிவிடுகிறான்...மீண்டும் ஈஸ்வரன் கையில கொடுக்கிறான் கோபாலை...மயாவி.

தொடரும்....
----------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.thamilworld.com

Friday, November 14, 2008

மனசாட்சி.....7

மங்காவின் நிலையைப்பார்த்ததும், மாயாவிக்கு கவலைஅதிகமாகியது..நா வறண்டது போல உணர்வில் வார்த்தை வெளி வராது.....மெல்லத்திரண்டு தொண்டைக்குள் அடைத்து வந்த சோக உருண்டைகளை எச்சில் இட்டு விழுங்கினான்....மாயாவியின் கை பட்ட உஷ்ணத்தினால் மங்காவும் மெல்ல மெல்ல இமைகளை விரித்தாள், கண்ணெதிரே மாயாவி மங்கலாகத் தெரிந்தான்.....

அவள் கண்கள் கலங்கி நீர் வழிந்து, அவள் உடல்வெப்பத்தால் தடையங்களாக அப்படியேயிருக்க......மங்காவின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் எனத் தன் மனத்திற்கு ஆணிகொண்டு அறைந்தவேதனையை உணர்ந்தான். எதுவுமே பேசாது......இருந்தவனை.....கையை மெதுவாக அசைத்து உயர்த்தி மகனைக்கேட்டாள் மங்கா...

இருக்கிறான்.....ஸ்கூலுக்கு அனுப்பிச்சிருக்கேன்....

தேய்பிறையானாலும் நிலவிலும் ஒளியிருப்பதுபோல மங்கா மெல்லச்சிரித்தாள்.....தனக்கு பொய் சொல்லுகிறார் மாயாவி என்றதை நன்றாக உணர்ந்து கொண்டாள்....தன் நாக்கினால் அடிக்கடி உதட்டை நனைத்துக்கொண்டாள்.....அவளுதடு காய்ந்து வெள்ளைத்தோலுரிந்தது போலயிருந்தது....பார்க்கவே பரிதாபமான காட்சியது...

இனியும் அங்கிருக்காமல்.....தான் திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறுகிறான்....மாயாவி.

என்ன தம்பி அவங்க உடல்நிலை எப்படியிருக்கு...? இங்க வச்சிருக்காம டவுண் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போங்க.....எப்படியும் அங்க மருந்துவசதிகள் இருக்கும்.....ஆனா போக 300, 400 ஆவது செலவாகும்.....ம்....சரியிங்க என்று இடைமறித்து அறுதல்கூறியவருக்கு தலையாட்டி நன்றி கூறிவிட்டு கோபாலிடம் செல்ல.அப்பா வருவதைக்கண்டு அவனே எழுந்து ஓடிவர....

அப்பா அம்மாவை நான் பார்க்கல்ல.....நான் போயி பார்த்திட்டு வாறன்......நேற்றும் நான் பார்க்கல்ல...இன்னைக்கும் பார்க்கல்ல.....நான் அம்மாவைப்பாத்திட்டு வாறனப்பா.....விடுங்க கையை...

மாயாவியின் கைப்பிடியிலிருந்து உதறியடித்தபடி ஓடிப்போய் மங்காவின் தனிப்பட்ட திரையை விலத்திக்கொண்டு உள் நுழைந்தான் கோபால்........

அவசரமாக ஓடிச்சென்ற தாதியும், மாயாவியும் அவனை பிடித்திழுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.....என்னப்பா பையனை வளர்த்து வச்சிருக்கிறாய்......இந்த மாதிரி முரண்டு பிடிக்கிறானே.......என்ர பிள்ளையாயிருக்கட்டும் இன்னேரம் நாலு அறைவிட்டிருப்பேன்.....ஒரு சொல்லு பேச்சு கேட்காத பையனாயிருக்கான்....

சிலபேர் சும்மாயிருந்தாலும், எரிகிற நெருப்பில எண்ணெய் ஊத்துகிற மொழி போல நேர்சின் பேச்சு.......இதைக்கேட்ட மாயாவிக்கும் கடுப்பேறியது..சளார் என அவன் கன்னத்தைப்பொத்தி ஒரு அறை.....

அதைப்பாராட்டி அப்படிச் சாத்தவேணும்.என்ற நேர்சின் சபாஷ்....இத்தனைக்கும் நடுவில்...

அம்மா.......எனக் கதறித்துடித்து முகத்தை இரண்டுகைகளாலும் பொத்தி கீழே குந்தியிருந்து அழுதான் கோபால்....அந்த வைத்திய பிரிவு எல்லோரையும் சற்று திரும்பி பார்க்கவைத்தது அந்தக்காட்சி.....ஏன் மங்காவின் காதிலும் அந்தக்குரல் ஒலித்தது....ஆனால் அவளால் எதுவும் பேசமுடியாது கண்களைத்திறந்து மூடும் போது வழிந்தோடும் கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது...

அறைந்தபின்புதான் மாயாவிக்கு அடச்சே....என்ன காரியம் செய்துட்டன்.பாவம் புள்ள.அப்படி என்னத்தக்கேட்டுப்புட்டான்......எத்தனை ஆசைகளை தனக்குள்ளே புதைச்சு வச்சு.ஒருநாளாவது அந்தப்பிள்ளைங்க மாதிரி தனக்கு அதுவேணும் இது வேணும் என்று கேட்டிருப்பானா இவன்...அட நான் ஏன் இப்ப மிருகம்போல ஆகுறன்.....கடவுளே என்னப்பா உன் சோதனை.....

வாய்யா.......நாம போவோம்.....

போ நான் வரமாட்டன் போ......

அட வாப்பா.....அப்பாதானே அடிச்சன்.....வாப்பா........கோபாலு நான் பிள்ளைக்கு ஐஸ்பழம் வாங்கித்தாறன் வாப்பா.....எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்கப்பா......

நான் வரல்ல நீங்க போங்கோ.....அடம்பிடிக்கிறான் மீண்டும்.......இவனை இப்படியே விட்டிட்டும் போகமுடியாது....அதனால மாயாவியும் எவ்வளவோ நேர கெஞ்சல்களுக்குப்பின்பு ஒருவாறு தன் அழுகையின் குரலை தாழ்த்திக்கொண்டான்.....இப்போது கூட அவன் சமாதானம் அடைந்ததெல்லாம் பல மாதங்களின் பின்பு ஐஸ்பழம் குடிக்கும் ஆசையில்...

சொன்னபடியே வாங்கிக்கொடுத்தே கோபாலுவையும் கூட்டிக்கொண்டு சாயந்தரம் 4 மணிக்கெல்லாம் கந்தவர்மன் ஐயா வீட்டிற்கச்சென்றான்.....வீட்டுவாசலை கூட்டிக்கொண்டு இருந்த மகேஸ்வரி அம்மாவைக்கண்டவுடன்......

அம்மா.......நான் மாயாவியம்மா....

குரல்கேட்டு...உள் கொழுக்கி போட்டிருந்த கேட்டைத்திறந்து கொண்டு வா மாயாவி வா........என்னப்பா பிரச்சனை...? கொஞ்சம் சொல்லன்.....என்னெண்டுதான் கேட்டுப்பார்ப்போமே...பிறர் கதை கேட்கும் ஆவலில்.....

தன்மனைவி மங்கா கடந்த 5 நாட்களாக படுத்தபடுக்கையாக இருப்பதும், அதற்குரிய வைத்திய செலவிற்கு பணமாக ரூபா 900 அவசரமாகத்தேவைப்படுவதையும் கண் கலங்க உள்ளத்து வேதனையோடு சொல்லிமுடித்தான்....

அம்மா அதற்காகத்தான் ஐயா வரமுதலே இங்க வந்திருக்கிறன்...

ம்..அட நீ என்னப்பா....மக்கு பயனாட்டம்.....அந்த மனுசனிட்ட காசு கறப்பதென்றால் கல்லுல நாருரிக்கிறதுபோல.......நான் நினைக்கல்ல மனுசன் தரும் என்று......பொறு வாறன் என்ற மகேஸ்வரிஅம்மா உள்ளே சென்று ரூபா 100 தாளுடன் திரும்பி வந்தார்.

இந்தாப்பா யானைப்பசிக்கு சோளப்பொரி என்று நினைக்காம இதை வாங்கிக்கோ.....அவரைப்பார்த்து நேரத்தை வீணாக்காம வேறு யாரிட்டையாச்சும் கேட்டுப்பார்....நீ தேங்காய் பறிச்சுக்கொடுக்கிற ஜீவா மாஸ்டரிட்டையும் கேட்டுப்பார்....யாருமே 900 தரமாட்டாங்க......உலகம் அப்படிக்கிடக்கு......கூட இருக்கிற உறவுகளே கும்மாளம் கொட்டிட்டு அங்கால போனப்புறம் கஷ்டமோ, நஷ்டமோ வந்தாக்கூட திரும்பியும் பார்க்கமாட்டாங்கப்பா.....இதுதான் இன்றைய உலகம்.....

அம்மா...நான் அப்படியில்லம்மா......நாங்க சாகுறவரைக்கும் நாயா இங்கேயே காலம் பூராவும் உங்க காலடியில கிடப்போம்....நம்புங்க அம்மா.....இந்தப்பிள்ளையப்பாருங்கம்மா......எங்க இவன் அவன் அம்மாவை இழந்திருவானோ என்று ...

சே.சே...அப்படி எதுவும் நடக்காது......நீ யாருக்கும் அநியாயம் செய்யாதனீ. ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.....வீணாக மனதைக் குழப்பாமல் போய் ஆகவேண்டியதைப்பாரப்பா........

அம்மா மங்கேஸ்வரி கொடுத்த 100 ரூபாவையும் கும்புடு போட்டு வாங்கி மடித்து தன் பாக்கெட்டினுள் வைத்துக்கொண்டு........மகனையும் கூட்டிக்கொண்டு நேரே தன் வீட்டிற்குப்போனான்.....இனியும் யாரையும் கேட்டுப்பலனில்லை........டவுணில இருக்கும் வைத்தியசாலைக்கு மங்காவைகூட்டிச்செல்லும் அளவிற்கு அவனிடம் பணமும் இல்லை....என்ன நினைத்தானோ என்னவோ.....வீட்டிற்குள் சென்றவன்......கோபாலுவின் பாடசாலை பையினுள் அவன் உடுப்புகளை அள்ளி திணித்தான்.......என்ன எண்ணிப்பார்த்தால்.....3 நல்ல உடுப்புகளுக்கும் அதிகமிருக்காது......

மாயாவி அடித்த தழும்பு இன்னும் கன்னத்தில் விரலாக பதிவாகயிருந்தது......எதையும் அறியாது இன்னும் குடிச்சு முடிந்த ஈர ஐஸ்பழக்குச்சியை சப்பிக்கொண்டு இருந்தான் கோபால்.....

கோபாலு.......போயி.......போயி....அம்மம்மாக்கு சொல்லிட்டுவா ராசா....

ஏனப்பா.நாங்க எங்க போறம்...?

நான் சொல்லுறன்......முதல்ல அந்தப்பெரியவங்களுக்கு சொல்லிட்டு வாப்பா.....அவசரத்திற்கு அந்த அம்மா உனக்கு ஊட்டி வளர்த்தவங்க....அதை நாம மறக்கக் கூடாதுப்பா.....சொந்த உறவாக இல்லாவிட்டாலும், அதுக்கும் மேலாக அந்தக்காலணியில அவங்களும்...

சரிப்பா........ஆனா சொல்லுங்க.....நாங்க எங்க போறோம்...?

எல்லாம் சொல்லுறன் நீபோய் சொல்லிட்டு வா.....

அவங்க அம்மம்மா கேட்டா என்ன நான் சொல்ல....?

தூரப்போறன்.....திரும்பி அம்மாகூட வருவேன் என்றதை மட்டும் சொல்லு....

ம்..சரிப்பா.....

திரும்பி வந்த கோபாலுவுடன் மீண்டும் பெரியாஸ்பத்திரி நோக்கி அவன் சயிக்கிள் மிதித்தது....

தொடரும்......(வாழ்க்கைக்கு வழி)


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.

மனசாட்சி.....6

அப்பா...எழுந்திரிங்க....அப்பா.......அம்மாகிட்டப்போகனுமப்பா... அப்பா....எனக்குப்பசிக்குதப்பா....
அடப்போடா அங்கால....

கண்ணைத்திறக்காம ஒருகையால மகனைத்தள்ளிவிட்டான் மாயாவி. அடிக்கடி, ராத்திரி நேரங்களில் மாயாவி குடித்துவிட்டு காலையில எழும்பஏலாமல் இருக்கும்போது மங்கா தண்ணீர் முகத்தில் தெளித்து எழுப்பிவிடுவாள். இதனை அறிந்த கோபாலும் தன் அம்மா செய்வதுபோல தகரத்தினால் மூடியிருந்த ஒருவாளியினுள் (bucket) இருந்த தண்ணீரை இருகைகளாலும் ஏந்தி வந்து மாயாவியின் முகத்தில் தெளித்தான்....

அடி......அடியேய்....மங்கா...விடுடி....வேணாம்டி.....நா ....

இதனைப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கோபால்....இருகைகளையும் கொட்டி துள்ளித்துள்ளி சிரித்தான்...

ஹி...ஹி..ஹி...ஐயோ....அப்பா.அம்மா இங்கில்ல....மறந்துட்டீங்களா...

ஆ.......அட....இம்முட்டுநேரம் தூங்கிட்டேனா...?

மாயாவி...மாயாவி.....அதே காலணியில வசிக்கும் சுந்தரபாண்டியனின் குரலில் மாயாவியின் பெயர் கொண்ட அழைப்பு...

சுந்தரபாண்டியன்......பாண்டியண்ணன் என்று யாவராலும் அன்பாக அழைக்கப்படும் நல்ல தீர்ப்புச்சொல்லும் ஒரு பெரியவர்போலவே அந்தக்காலணி மக்களால் கெளரவிக்கப்பட்ட நபர்.

அதிகமில்லை..ஆனாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது சாதாரணவசதிபடைத்தவர் என்றும் கூறலாம். அவரிடம் மற்றவர்களுக்கு உதவுமுகமாக அதிக வருமானமாக இருப்பது அவருடைய அன்பான பேச்சு...அவர் வருமானமாகப்பெறுவது சிலபேரின் திட்டுக்கள்.

எதுஎப்படியோ..அன்பான அண்ணா பாண்டியன்.

இதோ வந்திட்டேன்ணா....பாய்ஞ்சடித்துக்கொண்டு கட்டியிருந்த லுங்கியை சரியாகக் கட்டிக்கொண்டு வாசலைநோக்கி ஓடிப்போனான் மாயாவி...

ஏன்டா...ராத்திரி குடிச்சியாக்கும்...

அது வந்தண்ணா....உள்ளவாங்கண்ணா....

ஆமா பெரிய வூடு பாரு உள்ள வாறதிற்கு....

சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார்.....

யாருடைய ஞாபகக்கதிரையோ என்னவோ பின்னல்கள் அறுந்த நிலையில வீசப்பட்டு வீதியில இருந்த கதிரையை வீட்டிற்கு கொண்டுவந்து தன் கைத்திறமையால் கயிறுபோட்டுப் பின்னி அழகாக வைத்திருக்கும் அதனை பாண்டியண்ணாவிற்கு இருக்கக் கொடுத்தான்.

இதி உட்காருங்கண்ணா.....இதோ வாய்அலம்பிட்டு வந்துடுறன்..

ம்ம்....நான் போனும் சீக்கிரம் வாப்பா....

சொல்லுங்கண்ணா....

ஏன்யா மாயாவி....நீ திருந்துற எண்ணமேயில்லையாப்பா...? இப்படி குடிச்சிப்புட்டு கிடந்தா உன் வூட்டில அடுப்பெரியுமாப்பா...? நான் இன்னைக்குத்தான் அறிஞ்சேன் நம்ம மங்கா ஆசுப்பத்திரியிலையாம்ண்ணு...
நீ வேற இப்படி குடிச்சிபுட்டுக் கிடந்தா அவவை யாரு கவனிக்கிறது...? ஏன்டா

உனக்கு கொஞ்சம் கூட புத்தியிலையாப்பா.....உனக்கு ஒரு பையன் வேற அவனையாவது ஒரு ஆளாக்கிப் பார்க்கவேணாமா...? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இதே பழக்கத்தில கிடப்பாய்...?

இல்லண்ணா வந்து கவ...லையா..

என்ன.கவலையா..என்ன பொல்லாத கவலை....?
அட குடிப்பா யாரு வேணாம்ண்ணது.....ஆனா...உன் நிலமையை எண்ணிப்பாரு...? ஒருநாள் சோற்றுக்கே தாளம் போடுற நேரத்தில இது உனக்குத் தேவையா...முதல்ல....பணத்தை சேமிச்சுப்பழகு.அப்புறமா முன்னேறப்பழகு...அதற்கப்புறமா உன் இஷ்டம்....நான் இப்ப வந்தது.....மங்காவைப்பார்க்கப்போனேன். அவங்க முதல்ல விடல்ல.அப்புறமா அவ அண்ணன் எண்டு சொல்லிப் போய் பார்த்திட்டு வந்தேன்...

நான் இனித்தான் போகனுமண்ணா .தூங்கிட்டேன்....(தயங்கித் தயங்கிக் கூறினான்..)

ம்.....ம்...அது தெரிஞ்சுதான் அங்க இருந்து நேர இங்க வந்தன்...ஆமா என்னமோ ஊசி போடவேணும்முண்ணுசொன்னாங்க....ஒழுங்கு பண்ணிட்டியா...?

தலையைச்சொரிந்த படி.....இல்லைண்ணா.....ஐயாகிட்ட கேட்டிருக்கேன், இன்னைக்கு சாயந்தரம் வரச்சொல்லியிருக்கிறாரு...

ஓ....அப்படியா...ரொம்ப நல்லதப்பா.மறந்திடாம ஐயாவைப்போய் பாரு...நம்மால முடிஞ்ச உதவியை செய்வோமுல்ல......எதுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அலுவலைப்பாரு மாயாவி...

ஆகட்டும் அண்ணா....

ம்ம்.....நேரம் 9 ஆகப்போகுது....இதில 50 ரூபாயிருக்கு.....நீ வேற 2 நாளா கடையத்திறக்கல்ல எண்டு சொன்னாங்க.செலவுக்கு வச்சிரு....பயனுக்கு சாப்பாடு வாங்கிக்கொடு......நான் அப்புறமா வந்து பார்க்கிறன். போயி மறக்காம ஐயாவைப்பாருப்பா....என்னமோ அந்த அம்மாளுதான் மங்காவைக் காப்பாற்றனும்...

அவ்விடத்தைவிட்டு விடைபெற்றுச்சென்றார் அண்ணன் பாண்டியன்.

அவசரவசமாக உடைமாற்றிக்கொண்டு கோபாலையும் கூட்டிக்கொண்டு கடைக்குப்போய் இருவரும் சாப்பிட்டார்கள். அப்படியே தன் கடைப்பக்கம் சென்றான். கடையைத்திறந்து அன்றைய வருமானத்தை எண்ணாமலே தெரிந்துகொண்டான். 40 ற்கும் அதிகமில்லை.

நேரம் மதியம்...ஆஸ்பத்திரி வாசலில் ஆங்காங்கே சீவப்பட்ட இளநீர் கோம்பைகளும்,சாப்பிட்டு வீசிஎறியப்பட்ட வாழையிலைகளும், அதனைச் சூழ்ந்து தெருநாய்களும், கா...கா...எனக்கத்திக்கொண்டு இருப்பதை பகிர்ந்துண்ணும் காக்கைகளும், எந்தப்பயணிகள் வருவார்கள் எனக்காத்துக்கொண்டிருக்கும் ஆட்டோக்களும்....இது மதியவேளை பார்வையாளர்கள் நேரம் என்று காட்சிகள் படம் பிடித்துச்சொல்லிக்கொண்டிருந்தன.....

மொழிகள் வித்தியாசமின்றி, மதங்கள் வித்தியாசமின்றி உடலும், உயிரும் என்ற ரீதியில் ஒன்றாகக்கூடும் அந்த ஆஸ்பத்திரியில் மாயாவியும் கோபாலும் நோயாளர் பிரிவுக்குச்சென்று மங்காவை பார்க்கச்சென்றார்கள்.....

பார்க்கமுடியவில்லை......மங்காவைச்சூழ்ந்து 4 டாக்டர்மார்கள்....அவள் மூக்கிற்கு செயற்கை சுவாசம் கொடுத்தபடி....செலைன் இரண்டுகைகளிலும் ஏறிய நிலை.....அவள் விழி மேல்நோக்கியிருக்க....பெருமூச்சின் சத்தம் அதிகரிக்க....உடனடிச்சிகிச்சை மேற்கொண்டுஇருந்தார்கள்...

இக்காட்சியைக்கண்ட கோபால் அம்மா.அம்மா எனக் கதறியழத்தொடங்கினான்....அவன் வாயை பொத்துகிறான் மாயாவி.பின்னால திரும்பிப் பார்க்கிறான்...இன்னும் 4, 5 பேர் கூட்டமாக அவனைக்கண்ட...ஒரு சிலர் ....உங்க மனைவிதானேப்பா....

ஆ...ஆமா...

அடப்பாவம் அந்தப்பொண்ணு.ரொம்ப நேரமா பெரிசா கதறிச்சு..ஆனா யாருமே போகல்ல...அப்புறமா இப்பதான் பார்க்கிறன்.......ஏதோ ட்ரீட்மென்ட்....கொடுக்கிறாங்க....

அடக்கடவுளே.அப்படியா...?

அட ஆமாப்பா.....எல்லா மனசுகளும் ஒரே மாதிரியில்லப்பா.....ஏழைங்களுக்கு ஒரு மாதிரியாகவும், கொஞ்சம் வசதி படைத்தவங்களுக்கு வேறு மாதிரியாகவும் பிரிவு பார்த்தே வைத்தியம் பார்க்கிறாங்க.....அங்க பாருங்க...இங்க வந்த இடத்தில அவங்க அம்மா விழுந்திட்டாங்களாம். இன்னைக்கு அவங்க தங்கட ஊருக்குப் போவதாக இருக்காங்க....என்னமா நேர்ஸ் எல்லாம் போயி அவங்கள சுற்றி நின்னு வழியிறாங்க...

மெதுவாக திரும்பிப் பார்த்தான்....அந்த 3 பிள்ளைகளோடு வந்த தந்தை..
ம்.அவர்கள்தான்.....

மங்காவைச் சுற்றியிருந்த அனைவரும் விடைபெற்றனர்....ஒரு தாதியிடம் போய் பார்க்கலாமா எனக் கேட்டுக்கொண்டான்....மாயாவி...

அவளும் அதற்கு பையனை விட்டிட்டுப்போய் பாருங்க என்றாள்..

அதன்படியே மாயாவி அழும் மகனுக்கு ஆறுதல் கூறிவிட்டு.மங்காவின் அருகில் சென்றான்....

தொடரும்....

-------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி

www.nilafm.com

Monday, July 14, 2008

மனசாட்சி.....5

ஏழையின் மனவானிலே ஓலைக்குடிசையும், எதிர்பார்ப்புக்கனவுகளுமே உலகம், இதில் மாயாவி மட்டும் விதிவிலக்கா என்ன....?
கந்தவர்மன் வருமட்டும் அவர் வீட்டு வாசலில் தவமாய்க் கிடந்தான்.அவரும் சாயந்தரம் வேலைவிட்டு வீட்டுக்கும் வரும் போது தூரத்தே கண்டுகொண்டார் அங்கே நிற்பது மாயாவிதான் என்று.....

வரும் போது கந்தவர்மன் வாங்கி வந்த காய்கறிகளை ஒருபக்கமாக எடுத்து மாயாவிடம் கொடுத்து அம்மாட்ட கொடு என்று கண்ணால ஜாடை செய்தார்...பின்பு மாயாவியைப்பார்த்து...

என்ன இந்தப்பக்கம் மாயாவி....? அம்மா ஏதும் வரச்சொன்னாங்களோ....ஏதும்வேலை வெட்டி பார்தனியோ.

இல்லைங்கய்யா...

அப்ப ஏனப்பா இந்த கொடிய வெயிலில கருவாடுபோல காய்ஞ்சு நிற்கிறாய்...?

ஐயா அது வந்துங்க...ஐயா...அது...

ம்.நீ விசயத்தைச் சொல்லுறதுக்குள்ள....பொழுது விடிந்திடும்...போ..போ.போயிட்டு நாளைக்கு வாவா.... என்னான்னு பார்க்கலாம்...சரியோ..

ஐயா.வந்துங்க........

அட என்னடா நீ வந்து போயி....முட்டாள் மாதிரி பேசுறாய்...எப்பத்தான் நிறுத்தப்போறீயோ..சரி சரி ரூபவாஹினி செய்தி ( இலங்கையின் தொலைக்காட்சிப்பிபிரிவில் ஒன்று ) தமிழ் செய்தி தொடங்கப்போகுது நீ போயிட்டு நாளைக்கு வா என்ன.....

சரியிங்க ஐயா.....

வந்தவன் மனதில, உள்ள பாரச்சுமைகளை இறக்கி வைத்து உதவி கேட்க நினைத்தவன் யாவுமே கை கூடாமல் விடைபெற்றுச் சென்றான் அவன்..இனி எங்க போவது...? யாரைக்கேட்பது...? மீண்டும் அரச வைத்தியசாலைநோக்கிச் சென்றான். எப்படியும் மருந்துவேண்டிக் கொண்டு வருவான் என்ற நினைப்பில் அந்த இடத்தில் வேறு ஒரு தாதி..( நேர்ஸ்)

அடடே வாங்க....இந்த அம்மா புருஷனா....

ஆமாங்க....

றிப்போர்ட்டில 3 இன்ஜெக்ஸன் போட எழுதியிருக்கே.....வாங்கி வந்திருக்கிறீங்களா.....

இல்லைங்க.......அது போடலைன்னா என்னாகுமுங்க.....

அப்ப வாங்கலையா....? ம்......அது போடலைன்னா உயிராபத்து..

ஐயோ..அப்படீங்களா.....

மீண்டும் மங்கா பக்கம் சென்றான்.....இன்று மங்காவிற்கு நெட்போட்டு அவ இருந்த இடத்தை தனியாக வைத்திருந்தார்கள்....மாயாவியும் மங்கா அருகில் செல்ல அதற்குரிய பாதுகாப்பாக வாய்க்கு பாதுகாப்பு மூடியும், கையுறையும் கொடுத்து அணியும்படி தாதி சொல்ல அதன்படி அவனும் எல்லாம் போட்டவாறு அவளருகே சென்று பார்த்தான். அவள் முகம் வாடியிருந்தது......கண்கள் சிவந்திருந்தது. அவள் உதடும் கறுத்து படைபடையாக தோல் உரிந்ததுபோலவும், உடலும் உருக்குலைந்து மெலிந்தும் காணப்பட்டாள். அவனால் பேசக்கூட முடியவில்லை. ஆறுதலாக இரண்டு வார்த்தை பேச ஆசைப்பட்டான் ஆனாலும் முடியவில்லை. அவன் கண்கள் உருண்டு கண்ணீர் முத்து முத்தாக கொட்டியது.....தலையைத்தடவி விட்டபடி.....நெட்டைத்திறந்து வெளியே போகத் திரும்பியவன் அவன் டீ சேர்ட்டை இழுத்துப்பிடிப்பதை உணர்ந்து திரும்பினான்.....மங்காவின் கைபிடியில் அவன் சேர்ட்.....

மீண்டும் என்னம்மா என்றது போல கேட்டான்......அவள் கையை பதித்துக்காட்டி தன்மகன் எங்கே என்றாள்...?

ஓ.....கோபாலுவா.....,?

மெதுவாகத்தலையை மேலும் கீழுமாக ஆட்டி ஆம் என்றாள்....கண்கள் கலங்க..

அவன் விளையாடப்போயிருக்கான்.....நாளைக்கு கூட்டியாறன்....என்று சொன்னான்...

பிள்ள சாப்பிட்டானா....?

ம்...சாப்பிட்டான்...

நீங்க.....

ம்....சாப்பிட்டேன்...நீ எதுக்கும் கவலைப்படாதே என்ன......நான் போயிட்டு நாளைக் காலைல கோபாலோட வாறன் சரியா.......என்று மீண்டும் அவள் தலையைத்தடவி விட்டு அவள் போர்வையை சரியாக போர்த்து பக்கவாட்டில் சொருகிவிட்டு.....கலங்கிய கண்களோடு அவ்விடத்தை விட்டு அகன்றான்...

அவனுக்கு என்ன செய்வது யாரைக்கேட்பது எதுவுமே புரியவில்லை. அவன் வரும்போது மகனுக்கு கடையில் இடியப்பமும் சம்பலும் வேண்டிக்கொண்டு தன் ஓலைக்குடிசைக்கு வந்தான் மாயாவி....வரும் போதே....

என்னாலு மாயாவி....இப்பல்லாம் உன்ன காணக்கிடைக்கல்ல.....என்றான் அந்த தெருவில இருக்கும் வசதியற்றோர் வாழ்வில் கறுப்பன் என்கிற இவன்.

நானு ஆசுப்பத்திரியில மங்காவை வச்சிருக்கன் போயி பாத்துட்டு வந்தனா....

ஓ......என்னாச்சு மங்காக்கு...? நம்மாக்களுக்கு தெரியாதாக்கும்......

சும்மா காச்சல்தான்.சரியாப்போடும்....

அட அப்படியா......ஆமா நான் போத்தல்கடைபக்கம் போகவேணும், என்கூட வாறீயா....

அவனுக்கும் கறுப்பன்கூட போய் பழங்கள்ளு குடிச்சால்தான் தன் கவலைகளுக்கு நல்லம் எனத்தோன்றியது. அதனால..உடனே வாறன் நானும்....கோபாலுக்கு சாப்பிடக்கொடுத்துட்டு இதோ வந்திடிறன் என்று கூறிக்கொண்டு.....மகனைக்கூப்பிட்டு பார்த்தான்...அவன் அங்கிட்டு வச்சிட்டுப்போங்கப்பா.இப்ப வரமுடியாது என்று விளையாட்டின் ஆர்வத்தால சொன்னான்.

சரிப்பா..அப்பா வர நேரமாச்சா......நீ பயப்பிடாதே என்ன......சாப்பிடு...என்று கூறி.கறுப்பன்கூடச் சென்றான் மாயாவி.

நேரம் இரவு 8 மணி.இப்போது அவன் மனதில 10 பேரின் மனத்தைரியம் வந்ததுபோல ஒரு உற்சாகம்......இந்த உசாரோட ஐயாட்ட பணம் கேட்பது என்ற முடிவோடு...கறுப்பன் நன்றாகக் குடித்தபடியால அவனை நேரே அவன் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு... மீண்டும் கந்தவர்மன் வீடுநோக்கி...சயிக்கிளை மிதிக்கிறான்.
வீட்டு வாசலில்.....தன் சயிக்கிள் பெல்லை அழுத்தினான்.....கந்தவர்மன் வீட்டு நாய் சாதாரணமாக மாயாவி வந்தால் குரைக்காது...இன்று அவன் குடிச்சிட்டு வந்ததைப்பார்த்துவிட்டு குரைத்துக்கொண்டு நின்றது...

வாசலில் லைட்டைப்போட்டுவிட்டு யாரப்பா இந்நேரத்தில.....

ஐயா.நானுங்க.மாயாவி......

அட நீயா....என்ன....? என்ன வேணும் சொல்லு...? வாசலில் இருந்தே உரக்கக் கத்திக்கேட்டார்....?

ஐயா.......கேட்டைக்கொஞ்சம் திறவுங்கய்யா....சொல்லுறன்....

என்ன இந்த மாயாவி என்னைக்கும் இல்லாம....என்று மனசுக்குள் நினைத்தவாறு கேட்டை திறக்க.....மகேஸ்வரி நாயை பிடிச்சு பின்பக்கமாக துரத்திவிட்டு இருவருமாக அவனருகில் வர.......குப்பென்று சாராய நாத்தம் முகத்தில அடிக்க.....

