Saturday, June 28, 2008

நாணயம்.

மண்சோலைக் கிராமத்தில் இளைஞனாக குடியேறி, அங்குள்ள பாடசாலை ஆசிரியராகி பின்னர் தலைஆசிரியராக பதவியேற்றப்பட்டு ஓய்வு பெற்றவரே ராகவன் மாஸ்டர்.
காதலித்து கெளரியை கரம் பிடித்து இல்லற வாழ்வில் இனிதே வாழ்ந்து ஐந்து பிள்ளைகளுக்கும் அன்பான தந்தையானார்.



காலச் சக்கரம் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி எத்தனை பேருக்குத்தான் சுழறும்.
ராகவன் மாஸ்டரின் வாழ்விலும் பெரும் பள்ளம் விழுந்தாற் போல் பணக்கஸ்டம் வந்து வாட்டியது. மண்சோலைக்கிராமத்தில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் பெரும் மரியாதைக்குரிய அண்ணன் மகாலிங்கத்தை அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல அடுத்தடுத்த கிராம மக்களும் அறிந்து கொண்டிருந்தனர்.

மனம் கவலை அடந்தால் ஆலய வாசலில் மண்டியிடுவோம். பணம் தட்டுப்பாடானால், கடனாகப் பெற வட்டிக்கடை வாசலில் தவம் இருப்போம்.
ராகவனுக்கு மட்டும் என்ன ஆகாயத்தில் இருந்தா கொட்டப்போகிறது. அவரும் தன் மனைவி மக்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு மகாலிங்கத்தின் வீட்டுக்கதவைத் தட்டினார்.

அடடா வாங்க மாஸ்டர்...வரவேற்புக்கு ஒன்றும் குறைச்சலில்லை. அமோகமான வரவேற்பு. நிலமையை வெட்கப்பட்டும் வேதனைப்பட்டும் எடுத்துக்கூறி பெரியவர் முன்னிலையில் துண்டை விரித்து நகைகளை காண்பித்தார் ராகவன் மாஸ்டர்.

அட இதென்னங்க நீங்க......உங்களுக்கில்லாத பணமா...உங்கட நாணயம் தெரியாமலா மாஸ்டர். உங்கள நம்பாமலா. எடுங்கோ நகைகளை முதலில். எனக்கு உங்கள் மேல் உள்ள நம்பிக்கை ஒன்றே போதுமுங்க.....எவ்வளவு பணம் வேணும் என்றதை மட்டும் சொல்லுங்க...மாசம் 30 ம் திகதி வட்டிப்பணம் தந்தால் போதும்.

சொன்னபடி வட்டிப்பணம் மகாலிங்கம் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் மாரடைப்பால் மரணமானார் மாஸ்டர் ராகவன்.

சொல்லிக்கொண்டு வருவது பிரசவம். சொல்லாமல் கொண்டு போவது மரணம்.
ராகவன் மாஸ்டர் வீட்டில் மரணப்பந்தலும், மங்கிய விழிகளும், மார்பில் அடித்துக் கதறியழும் மனைவி மக்கள் மத்தியிலும்...

அட நான் ஏமார்ந்து போய்விட்டேனே....நகையை வாங்காமல் விட்டது என் மடத்தனம். இந்த மனுசன் தொப்பென்று மூச்சையடக்கும் என்று யாருக்குத் தெரியும்...இப்ப யாரிட்டத்தான் போய் கேட்பது....வாய்விட்டு வெந்து துடித்தார் மகாலிங்கம். இறந்த மனிதனுக்காக இல்லை. முடங்கிய பணமும் இறந்து விடுமா என்ற அச்சத்தில்.

ஒத்தாசை பாடிக்கொண்டிருந்தாள் அவர் மனைவி வதனா. போங்க...ஒரு நிமிசமும் தாமதிக்காது உடனே போங்க.. மையத்தை எடுக்கவிடாம ஒரு வழி பண்ணுங்க....கொடுத்த பணத்திற்கு வட்டியும் முதலும் உடனே வந்து சேர என்ன வழி என்றதைக் கேளுங்க....
அப்பவும் சொன்னனான் யாரையும் நம்பாதீங்க நம்பாதீங்க என்று கேட்டால் தானே....

பொங்கி எழுந்தாள் வதனா. மகாலிங்கம் கூடவே புறப்பட்டு மரண ஓலங்களின் மத்தியில் திடுதிப்பென்று கம்பீரமாக நின்றார்கள். இவர்கள் இருவரும் போதாது என்று அடியாட்களையும் காரில் போட்டு வந்திறங்கிய மகாலிங்கமும், மனைவி வதனாவும் நின்ற காட்சியைப்பார்த்து ஏதோ விபரீதமோ என அயலவர்கள் பின்வாங்கினார்கள்.

இவர்களைக்கண்ட ராகவன் மாஸ்டரின் முதல் புத்திரன் வீட்டிற்குள் ஓடிச் சென்றான்.
அங்க பாருங்கோ அவன்தான் மாஸ்டரின்ர மூத்த மகன். எங்களைக்கண்டவுடன் ஓடி ஒளியிறான். விடாதீங்கோ பிடியுங்கோ....வாங்கடா என்று கத்திக்கொண்டு அறையை நோக்கி ஓட்டம் போட்டார் மகாலிங்கமும் அவருடைய தடியாட்களும்.

போன போக்கில் எட்டி அவன் சேர்ட்டைப் பிடித்து இழுத்தார் மகாலிங்கம். எங்கடா ஓடி ஒளியப்பார்க்கிறாய். அப்பர் அம்போ என்று போயிட்டார். நீயாவது வாங்கின காசக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறாயோ....

நாங்க அந்த மானம் கெட்ட பரம்பரையில பிறக்கவில்லை ஐயா. இந்தாங்க உங்கள் பணம். இதை எடுக்கத்தான் நான் போனேன். என் அப்பா நாணயமானவர். நல்ல மனிதர். உங்கட பணத்தை குருவி சேர்ப்பது போலச்சேர்த்து தன் கையால் நன்றி சொல்லி கொடுக்கவேண்டும் என்று வெளிக்கிட்டபோது தான் இப்படி நேர்ந்தது. உங்களிட்ட பணம் இருக்கலாம். ஆனால் நல்ல மனம் இல்ல. அதை இப்ப நீங்களாகவே காட்டிக்கொடுத்துவிட்டீங்க....

இந்தாங்க எடுத்துக்கொள்ளுங்க உங்க பணத்தை. ஆயிரத்தில ஒன்று தப்பு நடக்கலாம். அதுக்காக எல்லோரையும் கள்ளன், கபடன் என்று எண்ணாதீங்க....நாங்க மிடில் கிளாஸ்தான். ஆனால் மனசால ஹைய் கிளாஸ்.

பேய் அறைந்தது போல வார்த்தைகள் எதுவும் பேசாது நின்ற வதனாவையும், மகாலிங்கத்தையும், சிவந்த ஈர விழிகளோடு....அதிகம் பேசாத மகனே அவர் செய்த நன்றியை நாம என்றைக்கும் மறக்கக்கூடாது. என்று சொல்லியபடி மாஸ்டரின் மனைவி கெளரி.

தலைகுனிந்தபடி நாணயமான மனிதர் என்று சொல்லி பூதவுடலருகே, அந்தப்பணத்தை வைத்துவிட்டு மகாலிங்கம் மனச்சுமையோடு சென்றார்.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: