Monday, July 14, 2008

மனசாட்சி.....5

ஏழையின் மனவானிலே ஓலைக்குடிசையும், எதிர்பார்ப்புக்கனவுகளுமே உலகம், இதில் மாயாவி மட்டும் விதிவிலக்கா என்ன....?
கந்தவர்மன் வருமட்டும் அவர் வீட்டு வாசலில் தவமாய்க் கிடந்தான்.அவரும் சாயந்தரம் வேலைவிட்டு வீட்டுக்கும் வரும் போது தூரத்தே கண்டுகொண்டார் அங்கே நிற்பது மாயாவிதான் என்று.....

வரும் போது கந்தவர்மன் வாங்கி வந்த காய்கறிகளை ஒருபக்கமாக எடுத்து மாயாவிடம் கொடுத்து அம்மாட்ட கொடு என்று கண்ணால ஜாடை செய்தார்...பின்பு மாயாவியைப்பார்த்து...

என்ன இந்தப்பக்கம் மாயாவி....? அம்மா ஏதும் வரச்சொன்னாங்களோ....ஏதும்வேலை வெட்டி பார்தனியோ.

இல்லைங்கய்யா...

அப்ப ஏனப்பா இந்த கொடிய வெயிலில கருவாடுபோல காய்ஞ்சு நிற்கிறாய்...?

ஐயா அது வந்துங்க...ஐயா...அது...

ம்.நீ விசயத்தைச் சொல்லுறதுக்குள்ள....பொழுது விடிந்திடும்...போ..போ.போயிட்டு நாளைக்கு வாவா.... என்னான்னு பார்க்கலாம்...சரியோ..

ஐயா.வந்துங்க........

அட என்னடா நீ வந்து போயி....முட்டாள் மாதிரி பேசுறாய்...எப்பத்தான் நிறுத்தப்போறீயோ..சரி சரி ரூபவாஹினி செய்தி ( இலங்கையின் தொலைக்காட்சிப்பிபிரிவில் ஒன்று ) தமிழ் செய்தி தொடங்கப்போகுது நீ போயிட்டு நாளைக்கு வா என்ன.....

சரியிங்க ஐயா.....

வந்தவன் மனதில, உள்ள பாரச்சுமைகளை இறக்கி வைத்து உதவி கேட்க நினைத்தவன் யாவுமே கை கூடாமல் விடைபெற்றுச் சென்றான் அவன்..இனி எங்க போவது...? யாரைக்கேட்பது...? மீண்டும் அரச வைத்தியசாலைநோக்கிச் சென்றான். எப்படியும் மருந்துவேண்டிக் கொண்டு வருவான் என்ற நினைப்பில் அந்த இடத்தில் வேறு ஒரு தாதி..( நேர்ஸ்)

அடடே வாங்க....இந்த அம்மா புருஷனா....

ஆமாங்க....

றிப்போர்ட்டில 3 இன்ஜெக்ஸன் போட எழுதியிருக்கே.....வாங்கி வந்திருக்கிறீங்களா.....

இல்லைங்க.......அது போடலைன்னா என்னாகுமுங்க.....

அப்ப வாங்கலையா....? ம்......அது போடலைன்னா உயிராபத்து..

ஐயோ..அப்படீங்களா.....

மீண்டும் மங்கா பக்கம் சென்றான்.....இன்று மங்காவிற்கு நெட்போட்டு அவ இருந்த இடத்தை தனியாக வைத்திருந்தார்கள்....மாயாவியும் மங்கா அருகில் செல்ல அதற்குரிய பாதுகாப்பாக வாய்க்கு பாதுகாப்பு மூடியும், கையுறையும் கொடுத்து அணியும்படி தாதி சொல்ல அதன்படி அவனும் எல்லாம் போட்டவாறு அவளருகே சென்று பார்த்தான். அவள் முகம் வாடியிருந்தது......கண்கள் சிவந்திருந்தது. அவள் உதடும் கறுத்து படைபடையாக தோல் உரிந்ததுபோலவும், உடலும் உருக்குலைந்து மெலிந்தும் காணப்பட்டாள். அவனால் பேசக்கூட முடியவில்லை. ஆறுதலாக இரண்டு வார்த்தை பேச ஆசைப்பட்டான் ஆனாலும் முடியவில்லை. அவன் கண்கள் உருண்டு கண்ணீர் முத்து முத்தாக கொட்டியது.....தலையைத்தடவி விட்டபடி.....நெட்டைத்திறந்து வெளியே போகத் திரும்பியவன் அவன் டீ சேர்ட்டை இழுத்துப்பிடிப்பதை உணர்ந்து திரும்பினான்.....மங்காவின் கைபிடியில் அவன் சேர்ட்.....

மீண்டும் என்னம்மா என்றது போல கேட்டான்......அவள் கையை பதித்துக்காட்டி தன்மகன் எங்கே என்றாள்...?

ஓ.....கோபாலுவா.....,?

மெதுவாகத்தலையை மேலும் கீழுமாக ஆட்டி ஆம் என்றாள்....கண்கள் கலங்க..

அவன் விளையாடப்போயிருக்கான்.....நாளைக்கு கூட்டியாறன்....என்று சொன்னான்...

பிள்ள சாப்பிட்டானா....?

ம்...சாப்பிட்டான்...

நீங்க.....

ம்....சாப்பிட்டேன்...நீ எதுக்கும் கவலைப்படாதே என்ன......நான் போயிட்டு நாளைக் காலைல கோபாலோட வாறன் சரியா.......என்று மீண்டும் அவள் தலையைத்தடவி விட்டு அவள் போர்வையை சரியாக போர்த்து பக்கவாட்டில் சொருகிவிட்டு.....கலங்கிய கண்களோடு அவ்விடத்தை விட்டு அகன்றான்...

அவனுக்கு என்ன செய்வது யாரைக்கேட்பது எதுவுமே புரியவில்லை. அவன் வரும்போது மகனுக்கு கடையில் இடியப்பமும் சம்பலும் வேண்டிக்கொண்டு தன் ஓலைக்குடிசைக்கு வந்தான் மாயாவி....வரும் போதே....

என்னாலு மாயாவி....இப்பல்லாம் உன்ன காணக்கிடைக்கல்ல.....என்றான் அந்த தெருவில இருக்கும் வசதியற்றோர் வாழ்வில் கறுப்பன் என்கிற இவன்.

நானு ஆசுப்பத்திரியில மங்காவை வச்சிருக்கன் போயி பாத்துட்டு வந்தனா....

ஓ......என்னாச்சு மங்காக்கு...? நம்மாக்களுக்கு தெரியாதாக்கும்......

சும்மா காச்சல்தான்.சரியாப்போடும்....

அட அப்படியா......ஆமா நான் போத்தல்கடைபக்கம் போகவேணும், என்கூட வாறீயா....

அவனுக்கும் கறுப்பன்கூட போய் பழங்கள்ளு குடிச்சால்தான் தன் கவலைகளுக்கு நல்லம் எனத்தோன்றியது. அதனால..உடனே வாறன் நானும்....கோபாலுக்கு சாப்பிடக்கொடுத்துட்டு இதோ வந்திடிறன் என்று கூறிக்கொண்டு.....மகனைக்கூப்பிட்டு பார்த்தான்...அவன் அங்கிட்டு வச்சிட்டுப்போங்கப்பா.இப்ப வரமுடியாது என்று விளையாட்டின் ஆர்வத்தால சொன்னான்.

சரிப்பா..அப்பா வர நேரமாச்சா......நீ பயப்பிடாதே என்ன......சாப்பிடு...என்று கூறி.கறுப்பன்கூடச் சென்றான் மாயாவி.

நேரம் இரவு 8 மணி.இப்போது அவன் மனதில 10 பேரின் மனத்தைரியம் வந்ததுபோல ஒரு உற்சாகம்......இந்த உசாரோட ஐயாட்ட பணம் கேட்பது என்ற முடிவோடு...கறுப்பன் நன்றாகக் குடித்தபடியால அவனை நேரே அவன் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு... மீண்டும் கந்தவர்மன் வீடுநோக்கி...சயிக்கிளை மிதிக்கிறான்.
வீட்டு வாசலில்.....தன் சயிக்கிள் பெல்லை அழுத்தினான்.....கந்தவர்மன் வீட்டு நாய் சாதாரணமாக மாயாவி வந்தால் குரைக்காது...இன்று அவன் குடிச்சிட்டு வந்ததைப்பார்த்துவிட்டு குரைத்துக்கொண்டு நின்றது...

வாசலில் லைட்டைப்போட்டுவிட்டு யாரப்பா இந்நேரத்தில.....

ஐயா.நானுங்க.மாயாவி......

அட நீயா....என்ன....? என்ன வேணும் சொல்லு...? வாசலில் இருந்தே உரக்கக் கத்திக்கேட்டார்....?

ஐயா.......கேட்டைக்கொஞ்சம் திறவுங்கய்யா....சொல்லுறன்....

என்ன இந்த மாயாவி என்னைக்கும் இல்லாம....என்று மனசுக்குள் நினைத்தவாறு கேட்டை திறக்க.....மகேஸ்வரி நாயை பிடிச்சு பின்பக்கமாக துரத்திவிட்டு இருவருமாக அவனருகில் வர.......குப்பென்று சாராய நாத்தம் முகத்தில அடிக்க.....

ஆத்திரத்தோடு....என்னடா என்ன மாயாவி.உனக்கு எம்முட்டு தைரியம் இருந்தா இப்ப என்முன்னால குடிச்சிட்டு வந்து நிற்ப.....ஆ..? போடா ஒழுங்காய்ப்போய்ச்சேரு......

ஐயா.....மங்காக்கு ஊசிபோடனும் ஐயா......

அதுக்கு.........நான் என்ன டாக்டரா...? போடா.....போபோ...எனக்குமுன்னால நிற்காத...

ஐயா.....எதிர்பார்க்காமல் சயிக்கிலும் கீழ விழ இவன் ஐயா....ஐயா...எனக் காலில் விழுந்து அவர் கால்கள் இரண்டையும் பிடித்து அழுதான்....

ஐயா.......இல்லைன்னு சொல்லாதீங்கய்யா...எனக்கு உங்கள விட்டா யாருமில்ல ஐயா.....அவ உசிரு போப்போதுய்யா.....ஐயா...........உதவி பண்ணுங்க ஐயா.....எப்படியாச்சும் உங்க கடனை அடைச்சிடுவேன் ஐயா....ஐயா........நம்பி வந்திருக்கன்....மனசு வையுங்க...ஐயா.....அம்மா நீங்களாச்சும் சொல்லுங்கம்மா......

டேய்.டேய் முதல காலை விடு.எழுந்திரி.....எழும்படா.எழும்பு.....மண்ணில வேற புரண்டு....சீ.....மாயாவி.... எழும்படா.....

எழும்புறான்..கண்ணால் கண்ணீர் வழிந்தோடுகிறது மாயாவிக்கு.....

இஞ்ச பாரு மாயாவி........என்னஎன்றாலும் நாளைக்குப் பின்னேரமா வா..என்னான்னு விசாரிக்கிறேன். ( கேட்கிறேன்)...

இல்லய்யா.என்னால முடியாது எனக்கு அம்முட்டு தைரியமில்ல......அதுதான் குடிச்சேன் ஐயா.....குடிச்சபடியாலதான் எக்கு மனசு துணிஞ்சிருக்கய்யா......எனக்கு இல்லைன்னு சொல்லாமல் உதவி பண்ணங்க ஐயா....

அட லூசா.......எதுக்கும் நாளைக்கு வாடா.......

பக்கத்தில் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மகேஸ்வரி.கூறினாள்...

அட என்னான்னு என்றாவது கேளுங்கப்பா......இல்லாட்டிக்கு இவன் விடமாட்டான்...

உனக்கு ஒன்றும் தெரியாது..குடிகாரன்பேச்சு .................காதில வாங்கக்கூடாது.....நீ உள்ள போ....

ம்.....என்னமோ அவன் பாவம் போலதான் இருக்கு.....ஆனாலும் இந்த மாயாவி எதுக்கு குடிச்சிட்டு வாறன்...? இப்படி ஒருநாளும் வரமாட்டானே....

சும்மாயிரு மகேஸ்வரி.....இவனைப்போல எத்தனைபேர நான் பார்த்திருக்கிறன்.இவனுகளுக்கெல்லாம்.......ஆண்டவன் அளந்துதான் படைச்சிருக்கான்....போ.......மாயாவி.எனக்கு முன்னால நிற்காத போயிட்டு நான் சொன்னமாதிரி நாளைக்கு வா.......

இனிமேலும் அங்கிருப்பது தனக்கு எந்த விதத்திலும் பயனில்லை என்று தெரிந்தவனாய்.....

சரிங்க ஐயா.....நாளைக்கு வாறனய்யா.என்று இரண்டு கைகளாலும் கண்களைத்துடைத்தபடி அங்கிருந்து தன் சயிக்கிளைத் குனிந்து எடுத்துக்கொண்டு ஏறி ஓடாமல் ஒரு பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு தன் ஓலைக்குடிசை நோக்கி நடைபோட்டான் மாயாவி.

வாசகர்கள், உங்கள் மனசாட்சி என்ன கூறுகின்றது என்று பார்த்து என் .....மனசாட்சியும்....

தொடரும்.



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி........4

ஏய் ஒன்னத்தான்....கொஞ்சம் தள்ளி நில்லு......பேஷன்ட்டுக்கு கிட்ட ஈ மொச்ச மாதிரி கிட்டப்போகாதே.....கொஞ்சம் காத்தாவது வரட்டும். ஆமா...யாரு.இவ உன் பொண்டாட்டியா...? ஏன்யா.....உணர்வுப்பசிக்கு தீனி போட்டால் சரியா..? அவளுக்கு வயிறு இருப்பது தெரியாதா உனக்கு......கர்மம்..கர்மம் உனக்கெல்லாம் பொண்டாட்டி கேட்குது....குளிசிட்டாவது வந்தியா....வேர்வை நாத்தம் இங்க அடிக்குது......நேரமாகிறதிற்குள்ள வெளியேறு.....நீங்களெல்லாம் சுத்தமா இருந்தா ஏன் இந்த வியாதிகளெல்லாம் வந்து உங்கள அண்டுது.......ம்ம்.....என்னத்தச் சொல்லி எங்க திருந்தப்போகுதுக....

அந்த 8 ம் நம்பர் வார்ட்டின், அந்நேர கடமையிலிருந்த உடல் பருத்த நேர்சிடமிருந்து வந்த கடும் சொற்களால் வேதனைப்பட்டவனாகயிருந்தாலும், அதனை வெளிக்காட்டாது......மனச்சுத்ததுடன்....ஒரு அடி தள்ளி நின்றே மங்காவின் தலையைத்தடவியபடி....ஏன்ம்மா இப்ப எப்படியிருக்கு......? மருந்தெல்லாம் தாறாங்களா...?

கண்கள் கலங்கியபடி மனைவியைப்பார்த்து கேட்டதிற்கு.அவளிடமிருந்து உடனடியாகப்பதில் எதுவும் வரவில்லை. அவள் குரல் வெளிவரத்தடையாகயிருந்தது......மாறாக கண்ணீர் மட்டும் ஓரமாக வழிந்தது கண்டு.....அவள் கண்களைத் துடைத்துவிட்டபடி..

என்னம்மா......என்ன செய்யுது....? களைப்பா இருக்கா.....? நான் போய் குளுக்கோசு வேண்டி வரட்டுமா...?

என்று சொன்னவன்......அடுத்த கட்டிலில் ஒரு தாயைப்பார்க்க வந்திருந்த, 3 சிறு பிள்ளைகள், அவர்கள் தந்தை அவர்கள் அந்தத் தாயிற்கு கொண்டு வந்திருந்த கிறீம்கிரக்கர் பிஸ்கட், ஒரு பிளாஸ்கில் ஹோர்லிக்ஸ்....அதனைத் திறந்து ஒரு கப்பினுள் விட அந்த மணத்தில் ....ம்.......என்று மூக்கை இழுத்துக் கொண்டு அங்கையே வைத்த கண்வாங்காது பார்த்துக்கொண்ட கோபாலை...கண்டான் மாயாவி.

மாயாவிக்கு மனசு தாக்கியது. தன்மகனின் ஏக்கம் அவனுக்குப் புலப்படவே....ஐயோ......பாவம் புள்ள எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறான்.. என்றது நினைவுக்கு வரவே...அவனிருக்கும் அவ்விடத்திற்குப்போனான்....அப்போது...அவர்கள் பேச்சு காதில் விழுந்தது...

" அம்மா..அம்மா....நம்ம ஷிம்பா 5 குட்டிபோட்டிருக்கு.....3 பிளக்கலர்...2..பிரவுன் அன்ட் வைட் கலர்...

அட அப்படியா.......அம்மா வந்து பார்க்குமட்டும் பத்திரமா நல்லாப்பாருங்க என்னம்மா...ஏங்க.....கடைதெருவுகளுக்கு போறதிற்கு யாராச்சும் சின்னப்பையனா வேலைக்குப்பாருங்க.என்றேன்.....பார்க்கல்லையா...?"

டேய் கோபாலு.....வாப்பா.......

அப்பாவின் குரல்கேட்டு ஓடி வந்தான்...

நாம போயி சாப்பிட்டுவருவோம்...என்ன....
அம்மாகூட இன்னும் கொஞ்சநேரம் பேசிட்டுப்போவம் சரியா.....அம்மா தூங்கும் போது போவம் சரியா.....

சரிப்பா......எனக்கும் சரியா பசிக்குது.....அவங்க சாப்பிட இன்னும் பசிக்குதப்பா...வாப்பா.இப்பவே போவோம்...
அப்பா, அப்பா மறந்துட்டேன்.....

என்னப்பா......

அப்பா அம்மாக்கு சிக்கின்குன்யா காய்ச்சலாம்.....அந்த பெரிய நேர்சிட்ட பேசச்சொன்னாங்கப்பா......

அந்தச்சொல்லைக்கேட்டவுடன், கதிகலங்கிப்போனான். அந்த நோய் பற்றி கசக்கி எறிந்த பழைய பத்திரிகைகளிலே பார்த்து அறிந்து கொண்டவன். இப்போது தன் மனைவிக்கு அதுதான் நோய் என்றதை, மகன் கூறக் கேட்டு ஆடியே போனான்.....இப்போது அவனுக்குப்புரிந்தது...எதற்காக அந்த நேர்ஸ் தன்னை தள்ளி நிற்கச்சொன்னதும், காற்றுப்படவேண்டும் என்று சொன்னதும்.....தனியாக முதல் ஆளாக மங்காவை வைத்திருப்பதையும் நினைத்துச் சகலதும் விளங்கிக்கொண்டான் மாயாவி.

உள்ளே பிரைவேட் ரூமுக்குள் சென்ற நேர்ஸ்.......நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவள் வரும் வரையில் காத்துக்கொண்டிருந்த மாயாவி....நீண்ட நேரத்தின் பின்பு அந்த நேர்சும், புதிதாக வந்த இளைஞன் டொக்டரும் பிரைவேட் ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.

அவர்களைக்கண்டவுடன்.....பெரும் ஆனந்தத்தோடு.....

அம்மா......பையன் ஏதோ சொல்லுறான்.......என்னோட மங்காவிற்கு....என்னமோ சிக்கின்குன்யா என்று......அப்படிங்கலா....

அட மறந்தே போயிட்டன்.....ஆமா..ஆமா......அது உன் பொண்டாட்டி றிப்போர்ட்டா......ம்.தெரிஞ்சு என்னபண்ணப்போற....? இந்தா......இந்த ஊசி மருந்தை வாங்கிட்டு வா.....3 ஊசி போடனும்...இங்க ஸ்ட்ரொக்கில இல்ல.....விலை அதிகம் தான்......யாருடைய காலையாவது பிடிச்சு வாங்கிவந்தால்தான் அவ பிழைப்பா.......

சொல்லிக்கொண்டு கண்ணால் ஜாடை காட்டி புதிய இளைஞர் டொக்டருக்கு பல் இளித்தபடி, கொஞ்சம் வசதி படைத்த நோயாளர் பக்கம் நடைபோட்டு பேச்சுக்கொடுத்து கலக் ஷனுக்கு அடி போடச் சென்றுகொண்டிருந்தாள் அந்தத் தாதி.

மாயாவியினால் என்ன செய்வது என்று தெரியாமல்....அரை மயக்கத்தூக்கத்திலிருந்த மங்காவிடம் தான் போயிட்டு 5 மணிக்கு வருவதாகச்சொல்லி அந்த ஊசி மருந்துத்துண்டையும் எடுத்து பாக்கெற்றினுள் புதைத்து விட்டு மகனுக்குச் சாப்பிடக்கொடுத்துவிட்டு மருந்துக் கடை ஒன்றினுள் நுளைந்தான்...

ஐயா........இதற்கு எவ்வளவு பணம் செலவாகும்...?

சீட்டை வேண்டிப்பார்த்தவர்....

என்னப்பா......இந்த ஊசி மருந்து...யாரு உனக்கு எழுதித்தந்தது...?

தர்ம ஆசுபத்திரியிலய்யா...

பேருக்குத்தான் தாமம்.......ஆனா.....அங்க நடக்கிறதெல்லாம் யாரு கேட்பான்...? அங்க மருந்துகளை களவா பிரைவேட் டிஸ்பன்சரிக்கு விற்குறது....வித்துப்போட்டு பாவம் உன்னப்போல ஏழ எளியவங்க வயிற்றில அடிக்கிறதே வழக்கமாப்போச்சு.......ஏலாதப்பா.உனக்கு அதன்... விலை வேணாப்பா......உன்னால முடியாது......யாருக்கு..? உங்கம்மாக்கா...?

இல்ல......அங்கிள்..என்னோடம்மாக்கு......

டப்பென்று பதில் சொன்னான் கோபால்.

ஓ......அப்படியா....? ஐயோ.......பாவம்......பச்சப்புள்ள....
இஞ்ச பாரு......நான் எதுவுமே செய்யமுடியாது பரிதாபப் படத்தான் முடியும். நானும் பெரிய பணக்காரன் இல்ல..உனக்கு வாங்கித்தர. நானும் மாசச் சம்பளக்காரன். வேணுமுன்னா.....100 ரூபா தாறன்......மிச்சம்ப்பணம்...யாரிடமாச்சு கேட்டுப்பார்....கிடைச்சால் வாப்பா.....

ஏன்ய்யா எம்முட்டு ஆகும்......?

மனசில நடுக்கம், கண்களில ஏக்கம்........என்ன பதில் வருமோ என எதிர்பார்ப்பு.....ஆவலாய் மாயாவி...

சொல்லவே மனசுவரலப்பா......3 ஊசி மருந்துக்கும் 900 ரூபா ஆகும்.

900 ஆயிரமா.......அம்முட்டு ஆகுமா.......நிஜமாவா......

ஆமாப்பா.... இந்த மதிய நேரத்தில வந்தபடியால உன்னோட பேச முடிஞ்சுது.இதுவே சாயந்தரமாகயிருந்தால்...முதலாளி வேற கடையில நிற்பார்....மறு பேச்சின்றி வெளியால துரத்திப்போட்டிருப்பார்....சரி......மிச்சக்காசையும் எடுத்துக்கொண்டு வாப்பா.....நான் சொன்ன மாதிரி 100 ரூபா தாறன் சரியா....

இப்படியும் கருணையுள்ளம் இருக்கு என்றதை நினைத்தவனாய்......மெழுகுதிரிபோல மங்காவிற்கு தைரியம் எனும் வெளிச்சமாகவும், உள்ளுக்குள் உருகும் மெழுகுபோலாகவும்.....தன்னை நொந்துகொண்டு அடிக்கடி தன்னிடமிருந்த, பணத்தை திரும்பத்திரும்ப எண்ணிப்பார்த்ததில்.......150 கூட இல்லை.

அழுதான்....மீண்டும்......அழுதான்......எதற்காக இப்படி வாழ்க்கை..? என்ன பாவம் செய்தோம்....? அழுவதைத்தவிர எமக்கெல்லாம் விடிவேயில்லையா.யாரிடம் போய் கையேந்துவது...50 ஆ..100 ஆ கடன் பெறுவதற்கு....??? அவன் நினைத்துப்பார்ததில்.

கந்தவர்மன் ஐயா தான் கண்களுக்கு வெளிச்சமாகத்தோன்றினார். சாதாரண வசதி படைத்தவர்தான்.....அவருடைய பிள்ளைகள் நான்கு பேர்கள். அனைவரும் வெளிநாடு.....யாருடைய பணத்தையும் எதிர்பார்க்காமல் இன்னும் ஓட்டச்சயிக்கிளில் உலா வரும் இறுக்கப்பேர்வழி அவர். ஆனாலும் கெளரவமானவர். எப்படியும் மாயாவிக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில்.....அவன் கற்பனையில்.....வேலைமுடிந்து அவர் வரும் வரையில்.....அவர் வீட்டு வாசலில் ஒட்டிய வயிற்றுடன் காயப்போட்டிருக்கும் .....வடகம் போல இவனும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தான்.

தொடரும்.......


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

மனசாட்சி....3

ஆ..அம்மா...ஐயோ....நடுங்குதே....என்னங்க....இங்க....பாருங்க....உடம்புக்கு முடியலங்க...

கொஞ்சம் பொறு...விளக்கைத்தூண்டிவிட்டு வாறன். அடடா.......உடம்பு ரொம்ப கொதிக்குதே.....டேய்......கோபாலு.கோபால்...

பாயில் படுத்தபடி கண்ணைத்திறந்து என்னப்பா...? மழைபெய்யுதா......

இல்லடா....உங்கம்மாக்கு காய்ச்சலாயிருக்கு....அதுதான்......அந்த காய்ச்சல் குளுசை எங்க இருக்கு...அதைக் எடுத்துக்கொண்டுவாப்பா......

ஐயோ...காலெல்லாம் வலிக்குதே.....அம்மா....வயிறெல்லாம் புண்ணா வலிக்குதே......ஒருநாளும் இல்லாம.....

அப்பவும் நான் சொன்னனான்..........மழைநேரங்களில இந்த அரிசியிடிக்கிர வேலைக்குப் போகாதே என்று.....ம்........கேட்டால்தானே.....ஈர நிலத்தில நின்று அரிசியிடிச்சபடியாலத்தான் குளிரேறிப்போச்சு......

எனக்கென்ன இதெல்லாம் புதுப்பழக்கமோங்க......ஏதோ வரவேண்டிய பலன் என்றால் வந்துதானே தீரும்..இந்தக்குளுசை போட்டாலும் தீர்ற மாதிரியில்லைங்க.....பெரியாஸ்பத்திரிக்குப்போனால்தான் சரியாகும் என்று நினைக்கிறேன். ஏனங்க பஞ்சியைப்பார்க்காம போவமாங்க......

உன்னைக் கூட்டிட்டுப் போறவேலையைவிட்டுட்டு எனக்கென்ன பஞ்சி வேறயிருக்கு...இந்தா சயிக்கிள எடுக்கிறன்...ஏப்பா கோபாலு....நீ தனிச்சு இருக்கமாட்டாய்......நீயும் வாப்பா.....

ஏப்பா........அம்மாக்கு என்னாச்சு....?

ஒன்னுமில்லடா.......உங்கம்மாக்கு லேசா..காச்சலாயிருக்கு....பயப்பிடாதேடா வா...கெதியா...

சயிக்கிள் பாரின் முன்னுக்கு மனைவி மங்காவையும், பின்னுக்கு மகனையும் வச்சுக்கொண்டு மிதிக்கத்தொடங்கினான்...மாயாவி.

ஐயா..என்னாச்சு ஐயா.....பார்த்துச்சொல்லுங்க..ஐயா...

வெயிட் பண்ணுங்க....பிளட் அனுப்பியிருக்கோம். லபோரட்ரியினால ரிசல்ட் வந்தபின்புதான் தெரியும்.....என்னான்னு....அதுவரைக்கும் பேஷன்டை டிஸ்டொப் செய்யாதீங்க....

அது எப்ப வருமய்யா......?

எனக்கென்ன தெரியும். வெயிட் பண்ணுங்க....சரியா.......யாரு..இவன் உங்க பையனா.....?

ஆமாங்கய்யா......பேரு கோபாலு....

இங்க எல்லாம் எதுக்கு கூட்டி வாறீங்க....? நீங்களாகவே தேடிக்கொள்ளுங்க....வியாதிகளை....பிறகு எங்கிட உயிரை வாங்குங்க.....

யாருமில்லைங்க ஐயா......சின்னப்புள்ள......தனியா தூங்கமாட்டான்..அதுதான்....இங்க கூட்டியாந்துட்டன்...

ம்ம்.......என்னாவது பண்ணித்தொலையுங்க.....பையன அந்த பெஞ்சில படுக்கச்சொல்லுங்க....

சரிய்யா.....

அப்பா....அம்மாக்கு என்னப்பா.....ஏனப்பா அம்மா கண்ணால தண்ணியோடுது...? அப்பா அம்மா பாவமப்பா......அம்மா...அம்...மா...

டேய் அழுவாதடா......அம்மாக்கு ஒன்னுமில்ல......அந்த காளியம்மா நமக்கு ஒரு கெடுதலும் வைக்கமாட்டா.....படுடா ராசா...

அப்பா.நீ தூங்கலையா....?

இல்லப்பா......அப்பாக்கு தூக்கம் வரல்ல.....நீ தூங்குப்பா....

அதிகாலை வரை எந்த றிசல்ட்டும் வரவில்லை. டொக்டர்மார்கள் மாறி மாறி வந்து மங்காவைப்பார்த்துவிட்டுப்போனார்களேயொழிய எந்த மாறுதலும் இன்றி இன்னும் அதிகமாக முனங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

நேரத்தைப்பார்க்கிறான்....மாயாவி. காலை 6.45 காட்டியது.. ஆஸ்பத்திரி கடிகாரம். அப்போதுதான் அவனுக்கு கந்தவர்மன் ஐயாவின் சயிக்கிள் ஞாபகத்திற்கு வந்தது....

ராசா...கோபாலு.எழுந்திருடா....ஐயா வீட்டுச்சயிக்கிள் கொடுக்கவேணும்.....

ஐயோ..என்னப்பா நீங்க......ஒழுங்கா தூங்கவிடமாட்டீங்கலாம்....நா வரல்ல..நீங்க போயிட்டு வாங்க...

நான் மட்டும் போனால்.வரஏலாதப்பா......நாங்க.....வீட்ட போய் ஐயா சயிக்கிள எடுத்துக்கொண்டு போவோம்....

ஏப்பா.....மாயாவி.....? அப்பா மாயாவி....கூப்பிட்டுப்பார்த்தார்.....அந்தப்பெரியவர்.
என்னப்பா....? என்ன யோசனை..? இந்தாப்பா...இந்தச்சயிக்கிள் செயின் ஒரே கழன்டு கொண்டேயிருக்கு....ரொம்ப லூசாகிட்டு என்று நினைக்கிறேன்.பார்த்து அஜஸ்ட் பண்ணித்தாப்பா.....

ஓ.....ஐயாவா....வாங்க..ஐயா....ஏதோ சிந்தனையில இருந்துட்டன்....என்று, நேற்றிரவு நடந்தது முதல் காலை வரை நடந்த சிந்தனையிலிருந்து விடுபட்டான் மாயாவி.

என்னப்பா.கண்ணெல்லாம் சிவந்திருக்கு....

ராவு தூங்கல்லைய்யா........

என்னப்பா ஏதும் குடிச்சியா....

இல்லய்யா.....மங்காவிற்கு உடம்பு சரியில்ல......தர்மாஸ்பத்திரியில விட்டிருக்கேன்....

அப்ப நீயும் அங்க நிற்க வேண்டியதுதானே......இங்க ஏன் வந்தே...

என்னய்யா......அங்க பொம்பிள வார்ட்டு நா நிற்கமுடியாதய்யா.....அவன் பையன் சின்னவன்தானே அவனை அனுப்பிவச்சிருக்கன்....அதைவிட இங்க வார வருமானமும் இல்லாமற்போயிடும் ஐயா...

என்னத்தா பெரிசா உழைச்சிடப்போற....உனக்கெல்லாம் மனசாட்சியேயில்லைப்பா.....

படார் என்று கன்னத்தில அடிச்சதுபோலயிருந்தது அந்தச்சொல்.அவனுக்கு....

அவனா மனசாட்சியில்லாதவன்...அவன்.ஏழை என்ன செய்வான்..? எந்தப்பக்கம் சுற்றிசுற்றித்திரிந்தாலும்.அவன் செய்கிறதெல்லாமே ஞாயமாகவே அவனுக்குப்பட்டது....எப்படா மதியம் 12 மணியாகும் என்று அடிக்கடிநேரத்தைப்பார்த்துக்கொண்டிருந்தான்.....அவன் சிந்தனையெல்லாம் மங்கா நினைப்புத்தான். அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று உலகிலுள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிநின்றான்.
நேரம் மதியம் 12 என்றதிற்கு அடையாளமாக......எதிராக இருந்த டீ கடையில இருந்து..வானொலிப்பெட்டியில........செய்திகளுக்கான நேரம் என்ற அறிவிப்பு வந்ததைத்தொடர்ந்து.......உற்சாகம் வந்தவனாக.....சாத்தியிருந்த பலகைகளை எடுத்து கடையை பூட்டி...மீண்டும் சயிக்களை மிதிக்கத்தொடங்கினான்....மாயாவி....ஆஸ்பத்திரியை நோக்கி.



தொடரும்......

மனசாட்சி.... 2

நேரம் அதிகாலை, வழமைபோல கந்தவர்மன் 5 மணிக்கெல்லாம் எழும்பி, மரங்கள், செடிகள், கொடிகளுக்கு என்று தண்ணீர் ஊற்றிப் பின்பு புழுதி பறக்காமலிருக்க முற்றத்திற்கு நீர் தெளித்து விளக்குமாறு கொண்டு கூட்டிப் பெருக்கி, தானும் குளித்துவிட்டு வேலைக்கு வெளிக்கிட ஆயத்தமானார்....

ஆடுகளுக்கு குலைகள் வெட்டிப்போட்டபடி மகேஸ்வரியும் அவசரவசரமாக தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

ஆட்டுப்பாலில் போட்ட தேனீரை கணவருக்குக் கொடுத்தபடி....

ஏனங்க.........நேரம் ஏழாகப்போகிறது. இவன் இன்னும் சயிக்கிள கொணார்ந்து தரல்லையே.....

ம்..ம்...நானும் அதைப்பற்றிதான் யோசிக்க நீயும் சொல்லுறாய். நேற்றே கையோடு எடுத்திட்டு வந்திருக்கவேணும். பிழவிட்டிட்டேன். வேலைக்கும் நேரமாகுது. இவனை வேற காணல்ல....

மனதில சங்கடம், உடலிலே எரிச்சலுடன் கோபமாக வாசலுக்கும், வீட்டிற்குமாக பல தடவைகள் போவதும் வருவதுமாகயிருந்தார் கந்தவர்மன்.

தூர மாயாவி வருவது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவே...

அந்தா பாருங்க அவன்தான் வந்திட்டானுங்க......

ம்....வரட்டும், வரட்டும் கழுதை.....காலங்காத்தாலே மனுசனுக்கு எரிச்சலை உண்டுபண்ணுறான் இவன்.

வாடா..வா....ஏன்டா உனக்கு புத்தியில்லையோ......இப்ப மணி என்னாகிறது. வேலை போனால்... பிறகென்ன உன்னோட சயிக்கிள் றிம் உருட்டத்தான் ஆசையோ...

ஐயோ......அப்படியில்லைங்கய்யா........வந்து.....

டேய் என்னடா வந்துபோயி.....போடா போ.... முன்னால நிற்காத..வேலைக்கு போற நேரமதுவுமா.....இந்தா பிள்ள...காசு எவ்வளவு என்று கேட்டு கொடுத்தனுப்பு...நான் போயிட்டு வாறன்.

என்னடா மாயாவி......ஐயா 7 மணிக்கெல்லாம் கந்தோருக்குப் போகவேணும் என்று தெரியாதோ...வீணா ஏனடா அவர்கிட்ட ஏச்சுப்பேச்செல்லாம் வாங்குறாய்...சரி....சரி......இவன் என்ன பள்ளிக்கு அனுப்பலையோ.....என்டா கோபாலு.கொப்பனைப்போல சயிக்கிள் கடையிலையோ கிடக்கப்போறாய்....படிக்ககிடிக்க ஆசையில்லையோ.......

ஆசைதான் அம்மா, ஆனா....அம்மா......

நான் என்னத்த சொல்ல......எப்படியாச்சும் பிழைக்கிற வழியைப்பாரு.சரியோ...
ஆமா மாயாவி ஐயா காசைக்கொடுக்கச்சொன்னாரே......எவ்வளவு தர...?

ஐயாட்ட என்னம்மா நான் கேட்கிறது..? பார்த்துதாங்கம்மா.....

25 ரூபா தரட்டோ....

பார்த்து தாங்கம்மா.....

ம்..இரு வாறன்..

ஏனப்பா......நீங்க சொல்லியிருக்கலாமுல்ல.....50 தரச்சொல்லி.

டேய் இல்லடா....அவங்க கிட்டபோய் அப்படி நாம கேட்கக்கூடாது. பாவம் அவங்களும் கஸ்டப்பட்டுத்தானே சம்பாதிக்கிறாங்க....நமக்கு இதுபோதும்டா....

அப்பா....ஏனப்பா அம்மாவைப்பற்றி சொல்லல்ல.....அவங்க உங்கள திட்டுறாங்க.பேசாமலிருக்கிறீங்களே...

சொல்லலாமுன்னு நினைச்சேன்டா.....அனா அவங்க.பொறுமையா கேட்கிறமாதிரி இல்லைன்னு தெரிஞ்சப்போ.......பேசாமல் இருந்துட்டேன்டா..

இந்தா மாயாவி......30 இருக்கு.

சரிங்கம்மா இன்னைக்கு உங்க கையாலதான் என் வருமானம், எப்படியும் குறைவில்லாமல் நடக்கும்..

சரி....சரி......இனிமே இப்படி நடக்காத சரியா.......

சரிம்மா வாறன். டேய்....அம்மாகிட்ட சொல்லிட்டு வாடா.....

போயிட்டு வாறனம்மா...

மகன் கொண்டு வந்த சயிக்கிளில் தகப்பனும், மகனுமாகத் திரும்பிப் போனார்கள். போகும் போது...கோபால் அப்பாவைப்பார்த்துக்கேட்டுக்கொண்டான்..

ஏனப்பா நீங்க ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்தானே....

அட அதைவிடுடா...

இப்படியே.நீங்களும் சொல்லாமல் இருந்தபடியாலதான் அவங்க பேச்செல்லாம் கேட்கவேண்டியிருக்கு......

டேய்.....மொக்குமவனே.....நாம சொன்னாலும் இவங்க நம்ப மாட்டாங்கடா.ஏன்னா அவங்க.....எப்பவுமே நம்மப்போல ஏழைஜனங்கள நம்புறதில்ல....அதனாலதா பேசாமல் இருந்துட்டேன். ஆனா சொல்லாமுன்னு நினைச்சு தொடங்கப்போக.....அவங்க பேசவே விடல்ல.....போகட்டும்டா விடுடா..

அப்பா....வாங்கப்பா......அம்மாவைப் பார்ததிட்டு வரலாம். வேணான்டா...அங்க வந்தா கடை திறக்க லேட்டாகிடும். அஞ்சோ, பத்தோ வாறதும் இல்லாமற்போயிடும்....அதனால ஆசுப்பத்திரிக்கு நீ போ....இந்தா அம்மாக்கு இளநீர் வேண்டிக்கொடுத்து நீயும் ஏதும் சாப்பிடு என்ன....நான் மத்தியானம் 12க்கும் 1 மணிக்கும் இடையில பார்க்கவிடுவாங்க.அப்ப வாறன் நீ போய் அம்மா பக்கத்தில நில்லு. எங்கையும் போயுடாதடா....பெரிய டாக்குத்தர் வருவாரு.நீ தான் தைரியமா நின்னு பேசனும் சரியா......
நடந்து போராசா....இன்னும் 10 நிமிசத்தில ஆசுப்பத்திரி வந்திடும்.

நான் 5 நிமிசத்தில ஓடியே போயிடுவேனுல்ல.....

தகப்பன் கொடுத்த 30 ரூபாவையும் வேண்டி அதைச் சுருட்டிப் பத்திரமாய் காற்சட்டையின் பாக்கெட்டினுள் அடியில் அமர்த்தி அமர்த்தி வைத்துவிட்டு முன் சேர்ட்டில் பட்டின் இல்லாத இடத்தில் குத்தியிருந்த ஊசியைக்கழற்றி காற்சட்டையின் பாக்கற்றின் காசு வைத்த பகுதிக்கு காசு கீழே விழாதவாறு ஊசி கொண்டு பின் பண்ணினான்.

வண்....டூடூ.....திரி.....என்று தனக்குள்ள சொல்லிக்கொண்டு ஓட ஆரம்பித்து...ஆஸ்பத்திரி நோக்கிச்சென்றான் கோபால்.

டேய்....காசு பத்திரம்டா.....

தகப்பன் சொன்ன வார்த்தைகள் அவன் காதில விழவில்லை. 9 வயது நிரம்பியபையனவன்.....பள்ளிக்குச் செல்வதும், செல்லாமல் விடுவதும், வறுமையில வாடுவதும். ஏக்கங்களும், வேதனைகளும்.. அவனைப்பொறுத்தவரையில் அவனுக்கு அவைகளே முழுச்சொத்தும்.

வேகாத வெய்யிலில் கால்கடுக்க....கை உளைய பழைய சயிக்கிள்களைப்போட்டு உருட்டி, உருட்டிப் பட்ச் போடுவதும், முதுகு வளைய வளைய காத்தடிப்பதுமாக அவன் அன்றாட வாழ்க்கைச்செலவு பயணிக்கும் வேளையில்......நேற்று இரவு நடந்த சம்பவத்தை நினைச்சுப்பார்த்தவுடன் மீண்டும் அழுதான்.....மாயாவி...கண்களால் வழியும் அவன் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாமல் இருகைகளிலும் ஓயில் இருக்க.....உள்ளங்கைகொண்டு கண்களைத்துடைத்து துடைத்து.....அழுதான்...
அவன் அழுதது.அவனுக்கு மட்டும்தான் தெரியும். பழைய சயிக்கிள்கள் என்றால் மட்டும்தான் மாயாவியிடம் தேடி வரும். புதிய சயிக்கிள் என்றால் இயந்திரங்கள் கொண்டு காற்றடிக்கும் பம், பட்ச் போடும் மெசின் பூட்டப்பட்டுள்ள........ வேறு இடங்களுக்குச்செல்லும். குறிப்பாகச் சொல்லப்போனால்......வசதிபடைத்தோரின் பெரிய கட்டிடக் கடைகள் வந்தபின்பு...இப்படியான ஏழைஎளியவர்களின் கடைகளுக்கு.....அரிக்கன்லாம்புக்குக்கூட எண்ணெய் வேண்டவே வருமானம் பத்தாது. அவர்கள் வயிறு நிறைய சாப்பிடுவது என்றது......ஊரில பொங்கல் வந்தால்தான்.



தொடரும்.....

மனசாட்சி.....1

காதைப்பிளக்கும் இடிமின்னல் வேறு...சோ வென மழை பெய்தபடியிருக்க..அதிகாலையிலேயே இப்படி மழை பெய்ய வேணுமா என்ன...?
என்று தனக்குள் பேசியபடி கந்தவர்மன் அலுவலக்திற்குத் தயார் ஆனார். காலையில வழமையாகத்தரும் இரண்டு பாண்துண்டுகள் ( ரொட்டித்துண்டுகள்) அதற்கு மேலே கத்தி படாமல் மெல்லிய பூச்சாகப்பூசப்பட்ட அன்னாசிஜாம் அத்தோடு நாளாந்த மாத்திரை இத்தனையும் லபக் என் விழுங்கிவிட்டு........காலையில் மழையைக்கண்ட ஆரம்பம் முதலான எரிச்சல் எனும் பயில் கட்டோடு தன் குடையைத் தேடலானார். எங்கதான் போய் துலைஞ்சுது...?

மூலைமுடக்குகளில் தேடியும் காணாததால் மனைவி மகேஸ்வரியை உதவிக்கு நாடினார்..

ஏம்மா.....இந்தக் குடையை காணலையே.எங்காச்சும் கண்டியோ...? வேலைக்கு நேரமாகிடிச்சு.......டைமுக்கு போகலைன்னா அப்புறம் வேலை காலி தெரியுமுல்ல...

இதோ வந்திட்டேனுங்க.....மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகளையும் ஆடுகளையும் இந்தா.....ம்ம்.....ம்....ச்...போ...போ...என்று அதுகள் கூட்டினுள் துரத்திவிட்டு 3 மூலைகளில் கம்பிகள் மட்டும் எட்டிப்பார்க்கும் ஓட்டக்குடையுடன் ஓடி வந்து கணவர் கந்தவர்மனிடம் காலையிலையே வெத்திலை போட்ட பற்கள் சிவக்க சிரித்தபடி கொடுத்தாள்.

அட நீதான் எடுத்தியோ.....கொஞ்சம் கூட புத்தியில்ல. எப்பதான் திருந்தப்போறியளோ...ம் சரவணா...

இல்லைங்க..ரொம்ப நேரமா ஆடுகள் எல்லாம் மழையில நனைஞ்சு......அப்புறம்..

மனுசன் வேலைக்குப்போகிற நேரமதுவுமா இந்த ஆடுகள்தான் ரொம்ப முக்கியமோ......சரி.சரி.....நான் போயிட்டுவாறன்.

காற்று வேகமாகக் வீச, சயிக்கிளக்கூட தெம்பாக மிதிக்கமுடியாமல் மிக கஷ்டப்பட்டு ஒரு கையிலே குடை, மறுகையிலே சயிக்கிள் கைபிடி. தலையைக்குனிந்தவாறு பாதி முதுகு நனைந்தபடி, தன்னால் முடிந்தவேகத்தில் தன்கந்தோருக்கு விரைகிறார்.

அடடா இது என்ன மழை..இப்படி டப்பென விட்டுவிட்டதே....குடையை மடித்துச்சுருக்கிவிட்டு சயிக்கிள் சாத்திவைக்கப்படும் இடத்தில அவருடைய சயிக்கிளும் நங்கூரமிடப்பட்டு விட்டது.

பி்.நே.....வேலைமுடிந்து வீட்டிற்குச்செல்லும் நேரம்.....அடடா...சயிக்கிள் டயர் காற்றுப்போய்விட்டதே என்று மனவருத்தத்துடன் அதனைப் பார்க்க அந்த காற்றுப்போன டயரில் பூத்துப்போனது பழையக்கடை மாயாவி. அட ஆமா அவன் இருப்பதே மறந்துட்டேன். சிரித்துக்கொண்டே சயிக்கிளைப்பிடித்துக்கொண்டு மாயாவியின் கடை நோக்கி நடையாய் நடைபோட்டார் கந்தவர்மன்.

ஐயா வாங்கய்யா! வாங்க!.....என்னங்க ஐயா டயரு பிரச்சனையா...? இந்தா இப்ப ஒரு நொடியில முடிச்சிடுறன். டேய் கோபாலு......கோபாலு.ஐயாவந்திருக்காருடா அந்தக் கதிரையை கொணார்ந்து போடுடா கழுதை.

இந்தா கொண்டுவாறனப்பா....

கதிரையும் வரவே உட்கார்ந்துகொண்டார் கந்தவர்மன்.

ஐயா பயல அனுப்பி டீ ஏதாச்சும் வாங்கிவரச்சொல்லட்டாய்யா.....

இல்ல.இல்ல....அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நீ முதல இதை முடிச்சுக்கொடுத்திடு.

ஆகட்டும் ஐயா.......டயருக்கு பட்ச் போடனுமய்யா. கொஞ்ச நேரமாகும் பறவாயில்லைங்கலா..

ஓ.அப்படியா, இந்தா மாயாவி....அப்படியே.. உன்ர மனுசி எங்க மங்காவைக்காணல்ல...

ஓ......அதுவா....இப்பத்தான் வூட்டிற்கு போயிருக்கு......யாரோக்கோ அரிசியிடிச்சுத்தாறதா சொல்லிப்போட்டாமுல்ல.அதனால அது போயிட்டுதய்யா.

ஏன்யா.ஏதும் வூட்டு வேலை இருக்குங்கலா...?

இல்ல...இல்ல....இந்தக்குடையையும் தைச்சு சரி பார்த்து தரச்சொல்லிக்கத்தான் கேட்டேன்.

அதுகென்னங்கய்யா.....இவன் பய இருக்கானுங்க.செஞ்சுமுடிச்சிடுவானுல்ல.......இங்க கொடுங்கய்யா....

அப்புறம் மாயாவி வீடு பக்கத்திலதான் நான் வீட்டிற்கு நடையில போறன்....மழையும் இல்ல.
நீ காலையில கொணார்ந்து தந்துடு என்ன..

ஆகட்டும் ஐயா. நான் காலையில சேவல் கூவ முதல் ஐயா வீட்டு வாசில நிற்பேன் சரியாங்க ஐயா...

சரி.சரி..சொன்தைப்போலவே செஞ்சிடு என்ன..அப்ப நான் வாறன். ஏதும் 10, 20 இப்ப தந்திடிறனே மாயாவி...

என்னங்க ஐயா நீங்க.உங்கள நம்பாமலா....காலையில எடுத்துக்கிறேனய்யா.

அப்ப சரி நான் வாறன்..

பொடிநடையாய் வீடுநோக்கி கந்தவர்மன் நடைபோட்டார்.

தொடரும்....