ஆத்திரத்தோடு....என்னடா என்ன மாயாவி.உனக்கு எம்முட்டு தைரியம் இருந்தா இப்ப என்முன்னால குடிச்சிட்டு வந்து நிற்ப.....ஆ..? போடா ஒழுங்காய்ப்போய்ச்சேரு......

ஐயா.....மங்காக்கு ஊசிபோடனும் ஐயா......

அதுக்கு.........நான் என்ன டாக்டரா...? போடா.....போபோ...எனக்குமுன்னால நிற்காத...

ஐயா.....எதிர்பார்க்காமல் சயிக்கிலும் கீழ விழ இவன் ஐயா....ஐயா...எனக் காலில் விழுந்து அவர் கால்கள் இரண்டையும் பிடித்து அழுதான்....

ஐயா.......இல்லைன்னு சொல்லாதீங்கய்யா...எனக்கு உங்கள விட்டா யாருமில்ல ஐயா.....அவ உசிரு போப்போதுய்யா.....ஐயா...........உதவி பண்ணுங்க ஐயா.....எப்படியாச்சும் உங்க கடனை அடைச்சிடுவேன் ஐயா....ஐயா........நம்பி வந்திருக்கன்....மனசு வையுங்க...ஐயா.....அம்மா நீங்களாச்சும் சொல்லுங்கம்மா......

டேய்.டேய் முதல காலை விடு.எழுந்திரி.....எழும்படா.எழும்பு.....மண்ணில வேற புரண்டு....சீ.....மாயாவி.... எழும்படா.....

எழும்புறான்..கண்ணால் கண்ணீர் வழிந்தோடுகிறது மாயாவிக்கு.....

இஞ்ச பாரு மாயாவி........என்னஎன்றாலும் நாளைக்குப் பின்னேரமா வா..என்னான்னு விசாரிக்கிறேன். ( கேட்கிறேன்)...

இல்லய்யா.என்னால முடியாது எனக்கு அம்முட்டு தைரியமில்ல......அதுதான் குடிச்சேன் ஐயா.....குடிச்சபடியாலதான் எக்கு மனசு துணிஞ்சிருக்கய்யா......எனக்கு இல்லைன்னு சொல்லாமல் உதவி பண்ணங்க ஐயா....

அட லூசா.......எதுக்கும் நாளைக்கு வாடா.......

பக்கத்தில் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மகேஸ்வரி.கூறினாள்...

அட என்னான்னு என்றாவது கேளுங்கப்பா......இல்லாட்டிக்கு இவன் விடமாட்டான்...

உனக்கு ஒன்றும் தெரியாது..குடிகாரன்பேச்சு .................காதில வாங்கக்கூடாது.....நீ உள்ள போ....

ம்.....என்னமோ அவன் பாவம் போலதான் இருக்கு.....ஆனாலும் இந்த மாயாவி எதுக்கு குடிச்சிட்டு வாறன்...? இப்படி ஒருநாளும் வரமாட்டானே....

சும்மாயிரு மகேஸ்வரி.....இவனைப்போல எத்தனைபேர நான் பார்த்திருக்கிறன்.இவனுகளுக்கெல்லாம்.......ஆண்டவன் அளந்துதான் படைச்சிருக்கான்....போ.......மாயாவி.எனக்கு முன்னால நிற்காத போயிட்டு நான் சொன்னமாதிரி நாளைக்கு வா.......

இனிமேலும் அங்கிருப்பது தனக்கு எந்த விதத்திலும் பயனில்லை என்று தெரிந்தவனாய்.....

சரிங்க ஐயா.....நாளைக்கு வாறனய்யா.என்று இரண்டு கைகளாலும் கண்களைத்துடைத்தபடி அங்கிருந்து தன் சயிக்கிளைத் குனிந்து எடுத்துக்கொண்டு ஏறி ஓடாமல் ஒரு பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு தன் ஓலைக்குடிசை நோக்கி நடைபோட்டான் மாயாவி.

வாசகர்கள், உங்கள் மனசாட்சி என்ன கூறுகின்றது என்று பார்த்து என் .....மனசாட்சியும்....

தொடரும்.



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி........4

ஏய் ஒன்னத்தான்....கொஞ்சம் தள்ளி நில்லு......பேஷன்ட்டுக்கு கிட்ட ஈ மொச்ச மாதிரி கிட்டப்போகாதே.....கொஞ்சம் காத்தாவது வரட்டும். ஆமா...யாரு.இவ உன் பொண்டாட்டியா...? ஏன்யா.....உணர்வுப்பசிக்கு தீனி போட்டால் சரியா..? அவளுக்கு வயிறு இருப்பது தெரியாதா உனக்கு......கர்மம்..கர்மம் உனக்கெல்லாம் பொண்டாட்டி கேட்குது....குளிசிட்டாவது வந்தியா....வேர்வை நாத்தம் இங்க அடிக்குது......நேரமாகிறதிற்குள்ள வெளியேறு.....நீங்களெல்லாம் சுத்தமா இருந்தா ஏன் இந்த வியாதிகளெல்லாம் வந்து உங்கள அண்டுது.......ம்ம்.....என்னத்தச் சொல்லி எங்க திருந்தப்போகுதுக....

அந்த 8 ம் நம்பர் வார்ட்டின், அந்நேர கடமையிலிருந்த உடல் பருத்த நேர்சிடமிருந்து வந்த கடும் சொற்களால் வேதனைப்பட்டவனாகயிருந்தாலும், அதனை வெளிக்காட்டாது......மனச்சுத்ததுடன்....ஒரு அடி தள்ளி நின்றே மங்காவின் தலையைத்தடவியபடி....ஏன்ம்மா இப்ப எப்படியிருக்கு......? மருந்தெல்லாம் தாறாங்களா...?

கண்கள் கலங்கியபடி மனைவியைப்பார்த்து கேட்டதிற்கு.அவளிடமிருந்து உடனடியாகப்பதில் எதுவும் வரவில்லை. அவள் குரல் வெளிவரத்தடையாகயிருந்தது......மாறாக கண்ணீர் மட்டும் ஓரமாக வழிந்தது கண்டு.....அவள் கண்களைத் துடைத்துவிட்டபடி..

என்னம்மா......என்ன செய்யுது....? களைப்பா இருக்கா.....? நான் போய் குளுக்கோசு வேண்டி வரட்டுமா...?

என்று சொன்னவன்......அடுத்த கட்டிலில் ஒரு தாயைப்பார்க்க வந்திருந்த, 3 சிறு பிள்ளைகள், அவர்கள் தந்தை அவர்கள் அந்தத் தாயிற்கு கொண்டு வந்திருந்த கிறீம்கிரக்கர் பிஸ்கட், ஒரு பிளாஸ்கில் ஹோர்லிக்ஸ்....அதனைத் திறந்து ஒரு கப்பினுள் விட அந்த மணத்தில் ....ம்.......என்று மூக்கை இழுத்துக் கொண்டு அங்கையே வைத்த கண்வாங்காது பார்த்துக்கொண்ட கோபாலை...கண்டான் மாயாவி.

மாயாவிக்கு மனசு தாக்கியது. தன்மகனின் ஏக்கம் அவனுக்குப் புலப்படவே....ஐயோ......பாவம் புள்ள எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறான்.. என்றது நினைவுக்கு வரவே...அவனிருக்கும் அவ்விடத்திற்குப்போனான்....அப்போது...அவர்கள் பேச்சு காதில் விழுந்தது...

" அம்மா..அம்மா....நம்ம ஷிம்பா 5 குட்டிபோட்டிருக்கு.....3 பிளக்கலர்...2..பிரவுன் அன்ட் வைட் கலர்...

அட அப்படியா.......அம்மா வந்து பார்க்குமட்டும் பத்திரமா நல்லாப்பாருங்க என்னம்மா...ஏங்க.....கடைதெருவுகளுக்கு போறதிற்கு யாராச்சும் சின்னப்பையனா வேலைக்குப்பாருங்க.என்றேன்.....பார்க்கல்லையா...?"

டேய் கோபாலு.....வாப்பா.......

அப்பாவின் குரல்கேட்டு ஓடி வந்தான்...

நாம போயி சாப்பிட்டுவருவோம்...என்ன....
அம்மாகூட இன்னும் கொஞ்சநேரம் பேசிட்டுப்போவம் சரியா.....அம்மா தூங்கும் போது போவம் சரியா.....

சரிப்பா......எனக்கும் சரியா பசிக்குது.....அவங்க சாப்பிட இன்னும் பசிக்குதப்பா...வாப்பா.இப்பவே போவோம்...
அப்பா, அப்பா மறந்துட்டேன்.....

என்னப்பா......

அப்பா அம்மாக்கு சிக்கின்குன்யா காய்ச்சலாம்.....அந்த பெரிய நேர்சிட்ட பேசச்சொன்னாங்கப்பா......

அந்தச்சொல்லைக்கேட்டவுடன், கதிகலங்கிப்போனான். அந்த நோய் பற்றி கசக்கி எறிந்த பழைய பத்திரிகைகளிலே பார்த்து அறிந்து கொண்டவன். இப்போது தன் மனைவிக்கு அதுதான் நோய் என்றதை, மகன் கூறக் கேட்டு ஆடியே போனான்.....இப்போது அவனுக்குப்புரிந்தது...எதற்காக அந்த நேர்ஸ் தன்னை தள்ளி நிற்கச்சொன்னதும், காற்றுப்படவேண்டும் என்று சொன்னதும்.....தனியாக முதல் ஆளாக மங்காவை வைத்திருப்பதையும் நினைத்துச் சகலதும் விளங்கிக்கொண்டான் மாயாவி.

உள்ளே பிரைவேட் ரூமுக்குள் சென்ற நேர்ஸ்.......நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவள் வரும் வரையில் காத்துக்கொண்டிருந்த மாயாவி....நீண்ட நேரத்தின் பின்பு அந்த நேர்சும், புதிதாக வந்த இளைஞன் டொக்டரும் பிரைவேட் ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.

அவர்களைக்கண்டவுடன்.....பெரும் ஆனந்தத்தோடு.....

அம்மா......பையன் ஏதோ சொல்லுறான்.......என்னோட மங்காவிற்கு....என்னமோ சிக்கின்குன்யா என்று......அப்படிங்கலா....

அட மறந்தே போயிட்டன்.....ஆமா..ஆமா......அது உன் பொண்டாட்டி றிப்போர்ட்டா......ம்.தெரிஞ்சு என்னபண்ணப்போற....? இந்தா......இந்த ஊசி மருந்தை வாங்கிட்டு வா.....3 ஊசி போடனும்...இங்க ஸ்ட்ரொக்கில இல்ல.....விலை அதிகம் தான்......யாருடைய காலையாவது பிடிச்சு வாங்கிவந்தால்தான் அவ பிழைப்பா.......

சொல்லிக்கொண்டு கண்ணால் ஜாடை காட்டி புதிய இளைஞர் டொக்டருக்கு பல் இளித்தபடி, கொஞ்சம் வசதி படைத்த நோயாளர் பக்கம் நடைபோட்டு பேச்சுக்கொடுத்து கலக் ஷனுக்கு அடி போடச் சென்றுகொண்டிருந்தாள் அந்தத் தாதி.

மாயாவியினால் என்ன செய்வது என்று தெரியாமல்....அரை மயக்கத்தூக்கத்திலிருந்த மங்காவிடம் தான் போயிட்டு 5 மணிக்கு வருவதாகச்சொல்லி அந்த ஊசி மருந்துத்துண்டையும் எடுத்து பாக்கெற்றினுள் புதைத்து விட்டு மகனுக்குச் சாப்பிடக்கொடுத்துவிட்டு மருந்துக் கடை ஒன்றினுள் நுளைந்தான்...

ஐயா........இதற்கு எவ்வளவு பணம் செலவாகும்...?

சீட்டை வேண்டிப்பார்த்தவர்....

என்னப்பா......இந்த ஊசி மருந்து...யாரு உனக்கு எழுதித்தந்தது...?

தர்ம ஆசுபத்திரியிலய்யா...

பேருக்குத்தான் தாமம்.......ஆனா.....அங்க நடக்கிறதெல்லாம் யாரு கேட்பான்...? அங்க மருந்துகளை களவா பிரைவேட் டிஸ்பன்சரிக்கு விற்குறது....வித்துப்போட்டு பாவம் உன்னப்போல ஏழ எளியவங்க வயிற்றில அடிக்கிறதே வழக்கமாப்போச்சு.......ஏலாதப்பா.உனக்கு அதன்... விலை வேணாப்பா......உன்னால முடியாது......யாருக்கு..? உங்கம்மாக்கா...?

இல்ல......அங்கிள்..என்னோடம்மாக்கு......

டப்பென்று பதில் சொன்னான் கோபால்.

ஓ......அப்படியா....? ஐயோ.......பாவம்......பச்சப்புள்ள....
இஞ்ச பாரு......நான் எதுவுமே செய்யமுடியாது பரிதாபப் படத்தான் முடியும். நானும் பெரிய பணக்காரன் இல்ல..உனக்கு வாங்கித்தர. நானும் மாசச் சம்பளக்காரன். வேணுமுன்னா.....100 ரூபா தாறன்......மிச்சம்ப்பணம்...யாரிடமாச்சு கேட்டுப்பார்....கிடைச்சால் வாப்பா.....

ஏன்ய்யா எம்முட்டு ஆகும்......?

மனசில நடுக்கம், கண்களில ஏக்கம்........என்ன பதில் வருமோ என எதிர்பார்ப்பு.....ஆவலாய் மாயாவி...

சொல்லவே மனசுவரலப்பா......3 ஊசி மருந்துக்கும் 900 ரூபா ஆகும்.

900 ஆயிரமா.......அம்முட்டு ஆகுமா.......நிஜமாவா......

ஆமாப்பா.... இந்த மதிய நேரத்தில வந்தபடியால உன்னோட பேச முடிஞ்சுது.இதுவே சாயந்தரமாகயிருந்தால்...முதலாளி வேற கடையில நிற்பார்....மறு பேச்சின்றி வெளியால துரத்திப்போட்டிருப்பார்....சரி......மிச்சக்காசையும் எடுத்துக்கொண்டு வாப்பா.....நான் சொன்ன மாதிரி 100 ரூபா தாறன் சரியா....

இப்படியும் கருணையுள்ளம் இருக்கு என்றதை நினைத்தவனாய்......மெழுகுதிரிபோல மங்காவிற்கு தைரியம் எனும் வெளிச்சமாகவும், உள்ளுக்குள் உருகும் மெழுகுபோலாகவும்.....தன்னை நொந்துகொண்டு அடிக்கடி தன்னிடமிருந்த, பணத்தை திரும்பத்திரும்ப எண்ணிப்பார்த்ததில்.......150 கூட இல்லை.

அழுதான்....மீண்டும்......அழுதான்......எதற்காக இப்படி வாழ்க்கை..? என்ன பாவம் செய்தோம்....? அழுவதைத்தவிர எமக்கெல்லாம் விடிவேயில்லையா.யாரிடம் போய் கையேந்துவது...50 ஆ..100 ஆ கடன் பெறுவதற்கு....??? அவன் நினைத்துப்பார்ததில்.

கந்தவர்மன் ஐயா தான் கண்களுக்கு வெளிச்சமாகத்தோன்றினார். சாதாரண வசதி படைத்தவர்தான்.....அவருடைய பிள்ளைகள் நான்கு பேர்கள். அனைவரும் வெளிநாடு.....யாருடைய பணத்தையும் எதிர்பார்க்காமல் இன்னும் ஓட்டச்சயிக்கிளில் உலா வரும் இறுக்கப்பேர்வழி அவர். ஆனாலும் கெளரவமானவர். எப்படியும் மாயாவிக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில்.....அவன் கற்பனையில்.....வேலைமுடிந்து அவர் வரும் வரையில்.....அவர் வீட்டு வாசலில் ஒட்டிய வயிற்றுடன் காயப்போட்டிருக்கும் .....வடகம் போல இவனும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தான்.

தொடரும்.......


