Sunday, June 22, 2008

ப்ளீஸ் மன்னிச்சிடுங்க...

வழமைபோல அதே பஸ் தரிப்பில் காலை 7.30 மணியிலிருங்து பஸ் வரும் திசை நோக்கி காத்துக்கொண்டிருந்தாள் தூவாரகா.
வழமையை விட அன்று காலை அதிக சனக்கூட்டம் பஸ்சிற்காக காத்திருந்தனர்.

" அடச்சே....இன்னைக்கு என்று இந்த பஸ் இப்படி லேட்டா வரவேணுமா..? எப்படியாச்சும் அந்த புதுசா வந்த மாங்காய் பிடாரி மனேஜருகிட்ட செம பேச்சு வேண்டத்தான் போறேன்.." மனதிலே பொங்கி வந்த கோபத்தில் வார்த்தைகள் வெளிவராது மனத்திற்குள் மட்டும் தீம் தக்க ததுமி தாளம் போட்டுக் கொண்டு இருந்தது தூவாரகாவிற்கு.

"அப்பப்பா.......என்னே சனநெரிசல்.." இதில தோளில பை, கையில புத்தகம்...ம்........இதெல்லாம்....ச்சே.பெண்ணாய் பிறந்ததே பாவம்"
மீண்டும் பேசியது அவள் மனதோடு மட்டும்.

" ஹலோ....ஹலோ......இஞ்ச பாருங்கோ....உங்களத்தான்..புளூ புடவை....இங்க....இங்க...இங்கபாருங்க..."

" ஆ....யாரது.......என்னத்தான் கூப்பிடறமாதிரியிருக்கே..."

எட்டிப்பார்தாள், அந்த இடை இந்த இடை வெளி என்று கூர்ந்து கூர்ந்து பார்த்தாள்...யாருமே அவள் கண்ணுக்கு தென்படவில்லை.

" ரவுடி பசங்க....பொம்பிள பிள்ளைங்கள சயிட் அடிக்க என்றே காலங்காத்தால புட்போட்டில தொங்கி வந்திடுவானுங்க...சீ......கழுதைகள்."

வாயிற்குள் முணுமுணுத்தாள். அவள் இறங்கவேண்டிய இடமும் வந்திடவே. சாறியை கையில் பிடித்தபடி மெதுவாக இறங்கினாள். மீண்டும் அதே குரலில்....

"தூவாரகா......நில்லுங்க....கொஞ்சம் நில்லுங்க..."

அவளும் கண்களில் கதிரவனை வைத்துக்கொண்டு காலில் மாட்டியிருந்த செருப்பை கையில வைச்சுக்கொண்டு......" என்னடா......என்ன...ஆ......என்டா வேணும் உனக்கு....??? என்னோட பேரை எப்படியாச்சும் தெரிந்து கொண்டு....இப்ப வேலையிடத்திற்கே வந்திட்டியா அயோக்கிய நாயே..."

" ஐயையோ......இது எனக்கு தேவையா..??? மாதவா...."

" ஓ...உன் பேர் மாதவனாக்கும்...அதுதான் சொல்லுறியோ..."

" இஞ்ச பாருங்க......ஏனங்க.....நீங்களெல்லாம் படிச்ச பொண்ணுக தானே.ஏன் எப்ப பார்த்தாலும், எந்த இளைஞர்களைப் பார்த்தாலும் வெடுக்கென்று சந்தேகப்படுறீங்க...எங்களுக்கும் உணர்வுகளை மதிக்க தெரியும், எந்தப் பொண்ணும் பார்க்காம நாங்க சயிட் அடிக்க மாட்டோம். ஆமா....
கொஞ்சமாவது பொம்பிள போல பேசுங்க..யாரையும் எடுத்தவுடனே சந்தேகப்படாதீங்க........இந்தாங்க பிடிங்க.உங்க டையறி. நீங்க பஸ்சில ஏறினபோது கீழே விழுந்தது. நான் பின்னால வந்தனான். அதை எடுத்துப்போட்டு எத்தனை தரம் ஒப்பாரி வச்சு கூப்பிட்டு பார்த்தேன். நீங்களும் பார்த்தமாதிரி தெரியல்ல. சரி.முதலாவது பக்கத்தையாவது பார்ப்போமே என்று பார்த்தேன். அதில" உயிருள்ள ரோஜா நான், உரிமையில்லாமல் தொட்டுப் பார்க்காதே, முள்ளால் எழுதுகிறேன். இவள் தொடங்க இதழ் புரட்டுகிறாள். தூவாரகா."

அம்முட்டு மட்டும்தான் பார்த்தேன். அப்படியே வச்சிருந்து....இந்தாங்க உங்க டையறி.....ஆளை விடுங்க.....எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். அப்பனே முருகா......ஐயோ......நான் போற பஸ் ......."

ஓடிச்சென்று தாவி ஏறினான் மாதவன். அப்போது......" ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.."
கண்கள் கலங்க நின்று வார்ததைகளால் சொன்னாள்.ஆனால் அவை அவன் காதுகளுக்கு எட்டவில்லை.




எழுதியவர்: தனிமதி.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7121

No comments: