Friday, November 14, 2008

மனசாட்சி.....7

மங்காவின் நிலையைப்பார்த்ததும், மாயாவிக்கு கவலைஅதிகமாகியது..நா வறண்டது போல உணர்வில் வார்த்தை வெளி வராது.....மெல்லத்திரண்டு தொண்டைக்குள் அடைத்து வந்த சோக உருண்டைகளை எச்சில் இட்டு விழுங்கினான்....மாயாவியின் கை பட்ட உஷ்ணத்தினால் மங்காவும் மெல்ல மெல்ல இமைகளை விரித்தாள், கண்ணெதிரே மாயாவி மங்கலாகத் தெரிந்தான்.....

அவள் கண்கள் கலங்கி நீர் வழிந்து, அவள் உடல்வெப்பத்தால் தடையங்களாக அப்படியேயிருக்க......மங்காவின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் எனத் தன் மனத்திற்கு ஆணிகொண்டு அறைந்தவேதனையை உணர்ந்தான். எதுவுமே பேசாது......இருந்தவனை.....கையை மெதுவாக அசைத்து உயர்த்தி மகனைக்கேட்டாள் மங்கா...

இருக்கிறான்.....ஸ்கூலுக்கு அனுப்பிச்சிருக்கேன்....

தேய்பிறையானாலும் நிலவிலும் ஒளியிருப்பதுபோல மங்கா மெல்லச்சிரித்தாள்.....தனக்கு பொய் சொல்லுகிறார் மாயாவி என்றதை நன்றாக உணர்ந்து கொண்டாள்....தன் நாக்கினால் அடிக்கடி உதட்டை நனைத்துக்கொண்டாள்.....அவளுதடு காய்ந்து வெள்ளைத்தோலுரிந்தது போலயிருந்தது....பார்க்கவே பரிதாபமான காட்சியது...

இனியும் அங்கிருக்காமல்.....தான் திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறுகிறான்....மாயாவி.

என்ன தம்பி அவங்க உடல்நிலை எப்படியிருக்கு...? இங்க வச்சிருக்காம டவுண் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போங்க.....எப்படியும் அங்க மருந்துவசதிகள் இருக்கும்.....ஆனா போக 300, 400 ஆவது செலவாகும்.....ம்....சரியிங்க என்று இடைமறித்து அறுதல்கூறியவருக்கு தலையாட்டி நன்றி கூறிவிட்டு கோபாலிடம் செல்ல.அப்பா வருவதைக்கண்டு அவனே எழுந்து ஓடிவர....

அப்பா அம்மாவை நான் பார்க்கல்ல.....நான் போயி பார்த்திட்டு வாறன்......நேற்றும் நான் பார்க்கல்ல...இன்னைக்கும் பார்க்கல்ல.....நான் அம்மாவைப்பாத்திட்டு வாறனப்பா.....விடுங்க கையை...

மாயாவியின் கைப்பிடியிலிருந்து உதறியடித்தபடி ஓடிப்போய் மங்காவின் தனிப்பட்ட திரையை விலத்திக்கொண்டு உள் நுழைந்தான் கோபால்........

அவசரமாக ஓடிச்சென்ற தாதியும், மாயாவியும் அவனை பிடித்திழுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.....என்னப்பா பையனை வளர்த்து வச்சிருக்கிறாய்......இந்த மாதிரி முரண்டு பிடிக்கிறானே.......என்ர பிள்ளையாயிருக்கட்டும் இன்னேரம் நாலு அறைவிட்டிருப்பேன்.....ஒரு சொல்லு பேச்சு கேட்காத பையனாயிருக்கான்....

சிலபேர் சும்மாயிருந்தாலும், எரிகிற நெருப்பில எண்ணெய் ஊத்துகிற மொழி போல நேர்சின் பேச்சு.......இதைக்கேட்ட மாயாவிக்கும் கடுப்பேறியது..சளார் என அவன் கன்னத்தைப்பொத்தி ஒரு அறை.....

அதைப்பாராட்டி அப்படிச் சாத்தவேணும்.என்ற நேர்சின் சபாஷ்....இத்தனைக்கும் நடுவில்...

அம்மா.......எனக் கதறித்துடித்து முகத்தை இரண்டுகைகளாலும் பொத்தி கீழே குந்தியிருந்து அழுதான் கோபால்....அந்த வைத்திய பிரிவு எல்லோரையும் சற்று திரும்பி பார்க்கவைத்தது அந்தக்காட்சி.....ஏன் மங்காவின் காதிலும் அந்தக்குரல் ஒலித்தது....ஆனால் அவளால் எதுவும் பேசமுடியாது கண்களைத்திறந்து மூடும் போது வழிந்தோடும் கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது...

அறைந்தபின்புதான் மாயாவிக்கு அடச்சே....என்ன காரியம் செய்துட்டன்.பாவம் புள்ள.அப்படி என்னத்தக்கேட்டுப்புட்டான்......எத்தனை ஆசைகளை தனக்குள்ளே புதைச்சு வச்சு.ஒருநாளாவது அந்தப்பிள்ளைங்க மாதிரி தனக்கு அதுவேணும் இது வேணும் என்று கேட்டிருப்பானா இவன்...அட நான் ஏன் இப்ப மிருகம்போல ஆகுறன்.....கடவுளே என்னப்பா உன் சோதனை.....

வாய்யா.......நாம போவோம்.....

போ நான் வரமாட்டன் போ......

அட வாப்பா.....அப்பாதானே அடிச்சன்.....வாப்பா........கோபாலு நான் பிள்ளைக்கு ஐஸ்பழம் வாங்கித்தாறன் வாப்பா.....எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்கப்பா......

நான் வரல்ல நீங்க போங்கோ.....அடம்பிடிக்கிறான் மீண்டும்.......இவனை இப்படியே விட்டிட்டும் போகமுடியாது....அதனால மாயாவியும் எவ்வளவோ நேர கெஞ்சல்களுக்குப்பின்பு ஒருவாறு தன் அழுகையின் குரலை தாழ்த்திக்கொண்டான்.....இப்போது கூட அவன் சமாதானம் அடைந்ததெல்லாம் பல மாதங்களின் பின்பு ஐஸ்பழம் குடிக்கும் ஆசையில்...

சொன்னபடியே வாங்கிக்கொடுத்தே கோபாலுவையும் கூட்டிக்கொண்டு சாயந்தரம் 4 மணிக்கெல்லாம் கந்தவர்மன் ஐயா வீட்டிற்கச்சென்றான்.....வீட்டுவாசலை கூட்டிக்கொண்டு இருந்த மகேஸ்வரி அம்மாவைக்கண்டவுடன்......

அம்மா.......நான் மாயாவியம்மா....

குரல்கேட்டு...உள் கொழுக்கி போட்டிருந்த கேட்டைத்திறந்து கொண்டு வா மாயாவி வா........என்னப்பா பிரச்சனை...? கொஞ்சம் சொல்லன்.....என்னெண்டுதான் கேட்டுப்பார்ப்போமே...பிறர் கதை கேட்கும் ஆவலில்.....

தன்மனைவி மங்கா கடந்த 5 நாட்களாக படுத்தபடுக்கையாக இருப்பதும், அதற்குரிய வைத்திய செலவிற்கு பணமாக ரூபா 900 அவசரமாகத்தேவைப்படுவதையும் கண் கலங்க உள்ளத்து வேதனையோடு சொல்லிமுடித்தான்....

அம்மா அதற்காகத்தான் ஐயா வரமுதலே இங்க வந்திருக்கிறன்...

ம்..அட நீ என்னப்பா....மக்கு பயனாட்டம்.....அந்த மனுசனிட்ட காசு கறப்பதென்றால் கல்லுல நாருரிக்கிறதுபோல.......நான் நினைக்கல்ல மனுசன் தரும் என்று......பொறு வாறன் என்ற மகேஸ்வரிஅம்மா உள்ளே சென்று ரூபா 100 தாளுடன் திரும்பி வந்தார்.

இந்தாப்பா யானைப்பசிக்கு சோளப்பொரி என்று நினைக்காம இதை வாங்கிக்கோ.....அவரைப்பார்த்து நேரத்தை வீணாக்காம வேறு யாரிட்டையாச்சும் கேட்டுப்பார்....நீ தேங்காய் பறிச்சுக்கொடுக்கிற ஜீவா மாஸ்டரிட்டையும் கேட்டுப்பார்....யாருமே 900 தரமாட்டாங்க......உலகம் அப்படிக்கிடக்கு......கூட இருக்கிற உறவுகளே கும்மாளம் கொட்டிட்டு அங்கால போனப்புறம் கஷ்டமோ, நஷ்டமோ வந்தாக்கூட திரும்பியும் பார்க்கமாட்டாங்கப்பா.....இதுதான் இன்றைய உலகம்.....

அம்மா...நான் அப்படியில்லம்மா......நாங்க சாகுறவரைக்கும் நாயா இங்கேயே காலம் பூராவும் உங்க காலடியில கிடப்போம்....நம்புங்க அம்மா.....இந்தப்பிள்ளையப்பாருங்கம்மா......எங்க இவன் அவன் அம்மாவை இழந்திருவானோ என்று ...

சே.சே...அப்படி எதுவும் நடக்காது......நீ யாருக்கும் அநியாயம் செய்யாதனீ. ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.....வீணாக மனதைக் குழப்பாமல் போய் ஆகவேண்டியதைப்பாரப்பா........

அம்மா மங்கேஸ்வரி கொடுத்த 100 ரூபாவையும் கும்புடு போட்டு வாங்கி மடித்து தன் பாக்கெட்டினுள் வைத்துக்கொண்டு........மகனையும் கூட்டிக்கொண்டு நேரே தன் வீட்டிற்குப்போனான்.....இனியும் யாரையும் கேட்டுப்பலனில்லை........டவுணில இருக்கும் வைத்தியசாலைக்கு மங்காவைகூட்டிச்செல்லும் அளவிற்கு அவனிடம் பணமும் இல்லை....என்ன நினைத்தானோ என்னவோ.....வீட்டிற்குள் சென்றவன்......கோபாலுவின் பாடசாலை பையினுள் அவன் உடுப்புகளை அள்ளி திணித்தான்.......என்ன எண்ணிப்பார்த்தால்.....3 நல்ல உடுப்புகளுக்கும் அதிகமிருக்காது......

மாயாவி அடித்த தழும்பு இன்னும் கன்னத்தில் விரலாக பதிவாகயிருந்தது......எதையும் அறியாது இன்னும் குடிச்சு முடிந்த ஈர ஐஸ்பழக்குச்சியை சப்பிக்கொண்டு இருந்தான் கோபால்.....

கோபாலு.......போயி.......போயி....அம்மம்மாக்கு சொல்லிட்டுவா ராசா....

ஏனப்பா.நாங்க எங்க போறம்...?

நான் சொல்லுறன்......முதல்ல அந்தப்பெரியவங்களுக்கு சொல்லிட்டு வாப்பா.....அவசரத்திற்கு அந்த அம்மா உனக்கு ஊட்டி வளர்த்தவங்க....அதை நாம மறக்கக் கூடாதுப்பா.....சொந்த உறவாக இல்லாவிட்டாலும், அதுக்கும் மேலாக அந்தக்காலணியில அவங்களும்...

சரிப்பா........ஆனா சொல்லுங்க.....நாங்க எங்க போறோம்...?

எல்லாம் சொல்லுறன் நீபோய் சொல்லிட்டு வா.....

அவங்க அம்மம்மா கேட்டா என்ன நான் சொல்ல....?

தூரப்போறன்.....திரும்பி அம்மாகூட வருவேன் என்றதை மட்டும் சொல்லு....

ம்..சரிப்பா.....

திரும்பி வந்த கோபாலுவுடன் மீண்டும் பெரியாஸ்பத்திரி நோக்கி அவன் சயிக்கிள் மிதித்தது....

தொடரும்......(வாழ்க்கைக்கு வழி)


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.

மனசாட்சி.....6

அப்பா...எழுந்திரிங்க....அப்பா.......அம்மாகிட்டப்போகனுமப்பா... அப்பா....எனக்குப்பசிக்குதப்பா....
அடப்போடா அங்கால....

கண்ணைத்திறக்காம ஒருகையால மகனைத்தள்ளிவிட்டான் மாயாவி. அடிக்கடி, ராத்திரி நேரங்களில் மாயாவி குடித்துவிட்டு காலையில எழும்பஏலாமல் இருக்கும்போது மங்கா தண்ணீர் முகத்தில் தெளித்து எழுப்பிவிடுவாள். இதனை அறிந்த கோபாலும் தன் அம்மா செய்வதுபோல தகரத்தினால் மூடியிருந்த ஒருவாளியினுள் (bucket) இருந்த தண்ணீரை இருகைகளாலும் ஏந்தி வந்து மாயாவியின் முகத்தில் தெளித்தான்....

அடி......அடியேய்....மங்கா...விடுடி....வேணாம்டி.....நா ....

இதனைப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கோபால்....இருகைகளையும் கொட்டி துள்ளித்துள்ளி சிரித்தான்...

ஹி...ஹி..ஹி...ஐயோ....அப்பா.அம்மா இங்கில்ல....மறந்துட்டீங்களா...

ஆ.......அட....இம்முட்டுநேரம் தூங்கிட்டேனா...?

மாயாவி...மாயாவி.....அதே காலணியில வசிக்கும் சுந்தரபாண்டியனின் குரலில் மாயாவியின் பெயர் கொண்ட அழைப்பு...

சுந்தரபாண்டியன்......பாண்டியண்ணன் என்று யாவராலும் அன்பாக அழைக்கப்படும் நல்ல தீர்ப்புச்சொல்லும் ஒரு பெரியவர்போலவே அந்தக்காலணி மக்களால் கெளரவிக்கப்பட்ட நபர்.

அதிகமில்லை..ஆனாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது சாதாரணவசதிபடைத்தவர் என்றும் கூறலாம். அவரிடம் மற்றவர்களுக்கு உதவுமுகமாக அதிக வருமானமாக இருப்பது அவருடைய அன்பான பேச்சு...அவர் வருமானமாகப்பெறுவது சிலபேரின் திட்டுக்கள்.

எதுஎப்படியோ..அன்பான அண்ணா பாண்டியன்.

இதோ வந்திட்டேன்ணா....பாய்ஞ்சடித்துக்கொண்டு கட்டியிருந்த லுங்கியை சரியாகக் கட்டிக்கொண்டு வாசலைநோக்கி ஓடிப்போனான் மாயாவி...

ஏன்டா...ராத்திரி குடிச்சியாக்கும்...

அது வந்தண்ணா....உள்ளவாங்கண்ணா....

ஆமா பெரிய வூடு பாரு உள்ள வாறதிற்கு....

சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார்.....

யாருடைய ஞாபகக்கதிரையோ என்னவோ பின்னல்கள் அறுந்த நிலையில வீசப்பட்டு வீதியில இருந்த கதிரையை வீட்டிற்கு கொண்டுவந்து தன் கைத்திறமையால் கயிறுபோட்டுப் பின்னி அழகாக வைத்திருக்கும் அதனை பாண்டியண்ணாவிற்கு இருக்கக் கொடுத்தான்.

இதி உட்காருங்கண்ணா.....இதோ வாய்அலம்பிட்டு வந்துடுறன்..

ம்ம்....நான் போனும் சீக்கிரம் வாப்பா....

சொல்லுங்கண்ணா....

ஏன்யா மாயாவி....நீ திருந்துற எண்ணமேயில்லையாப்பா...? இப்படி குடிச்சிப்புட்டு கிடந்தா உன் வூட்டில அடுப்பெரியுமாப்பா...? நான் இன்னைக்குத்தான் அறிஞ்சேன் நம்ம மங்கா ஆசுப்பத்திரியிலையாம்ண்ணு...
நீ வேற இப்படி குடிச்சிபுட்டுக் கிடந்தா அவவை யாரு கவனிக்கிறது...? ஏன்டா

உனக்கு கொஞ்சம் கூட புத்தியிலையாப்பா.....உனக்கு ஒரு பையன் வேற அவனையாவது ஒரு ஆளாக்கிப் பார்க்கவேணாமா...? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இதே பழக்கத்தில கிடப்பாய்...?

இல்லண்ணா வந்து கவ...லையா..

என்ன.கவலையா..என்ன பொல்லாத கவலை....?
அட குடிப்பா யாரு வேணாம்ண்ணது.....ஆனா...உன் நிலமையை எண்ணிப்பாரு...? ஒருநாள் சோற்றுக்கே தாளம் போடுற நேரத்தில இது உனக்குத் தேவையா...முதல்ல....பணத்தை சேமிச்சுப்பழகு.அப்புறமா முன்னேறப்பழகு...அதற்கப்புறமா உன் இஷ்டம்....நான் இப்ப வந்தது.....மங்காவைப்பார்க்கப்போனேன். அவங்க முதல்ல விடல்ல.அப்புறமா அவ அண்ணன் எண்டு சொல்லிப் போய் பார்த்திட்டு வந்தேன்...

நான் இனித்தான் போகனுமண்ணா .தூங்கிட்டேன்....(தயங்கித் தயங்கிக் கூறினான்..)

ம்.....ம்...அது தெரிஞ்சுதான் அங்க இருந்து நேர இங்க வந்தன்...ஆமா என்னமோ ஊசி போடவேணும்முண்ணுசொன்னாங்க....ஒழுங்கு பண்ணிட்டியா...?

தலையைச்சொரிந்த படி.....இல்லைண்ணா.....ஐயாகிட்ட கேட்டிருக்கேன், இன்னைக்கு சாயந்தரம் வரச்சொல்லியிருக்கிறாரு...

ஓ....அப்படியா...ரொம்ப நல்லதப்பா.மறந்திடாம ஐயாவைப்போய் பாரு...நம்மால முடிஞ்ச உதவியை செய்வோமுல்ல......எதுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அலுவலைப்பாரு மாயாவி...

ஆகட்டும் அண்ணா....

ம்ம்.....நேரம் 9 ஆகப்போகுது....இதில 50 ரூபாயிருக்கு.....நீ வேற 2 நாளா கடையத்திறக்கல்ல எண்டு சொன்னாங்க.செலவுக்கு வச்சிரு....பயனுக்கு சாப்பாடு வாங்கிக்கொடு......நான் அப்புறமா வந்து பார்க்கிறன். போயி மறக்காம ஐயாவைப்பாருப்பா....என்னமோ அந்த அம்மாளுதான் மங்காவைக் காப்பாற்றனும்...

அவ்விடத்தைவிட்டு விடைபெற்றுச்சென்றார் அண்ணன் பாண்டியன்.

அவசரவசமாக உடைமாற்றிக்கொண்டு கோபாலையும் கூட்டிக்கொண்டு கடைக்குப்போய் இருவரும் சாப்பிட்டார்கள். அப்படியே தன் கடைப்பக்கம் சென்றான். கடையைத்திறந்து அன்றைய வருமானத்தை எண்ணாமலே தெரிந்துகொண்டான். 40 ற்கும் அதிகமில்லை.

நேரம் மதியம்...ஆஸ்பத்திரி வாசலில் ஆங்காங்கே சீவப்பட்ட இளநீர் கோம்பைகளும்,சாப்பிட்டு வீசிஎறியப்பட்ட வாழையிலைகளும், அதனைச் சூழ்ந்து தெருநாய்களும், கா...கா...எனக்கத்திக்கொண்டு இருப்பதை பகிர்ந்துண்ணும் காக்கைகளும், எந்தப்பயணிகள் வருவார்கள் எனக்காத்துக்கொண்டிருக்கும் ஆட்டோக்களும்....இது மதியவேளை பார்வையாளர்கள் நேரம் என்று காட்சிகள் படம் பிடித்துச்சொல்லிக்கொண்டிருந்தன.....

மொழிகள் வித்தியாசமின்றி, மதங்கள் வித்தியாசமின்றி உடலும், உயிரும் என்ற ரீதியில் ஒன்றாகக்கூடும் அந்த ஆஸ்பத்திரியில் மாயாவியும் கோபாலும் நோயாளர் பிரிவுக்குச்சென்று மங்காவை பார்க்கச்சென்றார்கள்.....

பார்க்கமுடியவில்லை......மங்காவைச்சூழ்ந்து 4 டாக்டர்மார்கள்....அவள் மூக்கிற்கு செயற்கை சுவாசம் கொடுத்தபடி....செலைன் இரண்டுகைகளிலும் ஏறிய நிலை.....அவள் விழி மேல்நோக்கியிருக்க....பெருமூச்சின் சத்தம் அதிகரிக்க....உடனடிச்சிகிச்சை மேற்கொண்டுஇருந்தார்கள்...

இக்காட்சியைக்கண்ட கோபால் அம்மா.அம்மா எனக் கதறியழத்தொடங்கினான்....அவன் வாயை பொத்துகிறான் மாயாவி.பின்னால திரும்பிப் பார்க்கிறான்...இன்னும் 4, 5 பேர் கூட்டமாக அவனைக்கண்ட...ஒரு சிலர் ....உங்க மனைவிதானேப்பா....

ஆ...ஆமா...

அடப்பாவம் அந்தப்பொண்ணு.ரொம்ப நேரமா பெரிசா கதறிச்சு..ஆனா யாருமே போகல்ல...அப்புறமா இப்பதான் பார்க்கிறன்.......ஏதோ ட்ரீட்மென்ட்....கொடுக்கிறாங்க....

அடக்கடவுளே.அப்படியா...?

அட ஆமாப்பா.....எல்லா மனசுகளும் ஒரே மாதிரியில்லப்பா.....ஏழைங்களுக்கு ஒரு மாதிரியாகவும், கொஞ்சம் வசதி படைத்தவங்களுக்கு வேறு மாதிரியாகவும் பிரிவு பார்த்தே வைத்தியம் பார்க்கிறாங்க.....அங்க பாருங்க...இங்க வந்த இடத்தில அவங்க அம்மா விழுந்திட்டாங்களாம். இன்னைக்கு அவங்க தங்கட ஊருக்குப் போவதாக இருக்காங்க....என்னமா நேர்ஸ் எல்லாம் போயி அவங்கள சுற்றி நின்னு வழியிறாங்க...

மெதுவாக திரும்பிப் பார்த்தான்....அந்த 3 பிள்ளைகளோடு வந்த தந்தை..
ம்.அவர்கள்தான்.....

மங்காவைச் சுற்றியிருந்த அனைவரும் விடைபெற்றனர்....ஒரு தாதியிடம் போய் பார்க்கலாமா எனக் கேட்டுக்கொண்டான்....மாயாவி...

அவளும் அதற்கு பையனை விட்டிட்டுப்போய் பாருங்க என்றாள்..

அதன்படியே மாயாவி அழும் மகனுக்கு ஆறுதல் கூறிவிட்டு.மங்காவின் அருகில் சென்றான்....

தொடரும்....

-------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி

www.nilafm.com