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி....3

ஆ..அம்மா...ஐயோ....நடுங்குதே....என்னங்க....இங்க....பாருங்க....உடம்புக்கு முடியலங்க...

கொஞ்சம் பொறு...விளக்கைத்தூண்டிவிட்டு வாறன். அடடா.......உடம்பு ரொம்ப கொதிக்குதே.....டேய்......கோபாலு.கோபால்...

பாயில் படுத்தபடி கண்ணைத்திறந்து என்னப்பா...? மழைபெய்யுதா......

இல்லடா....உங்கம்மாக்கு காய்ச்சலாயிருக்கு....அதுதான்......அந்த காய்ச்சல் குளுசை எங்க இருக்கு...அதைக் எடுத்துக்கொண்டுவாப்பா......

ஐயோ...காலெல்லாம் வலிக்குதே.....அம்மா....வயிறெல்லாம் புண்ணா வலிக்குதே......ஒருநாளும் இல்லாம.....

அப்பவும் நான் சொன்னனான்..........மழைநேரங்களில இந்த அரிசியிடிக்கிர வேலைக்குப் போகாதே என்று.....ம்........கேட்டால்தானே.....ஈர நிலத்தில நின்று அரிசியிடிச்சபடியாலத்தான் குளிரேறிப்போச்சு......

எனக்கென்ன இதெல்லாம் புதுப்பழக்கமோங்க......ஏதோ வரவேண்டிய பலன் என்றால் வந்துதானே தீரும்..இந்தக்குளுசை போட்டாலும் தீர்ற மாதிரியில்லைங்க.....பெரியாஸ்பத்திரிக்குப்போனால்தான் சரியாகும் என்று நினைக்கிறேன். ஏனங்க பஞ்சியைப்பார்க்காம போவமாங்க......

உன்னைக் கூட்டிட்டுப் போறவேலையைவிட்டுட்டு எனக்கென்ன பஞ்சி வேறயிருக்கு...இந்தா சயிக்கிள எடுக்கிறன்...ஏப்பா கோபாலு....நீ தனிச்சு இருக்கமாட்டாய்......நீயும் வாப்பா.....

ஏப்பா........அம்மாக்கு என்னாச்சு....?

ஒன்னுமில்லடா.......உங்கம்மாக்கு லேசா..காச்சலாயிருக்கு....பயப்பிடாதேடா வா...கெதியா...

சயிக்கிள் பாரின் முன்னுக்கு மனைவி மங்காவையும், பின்னுக்கு மகனையும் வச்சுக்கொண்டு மிதிக்கத்தொடங்கினான்...மாயாவி.

ஐயா..என்னாச்சு ஐயா.....பார்த்துச்சொல்லுங்க..ஐயா...

வெயிட் பண்ணுங்க....பிளட் அனுப்பியிருக்கோம். லபோரட்ரியினால ரிசல்ட் வந்தபின்புதான் தெரியும்.....என்னான்னு....அதுவரைக்கும் பேஷன்டை டிஸ்டொப் செய்யாதீங்க....

அது எப்ப வருமய்யா......?

எனக்கென்ன தெரியும். வெயிட் பண்ணுங்க....சரியா.......யாரு..இவன் உங்க பையனா.....?

ஆமாங்கய்யா......பேரு கோபாலு....

இங்க எல்லாம் எதுக்கு கூட்டி வாறீங்க....? நீங்களாகவே தேடிக்கொள்ளுங்க....வியாதிகளை....பிறகு எங்கிட உயிரை வாங்குங்க.....

யாருமில்லைங்க ஐயா......சின்னப்புள்ள......தனியா தூங்கமாட்டான்..அதுதான்....இங்க கூட்டியாந்துட்டன்...

ம்ம்.......என்னாவது பண்ணித்தொலையுங்க.....பையன அந்த பெஞ்சில படுக்கச்சொல்லுங்க....

சரிய்யா.....

அப்பா....அம்மாக்கு என்னப்பா.....ஏனப்பா அம்மா கண்ணால தண்ணியோடுது...? அப்பா அம்மா பாவமப்பா......அம்மா...அம்...மா...

டேய் அழுவாதடா......அம்மாக்கு ஒன்னுமில்ல......அந்த காளியம்மா நமக்கு ஒரு கெடுதலும் வைக்கமாட்டா.....படுடா ராசா...

அப்பா.நீ தூங்கலையா....?

இல்லப்பா......அப்பாக்கு தூக்கம் வரல்ல.....நீ தூங்குப்பா....

அதிகாலை வரை எந்த றிசல்ட்டும் வரவில்லை. டொக்டர்மார்கள் மாறி மாறி வந்து மங்காவைப்பார்த்துவிட்டுப்போனார்களேயொழிய எந்த மாறுதலும் இன்றி இன்னும் அதிகமாக முனங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

நேரத்தைப்பார்க்கிறான்....மாயாவி. காலை 6.45 காட்டியது.. ஆஸ்பத்திரி கடிகாரம். அப்போதுதான் அவனுக்கு கந்தவர்மன் ஐயாவின் சயிக்கிள் ஞாபகத்திற்கு வந்தது....

ராசா...கோபாலு.எழுந்திருடா....ஐயா வீட்டுச்சயிக்கிள் கொடுக்கவேணும்.....

ஐயோ..என்னப்பா நீங்க......ஒழுங்கா தூங்கவிடமாட்டீங்கலாம்....நா வரல்ல..நீங்க போயிட்டு வாங்க...

நான் மட்டும் போனால்.வரஏலாதப்பா......நாங்க.....வீட்ட போய் ஐயா சயிக்கிள எடுத்துக்கொண்டு போவோம்....

ஏப்பா.....மாயாவி.....? அப்பா மாயாவி....கூப்பிட்டுப்பார்த்தார்.....அந்தப்பெரியவர்.
என்னப்பா....? என்ன யோசனை..? இந்தாப்பா...இந்தச்சயிக்கிள் செயின் ஒரே கழன்டு கொண்டேயிருக்கு....ரொம்ப லூசாகிட்டு என்று நினைக்கிறேன்.பார்த்து அஜஸ்ட் பண்ணித்தாப்பா.....

ஓ.....ஐயாவா....வாங்க..ஐயா....ஏதோ சிந்தனையில இருந்துட்டன்....என்று, நேற்றிரவு நடந்தது முதல் காலை வரை நடந்த சிந்தனையிலிருந்து விடுபட்டான் மாயாவி.

என்னப்பா.கண்ணெல்லாம் சிவந்திருக்கு....

ராவு தூங்கல்லைய்யா........

என்னப்பா ஏதும் குடிச்சியா....

இல்லய்யா.....மங்காவிற்கு உடம்பு சரியில்ல......தர்மாஸ்பத்திரியில விட்டிருக்கேன்....

அப்ப நீயும் அங்க நிற்க வேண்டியதுதானே......இங்க ஏன் வந்தே...

என்னய்யா......அங்க பொம்பிள வார்ட்டு நா நிற்கமுடியாதய்யா.....அவன் பையன் சின்னவன்தானே அவனை அனுப்பிவச்சிருக்கன்....அதைவிட இங்க வார வருமானமும் இல்லாமற்போயிடும் ஐயா...

என்னத்தா பெரிசா உழைச்சிடப்போற....உனக்கெல்லாம் மனசாட்சியேயில்லைப்பா.....

படார் என்று கன்னத்தில அடிச்சதுபோலயிருந்தது அந்தச்சொல்.அவனுக்கு....

அவனா மனசாட்சியில்லாதவன்...அவன்.ஏழை என்ன செய்வான்..? எந்தப்பக்கம் சுற்றிசுற்றித்திரிந்தாலும்.அவன் செய்கிறதெல்லாமே ஞாயமாகவே அவனுக்குப்பட்டது....எப்படா மதியம் 12 மணியாகும் என்று அடிக்கடிநேரத்தைப்பார்த்துக்கொண்டிருந்தான்.....அவன் சிந்தனையெல்லாம் மங்கா நினைப்புத்தான். அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று உலகிலுள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிநின்றான்.
நேரம் மதியம் 12 என்றதிற்கு அடையாளமாக......எதிராக இருந்த டீ கடையில இருந்து..வானொலிப்பெட்டியில........செய்திகளுக்கான நேரம் என்ற அறிவிப்பு வந்ததைத்தொடர்ந்து.......உற்சாகம் வந்தவனாக.....சாத்தியிருந்த பலகைகளை எடுத்து கடையை பூட்டி...மீண்டும் சயிக்களை மிதிக்கத்தொடங்கினான்....மாயாவி....ஆஸ்பத்திரியை நோக்கி.



தொடரும்......

மனசாட்சி.... 2

நேரம் அதிகாலை, வழமைபோல கந்தவர்மன் 5 மணிக்கெல்லாம் எழும்பி, மரங்கள், செடிகள், கொடிகளுக்கு என்று தண்ணீர் ஊற்றிப் பின்பு புழுதி பறக்காமலிருக்க முற்றத்திற்கு நீர் தெளித்து விளக்குமாறு கொண்டு கூட்டிப் பெருக்கி, தானும் குளித்துவிட்டு வேலைக்கு வெளிக்கிட ஆயத்தமானார்....

ஆடுகளுக்கு குலைகள் வெட்டிப்போட்டபடி மகேஸ்வரியும் அவசரவசரமாக தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

ஆட்டுப்பாலில் போட்ட தேனீரை கணவருக்குக் கொடுத்தபடி....

ஏனங்க.........நேரம் ஏழாகப்போகிறது. இவன் இன்னும் சயிக்கிள கொணார்ந்து தரல்லையே.....

ம்..ம்...நானும் அதைப்பற்றிதான் யோசிக்க நீயும் சொல்லுறாய். நேற்றே கையோடு எடுத்திட்டு வந்திருக்கவேணும். பிழவிட்டிட்டேன். வேலைக்கும் நேரமாகுது. இவனை வேற காணல்ல....

மனதில சங்கடம், உடலிலே எரிச்சலுடன் கோபமாக வாசலுக்கும், வீட்டிற்குமாக பல தடவைகள் போவதும் வருவதுமாகயிருந்தார் கந்தவர்மன்.

தூர மாயாவி வருவது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவே...

அந்தா பாருங்க அவன்தான் வந்திட்டானுங்க......

ம்....வரட்டும், வரட்டும் கழுதை.....காலங்காத்தாலே மனுசனுக்கு எரிச்சலை உண்டுபண்ணுறான் இவன்.

வாடா..வா....ஏன்டா உனக்கு புத்தியில்லையோ......இப்ப மணி என்னாகிறது. வேலை போனால்... பிறகென்ன உன்னோட சயிக்கிள் றிம் உருட்டத்தான் ஆசையோ...

ஐயோ......அப்படியில்லைங்கய்யா........வந்து.....

டேய் என்னடா வந்துபோயி.....போடா போ.... முன்னால நிற்காத..வேலைக்கு போற நேரமதுவுமா.....இந்தா பிள்ள...காசு எவ்வளவு என்று கேட்டு கொடுத்தனுப்பு...நான் போயிட்டு வாறன்.

என்னடா மாயாவி......ஐயா 7 மணிக்கெல்லாம் கந்தோருக்குப் போகவேணும் என்று தெரியாதோ...வீணா ஏனடா அவர்கிட்ட ஏச்சுப்பேச்செல்லாம் வாங்குறாய்...சரி....சரி......இவன் என்ன பள்ளிக்கு அனுப்பலையோ.....என்டா கோபாலு.கொப்பனைப்போல சயிக்கிள் கடையிலையோ கிடக்கப்போறாய்....படிக்ககிடிக்க ஆசையில்லையோ.......

ஆசைதான் அம்மா, ஆனா....அம்மா......

நான் என்னத்த சொல்ல......எப்படியாச்சும் பிழைக்கிற வழியைப்பாரு.சரியோ...
ஆமா மாயாவி ஐயா காசைக்கொடுக்கச்சொன்னாரே......எவ்வளவு தர...?

ஐயாட்ட என்னம்மா நான் கேட்கிறது..? பார்த்துதாங்கம்மா.....

25 ரூபா தரட்டோ....

பார்த்து தாங்கம்மா.....

ம்..இரு வாறன்..

ஏனப்பா......நீங்க சொல்லியிருக்கலாமுல்ல.....50 தரச்சொல்லி.

டேய் இல்லடா....அவங்க கிட்டபோய் அப்படி நாம கேட்கக்கூடாது. பாவம் அவங்களும் கஸ்டப்பட்டுத்தானே சம்பாதிக்கிறாங்க....நமக்கு இதுபோதும்டா....

அப்பா....ஏனப்பா அம்மாவைப்பற்றி சொல்லல்ல.....அவங்க உங்கள திட்டுறாங்க.பேசாமலிருக்கிறீங்களே...

சொல்லலாமுன்னு நினைச்சேன்டா.....அனா அவங்க.பொறுமையா கேட்கிறமாதிரி இல்லைன்னு தெரிஞ்சப்போ.......பேசாமல் இருந்துட்டேன்டா..

இந்தா மாயாவி......30 இருக்கு.

சரிங்கம்மா இன்னைக்கு உங்க கையாலதான் என் வருமானம், எப்படியும் குறைவில்லாமல் நடக்கும்..

சரி....சரி......இனிமே இப்படி நடக்காத சரியா.......

சரிம்மா வாறன். டேய்....அம்மாகிட்ட சொல்லிட்டு வாடா.....

போயிட்டு வாறனம்மா...

மகன் கொண்டு வந்த சயிக்கிளில் தகப்பனும், மகனுமாகத் திரும்பிப் போனார்கள். போகும் போது...கோபால் அப்பாவைப்பார்த்துக்கேட்டுக்கொண்டான்..

ஏனப்பா நீங்க ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்தானே....

அட அதைவிடுடா...

இப்படியே.நீங்களும் சொல்லாமல் இருந்தபடியாலதான் அவங்க பேச்செல்லாம் கேட்கவேண்டியிருக்கு......

டேய்.....மொக்குமவனே.....நாம சொன்னாலும் இவங்க நம்ப மாட்டாங்கடா.ஏன்னா அவங்க.....எப்பவுமே நம்மப்போல ஏழைஜனங்கள நம்புறதில்ல....அதனாலதா பேசாமல் இருந்துட்டேன். ஆனா சொல்லாமுன்னு நினைச்சு தொடங்கப்போக.....அவங்க பேசவே விடல்ல.....போகட்டும்டா விடுடா..

அப்பா....வாங்கப்பா......அம்மாவைப் பார்ததிட்டு வரலாம். வேணான்டா...அங்க வந்தா கடை திறக்க லேட்டாகிடும். அஞ்சோ, பத்தோ வாறதும் இல்லாமற்போயிடும்....அதனால ஆசுப்பத்திரிக்கு நீ போ....இந்தா அம்மாக்கு இளநீர் வேண்டிக்கொடுத்து நீயும் ஏதும் சாப்பிடு என்ன....நான் மத்தியானம் 12க்கும் 1 மணிக்கும் இடையில பார்க்கவிடுவாங்க.அப்ப வாறன் நீ போய் அம்மா பக்கத்தில நில்லு. எங்கையும் போயுடாதடா....பெரிய டாக்குத்தர் வருவாரு.நீ தான் தைரியமா நின்னு பேசனும் சரியா......
நடந்து போராசா....இன்னும் 10 நிமிசத்தில ஆசுப்பத்திரி வந்திடும்.

நான் 5 நிமிசத்தில ஓடியே போயிடுவேனுல்ல.....

தகப்பன் கொடுத்த 30 ரூபாவையும் வேண்டி அதைச் சுருட்டிப் பத்திரமாய் காற்சட்டையின் பாக்கெட்டினுள் அடியில் அமர்த்தி அமர்த்தி வைத்துவிட்டு முன் சேர்ட்டில் பட்டின் இல்லாத இடத்தில் குத்தியிருந்த ஊசியைக்கழற்றி காற்சட்டையின் பாக்கற்றின் காசு வைத்த பகுதிக்கு காசு கீழே விழாதவாறு ஊசி கொண்டு பின் பண்ணினான்.

வண்....டூடூ.....திரி.....என்று தனக்குள்ள சொல்லிக்கொண்டு ஓட ஆரம்பித்து...ஆஸ்பத்திரி நோக்கிச்சென்றான் கோபால்.

டேய்....காசு பத்திரம்டா.....

தகப்பன் சொன்ன வார்த்தைகள் அவன் காதில விழவில்லை. 9 வயது நிரம்பியபையனவன்.....பள்ளிக்குச் செல்வதும், செல்லாமல் விடுவதும், வறுமையில வாடுவதும். ஏக்கங்களும், வேதனைகளும்.. அவனைப்பொறுத்தவரையில் அவனுக்கு அவைகளே முழுச்சொத்தும்.

வேகாத வெய்யிலில் கால்கடுக்க....கை உளைய பழைய சயிக்கிள்களைப்போட்டு உருட்டி, உருட்டிப் பட்ச் போடுவதும், முதுகு வளைய வளைய காத்தடிப்பதுமாக அவன் அன்றாட வாழ்க்கைச்செலவு பயணிக்கும் வேளையில்......நேற்று இரவு நடந்த சம்பவத்தை நினைச்சுப்பார்த்தவுடன் மீண்டும் அழுதான்.....மாயாவி...கண்களால் வழியும் அவன் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாமல் இருகைகளிலும் ஓயில் இருக்க.....உள்ளங்கைகொண்டு கண்களைத்துடைத்து துடைத்து.....அழுதான்...
அவன் அழுதது.அவனுக்கு மட்டும்தான் தெரியும். பழைய சயிக்கிள்கள் என்றால் மட்டும்தான் மாயாவியிடம் தேடி வரும். புதிய சயிக்கிள் என்றால் இயந்திரங்கள் கொண்டு காற்றடிக்கும் பம், பட்ச் போடும் மெசின் பூட்டப்பட்டுள்ள........ வேறு இடங்களுக்குச்செல்லும். குறிப்பாகச் சொல்லப்போனால்......வசதிபடைத்தோரின் பெரிய கட்டிடக் கடைகள் வந்தபின்பு...இப்படியான ஏழைஎளியவர்களின் கடைகளுக்கு.....அரிக்கன்லாம்புக்குக்கூட எண்ணெய் வேண்டவே வருமானம் பத்தாது. அவர்கள் வயிறு நிறைய சாப்பிடுவது என்றது......ஊரில பொங்கல் வந்தால்தான்.



தொடரும்.....

மனசாட்சி.....1

காதைப்பிளக்கும் இடிமின்னல் வேறு...சோ வென மழை பெய்தபடியிருக்க..அதிகாலையிலேயே இப்படி மழை பெய்ய வேணுமா என்ன...?
என்று தனக்குள் பேசியபடி கந்தவர்மன் அலுவலக்திற்குத் தயார் ஆனார். காலையில வழமையாகத்தரும் இரண்டு பாண்துண்டுகள் ( ரொட்டித்துண்டுகள்) அதற்கு மேலே கத்தி படாமல் மெல்லிய பூச்சாகப்பூசப்பட்ட அன்னாசிஜாம் அத்தோடு நாளாந்த மாத்திரை இத்தனையும் லபக் என் விழுங்கிவிட்டு........காலையில் மழையைக்கண்ட ஆரம்பம் முதலான எரிச்சல் எனும் பயில் கட்டோடு தன் குடையைத் தேடலானார். எங்கதான் போய் துலைஞ்சுது...?

மூலைமுடக்குகளில் தேடியும் காணாததால் மனைவி மகேஸ்வரியை உதவிக்கு நாடினார்..

ஏம்மா.....இந்தக் குடையை காணலையே.எங்காச்சும் கண்டியோ...? வேலைக்கு நேரமாகிடிச்சு.......டைமுக்கு போகலைன்னா அப்புறம் வேலை காலி தெரியுமுல்ல...

இதோ வந்திட்டேனுங்க.....மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகளையும் ஆடுகளையும் இந்தா.....ம்ம்.....ம்....ச்...போ...போ...என்று அதுகள் கூட்டினுள் துரத்திவிட்டு 3 மூலைகளில் கம்பிகள் மட்டும் எட்டிப்பார்க்கும் ஓட்டக்குடையுடன் ஓடி வந்து கணவர் கந்தவர்மனிடம் காலையிலையே வெத்திலை போட்ட பற்கள் சிவக்க சிரித்தபடி கொடுத்தாள்.

அட நீதான் எடுத்தியோ.....கொஞ்சம் கூட புத்தியில்ல. எப்பதான் திருந்தப்போறியளோ...ம் சரவணா...

இல்லைங்க..ரொம்ப நேரமா ஆடுகள் எல்லாம் மழையில நனைஞ்சு......அப்புறம்..

மனுசன் வேலைக்குப்போகிற நேரமதுவுமா இந்த ஆடுகள்தான் ரொம்ப முக்கியமோ......சரி.சரி.....நான் போயிட்டுவாறன்.

காற்று வேகமாகக் வீச, சயிக்கிளக்கூட தெம்பாக மிதிக்கமுடியாமல் மிக கஷ்டப்பட்டு ஒரு கையிலே குடை, மறுகையிலே சயிக்கிள் கைபிடி. தலையைக்குனிந்தவாறு பாதி முதுகு நனைந்தபடி, தன்னால் முடிந்தவேகத்தில் தன்கந்தோருக்கு விரைகிறார்.

அடடா இது என்ன மழை..இப்படி டப்பென விட்டுவிட்டதே....குடையை மடித்துச்சுருக்கிவிட்டு சயிக்கிள் சாத்திவைக்கப்படும் இடத்தில அவருடைய சயிக்கிளும் நங்கூரமிடப்பட்டு விட்டது.

பி்.நே.....வேலைமுடிந்து வீட்டிற்குச்செல்லும் நேரம்.....அடடா...சயிக்கிள் டயர் காற்றுப்போய்விட்டதே என்று மனவருத்தத்துடன் அதனைப் பார்க்க அந்த காற்றுப்போன டயரில் பூத்துப்போனது பழையக்கடை மாயாவி. அட ஆமா அவன் இருப்பதே மறந்துட்டேன். சிரித்துக்கொண்டே சயிக்கிளைப்பிடித்துக்கொண்டு மாயாவியின் கடை நோக்கி நடையாய் நடைபோட்டார் கந்தவர்மன்.

ஐயா வாங்கய்யா! வாங்க!.....என்னங்க ஐயா டயரு பிரச்சனையா...? இந்தா இப்ப ஒரு நொடியில முடிச்சிடுறன். டேய் கோபாலு......கோபாலு.ஐயாவந்திருக்காருடா அந்தக் கதிரையை கொணார்ந்து போடுடா கழுதை.

இந்தா கொண்டுவாறனப்பா....

கதிரையும் வரவே உட்கார்ந்துகொண்டார் கந்தவர்மன்.

ஐயா பயல அனுப்பி டீ ஏதாச்சும் வாங்கிவரச்சொல்லட்டாய்யா.....

இல்ல.இல்ல....அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நீ முதல இதை முடிச்சுக்கொடுத்திடு.

ஆகட்டும் ஐயா.......டயருக்கு பட்ச் போடனுமய்யா. கொஞ்ச நேரமாகும் பறவாயில்லைங்கலா..

ஓ.அப்படியா, இந்தா மாயாவி....அப்படியே.. உன்ர மனுசி எங்க மங்காவைக்காணல்ல...

ஓ......அதுவா....இப்பத்தான் வூட்டிற்கு போயிருக்கு......யாரோக்கோ அரிசியிடிச்சுத்தாறதா சொல்லிப்போட்டாமுல்ல.அதனால அது போயிட்டுதய்யா.

ஏன்யா.ஏதும் வூட்டு வேலை இருக்குங்கலா...?

இல்ல...இல்ல....இந்தக்குடையையும் தைச்சு சரி பார்த்து தரச்சொல்லிக்கத்தான் கேட்டேன்.

அதுகென்னங்கய்யா.....இவன் பய இருக்கானுங்க.செஞ்சுமுடிச்சிடுவானுல்ல.......இங்க கொடுங்கய்யா....

அப்புறம் மாயாவி வீடு பக்கத்திலதான் நான் வீட்டிற்கு நடையில போறன்....மழையும் இல்ல.
நீ காலையில கொணார்ந்து தந்துடு என்ன..

ஆகட்டும் ஐயா. நான் காலையில சேவல் கூவ முதல் ஐயா வீட்டு வாசில நிற்பேன் சரியாங்க ஐயா...

சரி.சரி..சொன்தைப்போலவே செஞ்சிடு என்ன..அப்ப நான் வாறன். ஏதும் 10, 20 இப்ப தந்திடிறனே மாயாவி...

என்னங்க ஐயா நீங்க.உங்கள நம்பாமலா....காலையில எடுத்துக்கிறேனய்யா.

அப்ப சரி நான் வாறன்..

பொடிநடையாய் வீடுநோக்கி கந்தவர்மன் நடைபோட்டார்.

தொடரும்....

Saturday, June 28, 2008

நாணயம்.

மண்சோலைக் கிராமத்தில் இளைஞனாக குடியேறி, அங்குள்ள பாடசாலை ஆசிரியராகி பின்னர் தலைஆசிரியராக பதவியேற்றப்பட்டு ஓய்வு பெற்றவரே ராகவன் மாஸ்டர்.
காதலித்து கெளரியை கரம் பிடித்து இல்லற வாழ்வில் இனிதே வாழ்ந்து ஐந்து பிள்ளைகளுக்கும் அன்பான தந்தையானார்.



காலச் சக்கரம் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி எத்தனை பேருக்குத்தான் சுழறும்.
ராகவன் மாஸ்டரின் வாழ்விலும் பெரும் பள்ளம் விழுந்தாற் போல் பணக்கஸ்டம் வந்து வாட்டியது. மண்சோலைக்கிராமத்தில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் பெரும் மரியாதைக்குரிய அண்ணன் மகாலிங்கத்தை அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல அடுத்தடுத்த கிராம மக்களும் அறிந்து கொண்டிருந்தனர்.

மனம் கவலை அடந்தால் ஆலய வாசலில் மண்டியிடுவோம். பணம் தட்டுப்பாடானால், கடனாகப் பெற வட்டிக்கடை வாசலில் தவம் இருப்போம்.
ராகவனுக்கு மட்டும் என்ன ஆகாயத்தில் இருந்தா கொட்டப்போகிறது. அவரும் தன் மனைவி மக்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு மகாலிங்கத்தின் வீட்டுக்கதவைத் தட்டினார்.

அடடா வாங்க மாஸ்டர்...வரவேற்புக்கு ஒன்றும் குறைச்சலில்லை. அமோகமான வரவேற்பு. நிலமையை வெட்கப்பட்டும் வேதனைப்பட்டும் எடுத்துக்கூறி பெரியவர் முன்னிலையில் துண்டை விரித்து நகைகளை காண்பித்தார் ராகவன் மாஸ்டர்.

அட இதென்னங்க நீங்க......உங்களுக்கில்லாத பணமா...உங்கட நாணயம் தெரியாமலா மாஸ்டர். உங்கள நம்பாமலா. எடுங்கோ நகைகளை முதலில். எனக்கு உங்கள் மேல் உள்ள நம்பிக்கை ஒன்றே போதுமுங்க.....எவ்வளவு பணம் வேணும் என்றதை மட்டும் சொல்லுங்க...மாசம் 30 ம் திகதி வட்டிப்பணம் தந்தால் போதும்.

சொன்னபடி வட்டிப்பணம் மகாலிங்கம் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் மாரடைப்பால் மரணமானார் மாஸ்டர் ராகவன்.

சொல்லிக்கொண்டு வருவது பிரசவம். சொல்லாமல் கொண்டு போவது மரணம்.
ராகவன் மாஸ்டர் வீட்டில் மரணப்பந்தலும், மங்கிய விழிகளும், மார்பில் அடித்துக் கதறியழும் மனைவி மக்கள் மத்தியிலும்...

அட நான் ஏமார்ந்து போய்விட்டேனே....நகையை வாங்காமல் விட்டது என் மடத்தனம். இந்த மனுசன் தொப்பென்று மூச்சையடக்கும் என்று யாருக்குத் தெரியும்...இப்ப யாரிட்டத்தான் போய் கேட்பது....வாய்விட்டு வெந்து துடித்தார் மகாலிங்கம். இறந்த மனிதனுக்காக இல்லை. முடங்கிய பணமும் இறந்து விடுமா என்ற அச்சத்தில்.

ஒத்தாசை பாடிக்கொண்டிருந்தாள் அவர் மனைவி வதனா. போங்க...ஒரு நிமிசமும் தாமதிக்காது உடனே போங்க.. மையத்தை எடுக்கவிடாம ஒரு வழி பண்ணுங்க....கொடுத்த பணத்திற்கு வட்டியும் முதலும் உடனே வந்து சேர என்ன வழி என்றதைக் கேளுங்க....
அப்பவும் சொன்னனான் யாரையும் நம்பாதீங்க நம்பாதீங்க என்று கேட்டால் தானே....

பொங்கி எழுந்தாள் வதனா. மகாலிங்கம் கூடவே புறப்பட்டு மரண ஓலங்களின் மத்தியில் திடுதிப்பென்று கம்பீரமாக நின்றார்கள். இவர்கள் இருவரும் போதாது என்று அடியாட்களையும் காரில் போட்டு வந்திறங்கிய மகாலிங்கமும், மனைவி வதனாவும் நின்ற காட்சியைப்பார்த்து ஏதோ விபரீதமோ என அயலவர்கள் பின்வாங்கினார்கள்.

இவர்களைக்கண்ட ராகவன் மாஸ்டரின் முதல் புத்திரன் வீட்டிற்குள் ஓடிச் சென்றான்.
அங்க பாருங்கோ அவன்தான் மாஸ்டரின்ர மூத்த மகன். எங்களைக்கண்டவுடன் ஓடி ஒளியிறான். விடாதீங்கோ பிடியுங்கோ....வாங்கடா என்று கத்திக்கொண்டு அறையை நோக்கி ஓட்டம் போட்டார் மகாலிங்கமும் அவருடைய தடியாட்களும்.

போன போக்கில் எட்டி அவன் சேர்ட்டைப் பிடித்து இழுத்தார் மகாலிங்கம். எங்கடா ஓடி ஒளியப்பார்க்கிறாய். அப்பர் அம்போ என்று போயிட்டார். நீயாவது வாங்கின காசக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறாயோ....

நாங்க அந்த மானம் கெட்ட பரம்பரையில பிறக்கவில்லை ஐயா. இந்தாங்க உங்கள் பணம். இதை எடுக்கத்தான் நான் போனேன். என் அப்பா நாணயமானவர். நல்ல மனிதர். உங்கட பணத்தை குருவி சேர்ப்பது போலச்சேர்த்து தன் கையால் நன்றி சொல்லி கொடுக்கவேண்டும் என்று வெளிக்கிட்டபோது தான் இப்படி நேர்ந்தது. உங்களிட்ட பணம் இருக்கலாம். ஆனால் நல்ல மனம் இல்ல. அதை இப்ப நீங்களாகவே காட்டிக்கொடுத்துவிட்டீங்க....

இந்தாங்க எடுத்துக்கொள்ளுங்க உங்க பணத்தை. ஆயிரத்தில ஒன்று தப்பு நடக்கலாம். அதுக்காக எல்லோரையும் கள்ளன், கபடன் என்று எண்ணாதீங்க....நாங்க மிடில் கிளாஸ்தான். ஆனால் மனசால ஹைய் கிளாஸ்.

பேய் அறைந்தது போல வார்த்தைகள் எதுவும் பேசாது நின்ற வதனாவையும், மகாலிங்கத்தையும், சிவந்த ஈர விழிகளோடு....அதிகம் பேசாத மகனே அவர் செய்த நன்றியை நாம என்றைக்கும் மறக்கக்கூடாது. என்று சொல்லியபடி மாஸ்டரின் மனைவி கெளரி.

தலைகுனிந்தபடி நாணயமான மனிதர் என்று சொல்லி பூதவுடலருகே, அந்தப்பணத்தை வைத்துவிட்டு மகாலிங்கம் மனச்சுமையோடு சென்றார்.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

Sunday, June 22, 2008

ப்ளீஸ் மன்னிச்சிடுங்க...

வழமைபோல அதே பஸ் தரிப்பில் காலை 7.30 மணியிலிருங்து பஸ் வரும் திசை நோக்கி காத்துக்கொண்டிருந்தாள் தூவாரகா.
வழமையை விட அன்று காலை அதிக சனக்கூட்டம் பஸ்சிற்காக காத்திருந்தனர்.

" அடச்சே....இன்னைக்கு என்று இந்த பஸ் இப்படி லேட்டா வரவேணுமா..? எப்படியாச்சும் அந்த புதுசா வந்த மாங்காய் பிடாரி மனேஜருகிட்ட செம பேச்சு வேண்டத்தான் போறேன்.." மனதிலே பொங்கி வந்த கோபத்தில் வார்த்தைகள் வெளிவராது மனத்திற்குள் மட்டும் தீம் தக்க ததுமி தாளம் போட்டுக் கொண்டு இருந்தது தூவாரகாவிற்கு.

"அப்பப்பா.......என்னே சனநெரிசல்.." இதில தோளில பை, கையில புத்தகம்...ம்........இதெல்லாம்....ச்சே.பெண்ணாய் பிறந்ததே பாவம்"
மீண்டும் பேசியது அவள் மனதோடு மட்டும்.

" ஹலோ....ஹலோ......இஞ்ச பாருங்கோ....உங்களத்தான்..புளூ புடவை....இங்க....இங்க...இங்கபாருங்க..."

" ஆ....யாரது.......என்னத்தான் கூப்பிடறமாதிரியிருக்கே..."

எட்டிப்பார்தாள், அந்த இடை இந்த இடை வெளி என்று கூர்ந்து கூர்ந்து பார்த்தாள்...யாருமே அவள் கண்ணுக்கு தென்படவில்லை.

" ரவுடி பசங்க....பொம்பிள பிள்ளைங்கள சயிட் அடிக்க என்றே காலங்காத்தால புட்போட்டில தொங்கி வந்திடுவானுங்க...சீ......கழுதைகள்."

வாயிற்குள் முணுமுணுத்தாள். அவள் இறங்கவேண்டிய இடமும் வந்திடவே. சாறியை கையில் பிடித்தபடி மெதுவாக இறங்கினாள். மீண்டும் அதே குரலில்....

"தூவாரகா......நில்லுங்க....கொஞ்சம் நில்லுங்க..."

அவளும் கண்களில் கதிரவனை வைத்துக்கொண்டு காலில் மாட்டியிருந்த செருப்பை கையில வைச்சுக்கொண்டு......" என்னடா......என்ன...ஆ......என்டா வேணும் உனக்கு....??? என்னோட பேரை எப்படியாச்சும் தெரிந்து கொண்டு....இப்ப வேலையிடத்திற்கே வந்திட்டியா அயோக்கிய நாயே..."

" ஐயையோ......இது எனக்கு தேவையா..??? மாதவா...."

" ஓ...உன் பேர் மாதவனாக்கும்...அதுதான் சொல்லுறியோ..."

" இஞ்ச பாருங்க......ஏனங்க.....நீங்களெல்லாம் படிச்ச பொண்ணுக தானே.ஏன் எப்ப பார்த்தாலும், எந்த இளைஞர்களைப் பார்த்தாலும் வெடுக்கென்று சந்தேகப்படுறீங்க...எங்களுக்கும் உணர்வுகளை மதிக்க தெரியும், எந்தப் பொண்ணும் பார்க்காம நாங்க சயிட் அடிக்க மாட்டோம். ஆமா....
கொஞ்சமாவது பொம்பிள போல பேசுங்க..யாரையும் எடுத்தவுடனே சந்தேகப்படாதீங்க........இந்தாங்க பிடிங்க.உங்க டையறி. நீங்க பஸ்சில ஏறினபோது கீழே விழுந்தது. நான் பின்னால வந்தனான். அதை எடுத்துப்போட்டு எத்தனை தரம் ஒப்பாரி வச்சு கூப்பிட்டு பார்த்தேன். நீங்களும் பார்த்தமாதிரி தெரியல்ல. சரி.முதலாவது பக்கத்தையாவது பார்ப்போமே என்று பார்த்தேன். அதில" உயிருள்ள ரோஜா நான், உரிமையில்லாமல் தொட்டுப் பார்க்காதே, முள்ளால் எழுதுகிறேன். இவள் தொடங்க இதழ் புரட்டுகிறாள். தூவாரகா."

அம்முட்டு மட்டும்தான் பார்த்தேன். அப்படியே வச்சிருந்து....இந்தாங்க உங்க டையறி.....ஆளை விடுங்க.....எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். அப்பனே முருகா......ஐயோ......நான் போற பஸ் ......."

ஓடிச்சென்று தாவி ஏறினான் மாதவன். அப்போது......" ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.."
கண்கள் கலங்க நின்று வார்ததைகளால் சொன்னாள்.ஆனால் அவை அவன் காதுகளுக்கு எட்டவில்லை.




எழுதியவர்: தனிமதி.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7121

யார் மீது குற்றம்....?

வானத்தில் சிறகடித்துப்பறக்கும் பறவை போல் நானும் ஒரு காலத்தில், என் எண்ணச்சிறகை விரித்து இந்த உலகமே எனக்கு மட்டும்தான் சொந்தம் என பறந்து திரிந்து கொண்டு இருந்தேன். ஆனால் இன்று கண்ணீரால் உடல் கழுவி, விடும் பெருமூச்சு வெப்பத்தால் காய்ந்து வெந்து துடித்துக்கொண்டிருக்கிறேன்.

பெரிய மாடி வீடு, என் பெட்ரூமோடு சேர்த்து பெரிய சுவிமீங் பூல் போல் குளியறை, வெளியில் செல்ல கார். வீட்டிற்குள் நிறைய பொழுதுபோக்குகள்....ம்.இப்படியே என் வசதியான வாழ்க்கைக்கு பட்டியல் போட்டாலும் பக்கங்கள் நிறைந்து வழிந்துவிடும்.

இன்றோடு என் வயது 18. இதனை சந்தோசமாகக் கொண்டாட யாருமே என் அருகில் இல்லை. எப்படி எல்லாமோ வாழ்ந்த நான் இன்று இந்த சிறு கூண்டுக்குள் சிறைச்சாலை என்னும் இடத்தில் சிறு வெளிச்சத்தில் கண்ணீரால் இதனை எழுதுகிறேன்.

எல்லோரைப்போலவும் 17 வயதில் 12 ம் வகுப்பு முடித்து வெளியேறும் போது, எனது மொழியைச்சேர்ந்த ( தமிழ்) ஆரம்பத்தில் நண்பன் அவன், நாள் செல்லச்செல்ல காதலன் ஆனான். எப்படியாவது அம்மா, அப்பாவிடம் கூற வேண்டும் என முடிவெடுத்தேன்...அடிக்கடி போன் கதைப்பதைப்பார்த்து வீட்டில் பூகம்பம், போனை பறித்து வைத்தார்கள். கடுமையான காவல் போட்டார்கள்.

யாருமே என்னோடு அன்பாக கதைக்கவில்லை. அம்மாவின் அப்பாவின் சொந்தங்கள் எல்லோருக்கும் நான் பிழைவிட்டதாகச்சொல்லி என்னை வேறு நாட்டிற்குப் போகும் படி சொன்னார்கள் முடியாது என அழுது மறுத்தவிட்டேன். பல தடவை அப்பா அறைந்த வடுக்கள் கன்னத்தில் மறையாமல் இருந்தது. அது மறையும் வரைக்கும் என்னை வெளியில் அழைத்துச்செல்லமாட்டார்கள்.

கனடா நாட்டுச் சட்டம் பிள்ளைகளுக்கு அடித்தால் ஜெயிலுக்குப் போகவேண்டும். அதுபோல்தான் ஏனைய நாடுகளிலும் என்பது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரிந்த வியடம்.வீட்டிலும் தனியாக விட்டுச்செல்ல மாட்டார்கள்......எனது கொம்பியுட்டர் எல்லாம் இன்டர் நெட் கட் பண்ணி என்னை வீட்டுக் கைதிபோல் கண்காணித்து வந்தார்கள்.

அம்மா நித்திரைக்குப் போனாலும் எனது ரூம் சாவியை என்னை வைத்துப் பூட்டி எடுத்துவிட்டே தூங்குவா...தூங்குவதாக சொல்லுவா ஆனால் அவ யாரோடையோ வெகு நேரம் போனில கதைப்பா.......நான் குளிக்கும் போதுகூட பாத்றூம் கதவு சாத்தக்கூடாது என நிர்ப்பந்தம். அதற்காக கதவின் மேல் தடித்த டவள் போட்டுவிடுவா .இன்று இந்த ஜெயிலில் வாழ்வதைவிட மிகவும் கொடுமைப்பட்டே வாழ்ந்தேன்.

ஒரு நாள் நான் மயங்கி விழுந்துவிட்டேன். டொக்டரிடம் கொண்டு போனார்கள். அப்போது காரில் ஏறும் போது ஓடிவிட்டேன். எனது காதலனுக்கு போன் போட்டேன். அவனும் அந்த இடத்திற்கு வந்தான். இருவரும் ஒரு இத்தாலி நண்பன் வீட்டில் ரூமில் இருந்தோம். அம்மா அப்பா பொலிசுக்குப் போன் செய்த போது.....அவர்கள் 16 வயதிற்கு மேல் அப்படியிருக்கலாம் என்று நிராகரித்து விட்டனர்.கொஞ்ச நாள்தான்....மீண்டும் நான் சிறகடித்துப்பறந்தேன்.

என் காதலனுடன். என்னை படிப்பிப்பதாகச்சொன்னான். நம்பினேன். என்னையே கொடுத்தேன். அவன் ஆசைப்பட்ட நேரமெல்லாம் என்னோடு அவன் பொழுதுகள். அவனே தெய்வம் என்று வாழ்ந்தேன்.ஒரு நாள் வரவேயில்லை. அந்த வீட்டில் நான் தனியாகஇருந்தேன். போனில பேசினான். கார் பழுதாகிவிட்டதாகச் சொன்னான். நம்பினேன். மறு நாள் வந்தான் , கண்டவுடன் கட்டிப்பிடித்து ஓ....என்று அழுதேன்.

என்னை விட்டிட்டு எங்கேயும் போகாத என்று கதறினேன். ம்ம்.....என்று விட்டு போனில் யாரோடோ பேசினான். மீண்டும் நண்பனுக்கு சுகமில்லை என்று சொன்னான். நம்பினேன்.......உடனே போயிட்டு வருவதாகச் சொன்னான் வரவேயில்லை. இத்தாலிக்கார வீட்டு ஓனர் நல்ல ஆன்டி. அவ அப்பத்தான் 1 மாதம் இத்தாலிக்குப்போயிட்டு வந்தவ. அவ சொன்னா.......முதல் யாரோ பிலிப்பையின் கார பிள்ளையோட இவன் வந்து தங்கிப்போனவன்.

நான் கேட்டதிற்கு தன் கேர்ள் பிரண்ட் என்று சொன்னவன் என்றும். இவன் நல்லம் இல்லை. நீ உன் பேரன்ட்சோட போயிடு என்றா.எனக்கு தலைசுற்றியது. நம்ப முடியாமல் இருந்தது. எதுக்கும் அவன் வர கேட்போம் என்று இருந்தேன். மறு நாள் வந்தான்.....உடனே கேட்டேன். பளார் என்று அறைந்தான். அவ சொன்னா நீ நம்புவியா எனக் கேட்டான். ஐயோ மன்னித்துக்கொள் என காலைப்பிடித்து கெஞ்சினேன். கோபித்துக்கொண்டு போனான். பின்பு வந்தான். நாம வேற இடம் பார்க்க வேண்டும் என்றான். சரி என்றேன்.

நாளாக அவன் வரவேயில்லை. என் நிலமையை எண்ணி தலையில் அடித்துக்கொண்டேன். அம்மாதானே எப்படியும் என்னில் பாசம் இருக்கும் என்று அம்மாவிற்கு போன் போட்டேன். நான் பகுதி நேரமாக வேலை செய்ததால் கொஞ்ச பணம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு அம்மாவிடம் போக முடிவெடுத்தேன். அம்மா என் குரல் கேட்டவுடன் சீ நாயே என்று வைத்துவிட்டா. எனது சித்தி, பெரியம்மா, அத்தை, மாமா இப்படி எல்லோரையும் கெஞ்சினேன்.

உன்னை வீட்டில வைத்திருந்தால் எங்கிட பிள்ளையும் கெட்டுவிடும் என்றார்கள். செத்துப் போடி என்று கூட சொன்னார்கள்.மனம் மீண்டும் அவர்களை நாடியது. பலனில்லை. அம்மா வீடு போனேன்.அழுதேன்....மன்னிப்பு கேட்டேன். அப்பா தன்ர ஆட்களை கூப்பிட்டு என்னை வெளியில் மழைக்குள் தள்ளி விட்டார். யாரோ அங்கிள் எனக்காக கதைக்கப் போனார்.

அவரையும் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டனர் என்னைப் பெற்றவர்கள்.என்னிடம் இருக்கும் பணத்தில் ஒரு பாருக்குப்போனேன். எனது உயரத்தை பார்த்து விட்டு ஐடி எதுவும் கேட்காமல் எனக்கு 18 என்று சொல்ல நம்பி விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குடித்தேன். பெயர் தெரியாத வகை வேண்டி குடித்தேன். சத்தி எடுத்தேன். கவலைகள் மறந்தேன். பல தடவை போனேன். அதன் பிறகு ஒரு நாள் ஐடி கேட்டு பிடிபட்டுவிட்டேன்.இதோ இந்த ஜெயிலில் நின்மதியாகயிருக்கிறேன். என்னை வெளியில் எடுக்க யாருமே எனக்கு இல்லை. இன்றோடு எனக்கு 18 வயது.

ஒரு பிள்ளை லவ் பண்ணுவது குற்றம் என்றால் எங்க அம்மா, அப்பாவும் லவ் மரேஜ்தான். ஏன் அவர்கள் குற்றம் செய்யவில்லையா. நான் லவ் பண்ணினால் ஏன் அவர்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களால்தான் நான் இன்று இந்த நிலமைக்கு ஆளானேன். மன்னிப்பு கேட்டுக்கூட போனேன். ஏன் மன்னிக்க மறுத்தார்கள். பெற்ற பிள்ளையை விட மானமும், உறவுகளுமா பெரிது.

இப்பொழுது நான் தெளிந்து விட்டேன். எனக்காக மட்டும் வாழத் துணிந்துவிட்டேன். என்னாலும் நாலு ஏழைகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என வாழப்போகிறேன். இன்றோடு என்னை வெளியில் அனுப்பப்போவதாகச் சொன்னார்கள். அம்மா, அம்மா என்கிறார்கள். இப்படியும் அம்மா மார்கள் இருக்கிறார்கள்.நீங்கள் சொல்லுங்கள் யார் மீது குற்றம்

முற்றும்.

ஆக்கம்: தனிமதி
www.nilafm.com

Monday, April 28, 2008

சித்திரைப் புத்தாண்டு தொடர்.......2

ஒன்றல்ல இரண்டல்ல, பல நூறு கஸ்டங்களையும் பார்த்து பழக்கப்பட்டவள் கௌசி. சில பேர் பணம் கொடுக்காமல், பின்பு தருவதாகச் சொல்லி தைத்த உடுப்புக்களை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோய்விடுவார்கள். அதிகம்பேர் மட்டுமட்டாக துணியைக்கொடுத்து விட்டு, மிச்சத்துணிபற்றி பேச்செடுப்பார்கள். இப்படியாக எல்லாத் துன்பங்களையும்இ அடுக்கடுக்காய் கட்டி ஆள்பவள் தான் கௌசி. சொன்னபடி, வட்டிக்காற சின்ராசுக்கு 1000.00 ரூபாக்களை சேர்த்து கொண்டு கொடுப்பதற்காய் ஆயத்தமானாள். ஏழை உப்பு விற்கப்போனால் மழைவரும் என்பது போல், இவள் வாழ்விலும் புயல் வந்தது போல், அவள் கணவன் குமார் அங்கு வந்தான். கௌசிக்கு விளங்கிவிட்டது. தனக்கு ஆபத்து வந்துவிட்டது என்று. அதனால் தன் பணத்தை மறைத்துவைக்கமுற்பட்டாள். இதனைக்கண்ட குமார் கையாலும் காலாலும் வழமைபோல் அடிஉதைதான். அவள் எவ்வளவோ போராடியும் அவளாள், அந்த அரக்கனிடமிருந்து அந்தப்பணத்தை காப்பாற்ற முடியவில்லை. மீண்டும் துன்பக்கடலில் துடிப்பில்லாத படகு போல். தத்தளித்தாள்.அவளுக்கு உதவ என்று எவரும் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் குமாரின் சுடுசொற்களால் யாரும் உதவ முன்போவதில்லை. ஒருமுறை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கௌசிக்காக கதைக்கப்போகவே....குமார்.....கௌசியையும், அந்தப்புனித பாதிரியாரையும் சேர்த்து வைத்து கதைத்ததில் ஊரே தங்களுக்கு ஏன் வம்பு என்று மௌனமாக இருந்துவிடுவார்கள். கௌசி சாதரணவீட்டு குடும்பத்தில் பிறந்தவள் தான். குமாரை விரும்பி திருமணம் முடித்தவள். 2 குழந்தைகளும் பிறக்கும் மட்டும், சந்தோசமாக வாழ்க்கையை ஓட்டிச்சென்றனர்கள். இனப்பிரச்சனை காரணமாக இடம்பெயர்ந்து திருகோணமலைக்கு வந்து குடியமர்ந்தனர்கள். அப்போது தான் குமார் ஒரு தனியார் கடை ஒன்றில் வேலை பார்த்தான். அந்தக்கடையின் முதலாளியின் மகளுக்கும், குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் அவளை இரண்டாம்திருமணம் முடித்து அவளோடே குடும்பம் நடத்தி கடையையும் கவனித்தான். இத்தனைக்கும் கடையின் முதலாளி இறந்தது அவனுக்குச் சாதகமாகிவிட்டது.எப்பாவது இருந்துவிட்டுதான் கௌசியின் வீட்டிற்கு வருவான். அன்றும் அப்படித்தான், குமார் வந்தான். அவனுக்கு ஆயிரம் ரூபாய் என்பது பெரிய காசு இல்லை. இருப்பினும் ஏனோ அவளிடம் இருப்பதை பிடுங்கவேண்டும் என்ற வெறி அவனுக்கு. பொறுத்தாள் கௌசி. பிள்ளைகளுக்கோ அப்பா ஏன்தான் வருகிறார் என்று தங்களுக்குள் கதைப்பார்கள். அவர்களுக்கு தகப்பனைக்கண்டாலே வெறுப்பு. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை போல், கௌசிக்கும் சின்ராசு அண்ணன் உதவிசெய்தார். குமாரின் பேச்சுகளை அறிந்தவர். அதனால் தன்மனைவியுடன் சேர்ந்து கௌசிக்கு 8000.00 ரூபாயிக்கு ஒரு தையல் மெசின் எடுத்துக்கொடுத்தார். அதன் கடனைவட்டியோடு சிறிது சிறிதாக அடைத்துவந்தாள். " நாளை வருடப்பிறப்பு. பிள்ளைகளுக்கு ஒரு புது உடுப்பு தனிலும் இல்லை. எப்படியாகினும் இன்று துணிவேண்டினால் வழமைபோல் இரவிரவாக தைத்துவிடுவேன்" என்று எண்ணியவளாக...... தன் சோகத்தை மனதில் புதைத்து வைத்துக்கொண்டு, தன் பிள்ளைகளை பக்கத்து வீட்டு லீலாவிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவசரவசரமாக திருகோணமலையில் மார்கட் சின்னக்கடை என்று சொல்லும் இடத்திக்கு ஆட்டோவில் சென்றாள்.திடீர் என்று மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். பல ஆயுதம் ஏந்திய காடையர்கள் கண்மூடித்தனமாக ஆட்களை வெட்டுவதும், தமிழ் கடைகளை தீயிட்டு கொளுத்துவதுமாக தங்கள் இன வெறியாட்டங்களை நடத்தினார்கள். இதில் சிக்குண்டோர் விபரம் அதிகம். கௌசியும் இதில் தான் காடையர்களால் 13.4.06 கொல்லப்பட்டாள். பாவம் அந்தக்குழந்தைகள் தாயின் இறுதிச்சடங்கைக்கூட பார்த்திருக்கவில்லை. குமார் வந்து தன் பிள்ளைகளை தன்னோடு அழைத்துச்சென்றான். இருப்பினும் குமாரின் இரண்டாவது மனைவிக்க இந்தப் பிள்ளைகளை தாங்கள் பொறுப்பேற்பது கொஞ்சமும் இஷ்டமில்லை. இதனால் குமாரின் சம்மதத்தின்பேரில் அக்குழந்தைகள் அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னமும் அக்குழந்தைகள் கதறுவது......." அம்மா பாவம், எங்களுக்கு உடுப்பு வேண்டத்தான் போனவ, இனிமேல் எங்களுக்கு சித்திரைப்புத்தாண்டே வேண்டாம். எங்கள் அம்மா தான் வேணும்.....அம்மா....அம்மா.....அம்மா......தேம்பி அழும் குழந்தைகளுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது.......? (முற்றும்)

இதன் சம்பவங்கள் முற்றிலும் உண்மை. ஒருசில கற்பனைகள் மாத்திரமேகதையாகவுள்ளது.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

சித்திரைப் புத்தாண்டு.( பகுதி...1.)

அம்மா...."எனக்குச்சட்டை தைச்சிட்டீங்களாம்மா"....."அம்மா...எனக்கு முதல தைக்கணும்....சரியாம்மா...." இந்த குட்டிகுட்டி சண்டைகளெல்லாம் கௌசல்யாவிற்குப்பழக்கப்பட்டது தான். அதனால் பெரியவள் நிலானியின் கதைக்கும் சின்னவன் கௌதமின் கதைக்கும் காதே கொடுக்காமல் தையல்வேலையில் மும்முறமாக இருந்தாள் கௌசி. வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே, "கௌதம்........ஆர்என்று பாருங்கோ ராசா...." அம்மா........சரோ ஆன்டி......." அட கடவுளே...இன்னும் அவவின்ற உடுப்பு வெட்டவேயில்லை........இப்ப வந்திருக்கிறா.....என்ன சொல்லப்போகிறானோ....கடவுளே நீதான் துணை....மனததிற்குள் தன் பாட்டிக்கு பேசியவளாக, சரோவைக்கண்டவுடன்....என்னசொல்லுவோம் என்று..நினைத்தவளாக....."வாங்கோ....சரோ...என்ன இண்டைக்கு வந்திருக்கிறீங்கள்....வருசம்பிறக்க இன்னும் 3, 4 நாள் இருக்குதானே..."என்ற வார்த்தைகளை சொல்லி முடிக்க முன்பே....சரோவிற்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு..." அப்ப இன்னும் எங்கட உடுப்பு தைக்கவேஇல்லையா.....என்ன கௌசியக்கா.....நீங்கள் சொன்னடேட்டிக்கு தருவீங்கள் என்று தானே உங்களை நம்பி தந்தனான். இப்ப இன்னும் வெட்டவேஇல்லை என்றால்.....என்னமுடிவு....?""இல்ல சரோ எப்படியும் முடிச்சிடுவேன்....குறை நினைக்காமல்.....நாளண்டைக்கு வருவீங்களோ......" "இஞ்ச பாருங்கோ கௌசியக்கா.....நீங்கள் நினைச்சு நினைச்சு சொல்லுவீங்க.....அதெக்கெல்லாம்....நான் தலையாட்ட.....என்ன தலையாட்டி பொம்மையா.....? அதைவிட இப்படி அலைக்கழிய ஆட்டோவிக்கே....100, 200 என்று முடியுது. இதல்லாம் ஆர் தாறது? கொஞ்சம் என்றாலும் எங்களையும் நினையுங்கோ.....இப்படி சொல்லிட்டன் என்று மனதில ஒன்றையும் வைக்காதீங்கோ....அக்கா, என்ற நிலமையில் இருந்து பார்த்தால் தான் உங்களுக்கு விளங்கும்......அப்ப நான் நாளண்டைக்கு நம்பி வாறன் என்ன.." கட கடவென சொல்லவேண்டியதை யெல்லாம் சொல்லிவிட்டாள் சரோ.இப்படியான ஏச்சுக்கலும், பேச்சுக்கலும் கௌசிக்கு பழக்கப்பட்டு போனாலும்......தன் நிலையை நினைத்து கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இதனைப்பார்த்த நிலானி...." ஏம்மா அழுற.....அம்மா.....ஏம்மா .......அந்த அன்டி உங்களை...பேசிறா......?"பிள்ளைகளுக்கு முன்னால் தன் சோகத்தை மறைத்தாள். நிலானியிடம் காசை கொடுத்து பக்கத்து கடையில் பாண் வேண்டி பிள்ளைகளுக்கு சாப்பிடக்கொடுத்து விட்டு. தானும் சாப்பிட்டுவிட்டு...தொடர்ந்தும் தன் தையல்வேலையில் கவணத்தை செலுத்தினாள்.கௌசி.....என்று வாசலில் கூப்பிட்டுக்கொண்டே.....ஜாமினியும், கணவரும்...வந்திருந்தார்கள். "வாங்கோ...வாங்கோ.....உங்கட சாறிபிளவுசும், மாமியின்ற பிளவுசும், சுவேதாவின்ற சட்டையும் தைச்சுப்போட்டேன்....இந்தாங்கோ...." என்று முகமலர்ந்து கையிலே கொடுத்தாள்.மனதிலே ஒருவித சந்தோசம்...எப்படியும்...2 பிளவுஸ், 1 சட்டை. ஒரு 300.00 ரூபா வரும். அத்தோட இன்னும் 250 சேர்ந்தால்.. சொன்னபடி வட்டியை பிறகு கொடுத்தாலும் முதல 1000.00 ரூபாவை கொடுக்கலாம். என்று எண்ணியவளாக இருந்தால். ஜாமினி சாறிபிளவுசினை போட்டு பார்த்து அங்கையும், இங்கையுமாக இழுத்து இழுத்து என்ன குறை இருக்கு என்று பார்த்தாள். இவள் இப்படிபார்ப்பது கௌசிக்கு புது அநுபவமில்லை. அதனால் எப்படா இந்த ஜாமினி போகும் என்றே நினைத்தாள்.... ஒருவாறு ஜாமினிக்கு பூரணதிருப்தி."அப்ப எவ்வளவு காசு என்று சொல்லுங்கோ" என்றாள் ஜாமினி. " 3 ற்கும் 300.00 தாங்கோ" என்று பதிலை சொன்னாள் கௌசி. " என்ன 300.00 ஆ என்று கேட்டது மட்டுமல்லாது....25, 50 ஐ குறையுங்கோ எனக்கேட்டுக் கொண்டாள். எதுவுமே பதில் சொல்லாது தன் கஸ்டத்தையும் வெளிக்காட்டாது மௌனமாய்....உள்ளுக்குள்ளே துன்பத்தையும், வெளியிலே போலியான புன்னகையையும் வரவழைத்து சிரித்துக்கொண்டு நின்றாள் கௌசி.

கௌசியின்....துன்பத்திக்கு இறைவனருள் கிடைக்குமா...? இன்னும் என்னதுன்பம் படப்போகிறாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா...? நேரம் கிடைக்கும் போது தொடர்கின்றேன்.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com

பாலகனின் பார்வை..

குடும்பம் ஒரு கோவிலாக, எல்லா குடும்பத்தாலும் வாழ முடிவதில்லை. அப்படி கோவிலாக வாழும் குடும்பத்தில் சந்தோசம் என்பது, நிலைத்திருப்பதில்லை. அப்படி தான் இந்தக்குடும்பத்திலும்.அம்மா அப்பாவிற்கு 3 பிள்ளைகள் அதில் ஹென்றி, 3வதாக பிறந்த 4 வயதுச்சிறுவன். படிப்பிலும் சரி, விளையாட்டுத்துறையிலும் சரி பேச்சிலும், மிகச்சிறந்த பையன் ஹென்றி. யாராவது அவனைப்பார்த்தால் காணும், இரண்டு வார்த்தை கதை கேட்காமல் போகமாட்டார்கள். அந்தளவிற்கு, பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் சுட்டித்தனமான துரு துரு வென்ற கண்கள். ஹென்றி தினமும், தன் வீட்டிக்கு அருகாமையில் இருக்கும் வீட்டு பிள்ளைகளோடு மகிழ்ந்தே விளையாடுவான். அவன் விளையாட வருவது, ஒரு தமிழ்குடும்ப பிள்ளைகளோடு தான். தினமும் வரும் ஹென்றி, ஓரிரு நாட்களாகவே விளையாட வரவில்லை என்று, அந்தத் குடும்பத்திடம் சென்று விசாரித்தனர், இந்ததமிழ் குடும்பத்தினர்.அப்போது மிகவும் கவலை தரும் சம்பவத்தை கேட்கநேரிட்டது. ஆம் அந்த 4 வயதுச்சிறுவன் ஹென்றிக்கு, கண்ணிலே கான்சர் நோய். இதனால் ஒரு கண்ணை வைத்தியர்கள் அகற்றினார்கள். இத்துயர் நடைபெற்று பெற்றவர்களோடு அத்தனையுள்ளங்களும் சேர்ந்து துயரத்தில் இருக்க மற்றுமொரு அதிர்ச்சி. ஹென்றியின் மற்றைய கண்ணையும் அந் நோய் தாவிவிட்டது. இதனால் அந்த கண்ணையும் அகற்ற வேண்டும் என வைத்தியர்கள் கூறவே இச்செய்தியறிந்து பெற்றவள் மயங்கி விழுந்தாள். ஒரு கண்ணால் தன் தாயை பார்க்க வேண்டும் என அழுதான் ஹென்றி. தாயும் மகனுடன் இருக்க. வைத்தியர்களிடம், ஹென்றியுடன் படிக்கும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் அந்தச்சிறுவனுக்கு கண் தானமாக கொடுக்க முன் வந்தனர்கள் பலர். ஆனால் எதுவுமே பயனளிக்கவில்லை. ஹென்றியின் பார்வை நரம்புகள் அடீயோடு செயலற்றுப் போய்விட்டதாக வைத்தியர்கள் சொன்னார்கள்.நாளாந்தம் கூட்டம் கூட்டமாக ஹென்றி தங்கியிருக்கும் வைத்தியசாலையை ஆயிரக்கணக்கானோர் சென்று ஹென்றியுடன் படம் எடுப்பதும், ஹென்றியின் விருப்பத்தை பூர்த்தி செய்வதுமாக அலையலையாய் திரளாய் மக்கள். இதில் இந்த தமிழ் குடும்பமும் அடங்குவர்.மறு நாள் கண்அகற்றப்படும் நாள். முதல் நாள் ஹென்றியிடம் கேட்டனர், ஹென்றி, உங்களுக்கு என்ன பார்க்க ஆசையாகவுள்ளது ? எனக்கேட்டனர். அதற்கு தன் அம்மா தன்னோடு தான் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றான். அடுத்து தன் அப்பாவும் மற்றைய 2 சகோதரர்களோடும் நிறைய பார்க்க வேண்டும் என்றானாம். அவனை படிப்பித்த ஆசிரியர்கள் வரவே , அவர்கள் மூலம், கடைசியாக படிக்கவேண்டும் என்று ஆசைப்படவே, அதற்கான ஒழுங்குகள் வைத்தியசாலையில் ஏற்பாடு செய்தனர்கள். ஹென்றிக்கு கிரிகெட் என்றால் நல்ல விருப்பம். இதனால் அவர்களையும் பார்க்க விரும்பி, அவுஸ்திரேலியா கிரிகட் விளையாட்டு வீரர்கள் வைத்தியசாலை சென்று ஹென்றியின் ஆசையைகண்ணீரோடு பூர்த்திசெய்தனர்.இரண்டு கண்களையும் இழந்து அந்தச்சிறுவன். இன்னும் மகிழ்ச்சியாக வாழ்கிறான். தனக்கு இனி கண் பார்வை வராது என்று தெரியாமல், வரும் என்ற நம்பிக்கையோடு.

இந்தச்சம்பவம், அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் தங்கை, மனவேதனையுடன் தொலைபேசியில் கூறியதை, கதையாக வடித்துள்ளேன். அந்தச்சிறுவனின் வாழ்க்கைக்கு இறைவன் துணைபுரிய வேண்டுகிறேன்.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

இவர் எங்கே...?

கைப்பையைத் திறந்துபல தடவை படித்து முடித்தபுத்தகம் அது.. இந்த 5 மணிநேர ரயில் போக்குவரத்திற்குஇப்போது அவளுக்குத் துணையாகியிருந்தது...எதேச்சையாக எதிராய் இருந்தவர் மீது சரிவாய்ஒரு பார்வை..... ம்.......பாரன் ஆளை இவ்வளவு நேரமா என்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறாரே.. ம்கூம்....என்று மனதில் திட்டி முதுகை மட்டும்பக்கவாட்டில் திருப்பி மீண்டும் கண்கள் எழுத்துக்ளை படம்பிடித்தது... மனதோ எதிரே இருந்தவர் மீது அதிகமாகியது.ம்......இப்போது பார்ப்போம்....மனது பேசிக்கொண்டதுஅடச்சீ.......என்ன மனுசன் இப்படி விழுங்குமாற்போல...இந்த கூட்டத்தில மாறிக்கூட இருக்கமுடியாதே.....மெதுவாய் ஒரு புன்முறுவல்...எதிரே இருந்த அழகிய மானைக்கண்டுயார் தான் பார்க்காமல் போவார்கள் அப்படி ஒரு அழகு.. இதில் இவன் இப்படி பார்ப்பதில் தப்பேயில்லை.அவளை கண்களால் சாடை காட்டி எப்படி என்றான்.. அவளும் கண்களில் 50 கிலோ நெருப்பை கொட்டி எரித்துப்பார்த்தாள். அவன் உதட்டில் அன்று விரிந்த பூவிதழ் போல் மெலிதான புன்னகை.. அப்போது தான் ரயில் ஏதோ ஒரு தரிப்பில் நிற்க..அவசரமாய் ஒருவர் இறங்கினார்.. ... அடடா அந்தக்குயிலின் பக்கத்தில் இடம் ஒன்று காலி..என் மனமும் அதையே நாடி... பக்கத்தில் வரட்டுமா என்று...மீண்டும் கண்களில் தயாரித்தஅன்றையகுறுந்திரைப்படமாக..அவளுக்கு ஒரு காட்சி... ..ஐயோ.........என்று....பழைய குங்குமம் புத்தகத்தினால் தன் தலையில் அடித்துக்கொண்டாள்....பல மணி நேர இடைவேளை எதுவுமே இல்லை. மெதுவாக எட்டிப்பார்ததாள்...ஆள் அசதியான தூக்கம்....அப்பாடா.....நானும் நின்மதியா தூங்கலாம். ஆழ்ந்த உறக்கம் தூக்கத்தில் ஆழ்த்தியது.பலமக்களின் பேச்சுத் சத்தங்கள் காதை ஊடுறுவ..மெல்லக் கண்களை திறந்து பார்த்தாள்...எங்கே இவர்...எதிரேயிருந்வரைக் காணல்லையே...? எங்கே போயிருப்பார்....???? ம்.....ம்..ரெயில் நின்ற படியால் ஏதும் வேண்டப்போயிருப்பார் போலும்.. மனது அடிக்கடி எட்டி எட்டி பார்க்கச் சொன்னது. அவளும் பார்த்தாள்.ம்..........வரவேயில்லை....விசில் சத்தத்துடன் ரெயில் புறப்பட்டது.அவளின் மனதோ வேகமாக அடித்துக்கொண்டது. ஓடிச்சென்று வாசலின் பக்கத்தில் கைபிடியை பிடித்தபடி காற்றில் அவள் கூந்தல் கலைய மனமோ....அவரைத்தேடி கண்களால் வலை வீசியது.தென்படவில்லை....அழுதாள்..கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் .....பின்னால் ஒருவர்....."பெஸ்ட்டு கண்ணே பெஸ்ட்" என்று கட்டிப்பிடித்தார்.என்னங்க..நீங்க....இப்படிச்செய்திட்டீங்களே......நீங்க மட்டும் இப்ப வரல்லைன்னா......நான் குதிச்சிருப்பேன்.அடடா என் மனைவி கோபத்திலும் குழந்தை மாதிரித்தான்......எல்லாம் இந்த"குங்குமம்" புஸ்தகத்தினால் வந்த விபரீதம்.ஹைய்.பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட் அப்பவே வேண்டி தந்திருந்தால் நமக்கேன் இந்த சண்டை......?நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், இந்த மாதிரி குட்டி குட்டிச் சமாச்சரங்களில் தானடி என் பைங்கிளி.

முற்றும்

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com

புரிந்துணர்வு..

பல பெண்களின் போட்டோக்களை தரகர் காட்ட, சிவராமனும், மனைவி சாவித்ரியும் ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்துக்கொண்டிருக்க அங்கே மகன் சாரங்கனும் வேலையால் வீட்டிற்கு வந்தான்.அடடா வந்திட்டியா சாரங்கா....கொஞ்சம் இங்க வந்து உட்காரு...ஓம்.வாறன்....இந்தப்படங்களில உனக்கு யாரைப்பிடிச்சிருக்கு என்று சொல்லு...அட வெட்கப்பட்டா சரியாகுமா...? சொல்லுங்க தம்பி..( இது தரகர்)நோ....நோ...அப்படி ஒன்றுமில்ல.இப்பவுள்ள சூழ்நிலையில என் வருமானம் எனக்கே காணாது. இதில கலியாணத்திற்கு என்ன அவசரம். அதனால வேண்டாம் விட்டிடுங்க.ப்ளீஸ்.யாருடைய பதிலுக்கும் காத்திராமல் எழும்பிச்சென்று விட்டான் சாரங்கன்.மன்னிச்சுக்கொள்ளுங்கோ தரகர்....மகன் சொல்லுவதிலும் ஞாயம் தான். எனக்கு இன்னுமொரு மகள் இருக்கிறாள். அவளுக்கும் இனிதான் சேர்க்கவேணும். இதில எனக்கும் மகன் சொல்லுவது சரியாப்படுகுது.போச்சுடா.......என் டைமே வேஸ்ட் ஆக்கிட்டீங்களே...இனிமே குடும்பத்தில ஏதும் முடிவெடுக்கிறது என்றால் முதலே சம்பந்தப்பட்டவங்கள கேட்டுக்கொள்ளுங்கோ....நான் வாறன்..சில நாட்களின் பின்பு சாரங்கன் ஒரு பெண்ணை வீட்டிற்கு கூட்டிவந்தான். எப்படி அப்பா அம்மாவை சமாளிப்பது என்று தெரியாமல் மெளனமாக நின்றான். இருவரையும் பார்த்து தாய் சாவித்திரி பெரிசாக சத்தம் போட்டு, என்ற வயிற்றில பிறந்து .இப்படிச் செய்திட்டியேடா...என்ன குலமோ, கோத்திரமோ யார் பெற்ற இவளோ......அத பெற்றவங்க சாபத்திற்கு ஆளாகிட்டியே பாவி..எதற்கு இப்ப கத்துறா....இப்ப என்ன ஆகிப்போச்சு..???? சாரங்கன், என் மகன். அவன் ஒரு முடிவெடுத்தா அதில ஞாயம் இருக்கும். அந்த பிள்ள ( பொண்ணு) அவன் கூட வந்திட்டுது. அவவிற்கு என்ன துன்பமோ ..?சாரங்கன்.....நீ இதை பற்றி கவலைப்படாதே. அப்பா நானிருக்கேன். உங்கள் எல்லோருக்கும் சேர்த்து ஆக்கி போட என் சம்பளம் போதும். நீ அம்மா பேசிட்டா என்றதிற்காக வருத்தப்படாதே தெரிஞ்சுதா.. 10 மாசம் சுமந்த வலி இருக்கத்தான் செய்யும். சரி...நம்பி வந்தவளை வாசல்வரை நிற்பாட்டாமல் கூட்டிக்கொண்டு உள்ள போ.உள்ள போன சாரங்கன் கையில உடுப்பு பெட்டியுடன் வந்தான். அப்பா நான் தனியாக என் மனைவி கோமதியுடன் வேற வீடெடுத்து வாழப்போறன். ஐயோ......வேண்டாம்டா ....அப்பா, அம்மா தாங்க மாட்டோம் வேண்டாம். நீ இங்கையே இரு ராசா..நாலு சனம் நாங்க பிரச்சனை எடுதிட்டதா குறை சொல்லும்டா.இல்ல.....நான் இங்க இருக்க விரும்பவி்ல்ல. என்னை போக விடுங்க..வாசல் தாண்டி தன் சயிக்கிளை எடுத்து மிதித்துக்கொண்டு நண்பரை தேடிச்சென்றான் சாரங்கன்.அதுவரை பேசாமல் இருந்த கோமதி...சாரங்கன்...உங்க அப்பா மனசை நோகடிச்சிட்டீங்களே...இல்ல கோமதி.....அப்படி இல்ல. நாங்க அவர் கூட இருந்தால் நானும் வேறு நல்ல வேலை தேட மனசு வராது. அவருக்குச் சுமையாக நானிருக்க விரும்பல்ல. இப்ப குடும்பம் உள்ள சூழ்நிலை எனக்கு நன்றாகத்தெரியும். நான் இதை எடுத்துச் சொன்னாலும் என் அப்பா மனசு தங்கம், வீட்டை விட்டு வெளிய போக விடமாட்டார். நான் எங்கிருந்தாலும் அவங்களை பார்க்கிற கடமையுடன் தான் செயல்படுவேன்.அப்பாவின் ஆறுதலுக்காக சாரங்கன் தங்கை ஜானு..அப்பா அண்ணா பாவம் அப்பா......ஏன் அண்ணா எங்களை விட்டு போனாராப்பா. அம்மா பேசிட்டா என்றுதானே..இல்லம்மா அவன் அப்படிபட்டவனில்ல. ரொம்ப நல்லவன். நாங்க கஸ்டத்தின்மேல் துன்பப்படக்கூடாது என்றுதான் அவன் இந்த முடிவுக்கு வந்தான். தன்னால யாருக்கும் எந்த கெடுதலும் வரக்கூடாது என்ற எண்ணத்திலதான் போயிருக்கான். அப்பா, மகன் புரிந்துணர்வு உணர்ந்து சந்தோசப்பட்டாள் ஜானுவும், அவள் அம்மாவும்...

ஆக்கம்: தனிமதி www.nilafm.com

Sunday, April 27, 2008

ஊருக்கு உபதேசம்...

வழமைபோல் காயத்திரியும், அவள் படிக்கும் பாடசாலை அதிபராக அவள் தாயாருமாகிய கமலாதேவியும், காலை 7.45 மணிக்கு பாடசாலையை நோக்கி காரில் புறப்பட்டார்கள்.பாடசாலை அதிபர் என்றபடியாலோ என்னவோ, காயத்திரிக்கு வீட்டிலும், பாடசாலையிலும் சுதந்திரம் என்பது சுவாசிக்ககூட முடியாத அளவிற்கு கட்டுப்பாடாகவே இருந்தது.இத்தனைக்கும் அவள் சிறுபிள்ளை இல்லை. ஆண்டு 11 வது படிக்கும் மாணவி. வகுப்பிலும் சரி, வேறு எந்த துறையிலும் அவளின் திறமைகளை அறியாதவர் எவருமில்லை. இதற்குக் காரணம் அவள் பெற்றோர்களே என்று பலராலும் பெருமையாக பேசப்பட்டு வந்தாள் காயத்திரி.அன்று பாடசாலையில் ஆண்டுவிழா. வருடாவருடம் இந்த ஆண்டுவிழாவில், அதிபர் கமலாதேவியும் ஏதாவது ஒன்றைப்பற்றி அழுத்தமாக ஆணித்தரமாக பேசுவது வழக்கம். அன்றும் அதிபர் கமலாதேவி " சாதிகள் என்றில்லை, சவால்களாக பேசுவோம்" என்ற தலைப்பில் தனது பேச்சை தொடங்கி அனைவரும் மெய்மறக்கும் வண்ணம் பேசினார்.சபையோர் யாவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். சில நிமிஷங்களுக்கு கைதட்டியோர் கரங்கள் ஓயவில்லை. பாராட்டு என்றால் அப்படிப்பாராட்டுக்கள். அந்த சந்தோசத்தில் அனைவருக்கும் வணக்கம் கூறி மேடையை விட்டு இறங்கி வந்தார் அதிபர் கமலாதேவி. ஓடோடி வந்த இளையதலைமுறை மாஸ்டர் சஞ்ஜீவ், கைகூப்பி தன் பாராட்டைத்தெரிவித்தார்.அவரைத்தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது உணர்ந்து கொண்டார்.அடடா தன்கருத்தை எவ்வளவு அருமையாகச் செவிமடுத்துக்கொண்டார்கள் என்று.நாட்கள் மாதங்களாகி. வருடங்களாகின. காயத்திரியும் அதே பாடசாலையில் தற்காலிக ஆசிரியை ஆனாள். அன்று ஒருநாள் அதிபரின் வருகைக்காக காத்திருந்து, சஞ்ஜீவ் மாஸ்டர், தயவாகக் கேட்டார். " உங்களுடன் பேர்ஷனலாக ஒருவிசயம் கதைக்கவேணும். அதற்கான நேரத்தை எனக்குத்தருவீங்களா " என்று." ஓ...யெஸ்...நீங்க விரும்பினா இப்பவே சொல்லுங்கோ..."மீண்டும் தயவாய் சொன்னார் மாஸ்டர்.." நான் உங்க மகளை சில மாதங்களாக விரும்புகிறேன்.' நாங்கள்......."ஸ்டொப்...., இஞ்ச பாருங்கோ, நீங்கள் வேறஜாதிக்காறங்க.... நாங்க வேற ஜாதி. இந்தக்காலத்தில யார் இதைப் பார்ப்பாங்க என்று நீங்க நினைக்கலாம். ஆனா நானும் என்ற இனம் சனங்களோட தலைநிமிர்ந்து வாழனும். காறிதுப்புற அளவிற்கு நான் நடக்கமாட்டேன். அதனால நீங்க அவளை மறந்திடுங்க.....என் மானத்தை காப்பாற்றுங்க." கையெடுத்து கும்பிட்டு கேட்டார் கமலாதேவி.மறுபேச்சு எதுவுமின்றி விடைகொடுத்தார் மாஸ்டர் சஞ்ஜீவ்.அம்மா ஒரு நிமிஷம், நீங்க இந்த பாடசாலையில் வைத்து சொல்லுகிற ஒவ்வொரு அறிவுரைகளையும் ஏற்று சிறுவயது முதல் அதன்படி நடந்தவள் நான். மகளாகி, மாணவியாக. அதே போல நீங்க சொன்ன அதே அட்வைஸ்தான் " சாதிகள் பற்றி" நீங்க தந்த விரிவான கருத்து என்னையும் உள்வாங்கியது. அந்த நேரத்தில கம்பஸ் முடித்து வந்த சஞ்ஜீவும், என்மீது தன்காதலைச்சொல்ல அதனை நிச்சயம் நீங்களும் ஏற்பீங்கள் என்ற நம்பிக்கையில அன்பை வளர்த்தேன். இப்பவும் சொல்லுறன் நீங்க சொல்லுகிற அறிவுரையைத்தான் நானும் கேட்டு நடக்கிறேன்.எப்ப உங்க மனம் என்னை ஏற்கிறதோ அப்போது வரவேற்றுக்கொள்ளுங்கள் எங்கள் இருவரையும்.உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான். அம்மாவிற்கு அறிவுரை சொல்லி விடைபெற்றாள் காயத்திரி.

ஆக்கம் : தனிமதி

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி