Wednesday, January 14, 2009

மனசாட்சி.....10

மனம் தினம் படும் வேதனையை யாரிடம் போய்கூறுவது....எல்லாமே புது இடம்....பாட்டியின் அதட்டலில் எழுந்த கோபாலுக்கு வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான அட்டவனையை பாட்டி வாசித்துக்கொண்டிருந்தார்....
அதன் ஆரம்பமாக கேட்டைத்திறந்து வாசலில் தண்ணீர் தெளித்து முற்றம் கூட்ட அந்தச்சிறுவனை விளக்குமாறும் கொடுத்து அனுப்பினா பாட்டி....
அவன் உயரத்திற்கு இருமடங்காக அந்தத்தடி.....கூட்டிப்பழக்கமில்லாதவன்....கூட்டுகிறான்....கூட்டக்கூட்ட திரும்பத்திரும்ப குப்பை சேருகிறது....

எட்டிவந்து பார்த்த வாசுகி....கோபால்......காற்று இந்தப்பக்கமாக வீசுதடா.நீ எதிர் பக்கமாகநின்று கூட்டினால் கூட்டமாட்டாய்.....அடுத்த பக்கமாக கூட்டு.....சரியா...

நீர் தெளிக்க தேவையில்லை.அவன் கண்ணீர் தரையெங்கும் முத்துமுத்தாய் தரையைத்தொட்டபடி மனம் வேதனைப்படுகிறேன்.பல மணிநேர போராட்டத்தின் பின்பு அவ்விடத்தை தன் சின்னஞசிறு கைகளால் குப்பைகளை அள்ளி துப்பரவு செய்து விட்டு...பாட்டியின் அடுத்த வேலையாக நாய்கூடு துப்பரவு செய்தலுக்கு போகிறான்....

நாயிற்கு கிட்ட போகாமல்.....அழுகிறான்.....தனக்கு மட்டும் கேட்கும் விசும்பலில்.....பயத்தால் அழுகிறான்......இவன் அழும் பாஷை, எங்கோ இவன் இதயத்தில் இருக்கும் அந்த வேதனை ....அந்த ஐந்தறிவு ஜீவன் நாய் பிளாக்கிக்கு.. விளங்கியிருக்கவேணும்....

வாலையாட்டியது......நாக்கை நீட்டிக்கொண்டு மெல்ல கால்களை மடித்து நிலத்தில் வைத்து இருந்து கொண்டு தலையை மேலே உயர்த்திக்கொண்டு மெல்ல ங்..ங்....என்று ஒலி எழுப்பியது அந்த நாய்....

கையை மெதுவாக நீட்டினான்...கோபால்.....கையை நக்கியதுடன்....இழுத்துக்கொண்டான்....விரல்களை பொத்துக்கொண்டு......கண்களை இறுக்க மூடினான்....மீண்டும் நாய் நக்குவதை உணர்ந்து கண்ணைத்திறந்து பார்க்கிறான்....அது இன்னும் கிட்ட அவனருகில் வந்து நின்றது....மீண்டும் மெதுவாகத்தொட...பேசாமல் இருந்த நாயைக்கண்டவுடன்....நாயைப்பார்த்து சிரித்தான்....தடவினான்....

ஓ.......இப்போது அவன் நண்பனாகிவிட்டான்......அந்த சந்தோசத்தில் எழுந்து ஓடினான்.......அந்த நாயும் அவன் பின்னால் ஓடியது....ஒரு சுவர் மறைவில் நின்று எட்டிப்பார்தான்.......அதுவும் எட்டிப்பார்த்தது......அவன் மிகவும் சந்தோசப்பட்டான்......

டேய்......அங்க என்னடா சத்தம்......நாய்கூட்டை துப்பரவாக்கிட்டியோ...

ஊப்ஸ்.....பாட்டி......என்று தலையில கைவைத்துவிட்டு...ஓடி வந்து நாய்க்கூட்டை துப்பரவு செய்தான்....ஆசையாக அந்த வேலையை செய்தான்......சாப்பாட்டுத்தட்டம் எல்லாம் வடிவாகக் கழுவி....அதன் தண்ணீர் வைக்கும் குட்டிச்சட்டி எல்லாம் வடிவாக கழுவி....அழகாக வைத்தான்..

அதன் பின்பு முயல்கூடு துப்பரவு செய்தான்...அதனையும் அவன் அன்போடு அவைகளை தழுவி அவைகளோடு விளையாடி மகிழ்ந்தே செய்தான்.

நாளாந்த வேலைகளில் அவன் கவனம் ஓய்வின்றிச்செல்ல.....பகல் முழுக்க வேலை செய்த அலுப்பில் நன்றாகத்தூங்கிவிடுவான்..அவன் மனதில் அவன் தாய் கண்ணை விட்டு அகலாத கருவிழிபோல மனதில் ஒவ்வொரு நிமிடமும் அவனோடு கூடவே இருந்துகொண்டாள்....

எப்பொழுதுமே....அந்த வீட்டில் பாட்டி முதல்...கடைசிப்பாப்பா வரைக்கும் கோபால்....கோபால் தான்......
அவன் பெயரை சொல்லிச்சொல்லி எல்லா வேலைகளும் நடக்கும்...அவன் தெருமூலையில் இருக்கும் கடைக்குப்போனால்கூட அவன் இல்லாத அந்த அந்த 10 நிமிடமே பெரும் பாதிப்பை உண்டு பண்ணுவது போலயிருக்கும்....

அவனுக்கென்று தனியாக சாப்பாட்டுத்தட்டம், டம்ளர்....இதைவிட ஒரு சின்ன இடம் படுக்கைக்கு....அவன் வாழ்வு......அங்கேயே மேடைபோட்டது. அதில் ராஜாவும் அவன்தான் மந்திரியும் அவன்தான்...

யாருமில்லாத போது பறந்து திரியும் பட்டாம்பூச்சியாய் அவன் சுதந்திரமாக பறப்பான்...

அதிகநேரமாக அடித்துக்கொண்ட டெலிபோன் மணிச்சத்தம் கேட்டு....என்ன மாமி பக்கத்திலதானே இருக்கிறியள் அதை எடுக்கக்கூடாதோ...

ஐயோப்பா....நா மாட்டேன்.....நமக்கேன் ஏன் இந்த வீண்தொல்லை.

ஹலோ.....ம்.சரி அனுப்பிவைக்கிறன்...

என்னவாம் கடைக்கு போனவுடனேயே போன் போடுரார் மகன்..

கோபாலை கடைக்கு அனுப்பிவைக்கட்டாம்...மரக்கறிகள் வந்திருக்காம் குடுத்தனுப்புகிறாராம்.

சொல்லிக்கொண்டே கோபாலை கூப்பிட்டு குளித்துவிட்டு உடுப்பு மாற்றி கடைக்கு ஐயா வரட்டாம் போய் வாறீயா...

சரிம்மா...

அவன் வீதியால போகும்போது ஒரு போதும் நடந்து போகமாட்டான்....ஓட்டம்தான்...ஓடிப்போய் மூச்சுவாங்க கடையில நின்றான்.அது ஒரு சாப்பாட்டுக்கடை...அங்கு சமையல் செய்பவர்கள் முதல் அனைவரும் கோபாலில் மிகவும் பிரியமானவர்கள். அங்கு போனால் அவன் நன்றாக சாப்பிட்டு வருவான். இன்று அங்கு போனவனுக்கு.....ஆச்சரியம் காத்திருந்தது...

புதிய சயிக்கிள் ஒன்றை வேண்டி வைத்திருந்தார்..ஈஸ்வரன்...அன்போடு கோபாலவிடம் கொடுத்தார்.....காலையிலையே கடைக்குப்போய் உனக்காக வாங்கி வந்திருக்கிறன்.....இனி வெய்யிலுக்குள்ள நடந்து வராதே என்ன....விருப்பமா எனக்கேட்டார்...

ஆ........என வாயில் இருகைகளையும் வைத்துக்கொண்டு பிரமித்துப்போய் நின்றான்....அங்கு கொடுத்த பொருட்களையும் வாங்கிக்கொண்டு மின்னலாக வீடுநோக்கி விரைந்து வந்தான் கோபால்....மிகவும் குதூகலகமாக இருந்தான்.சிரித்துக்கொண்டான்.....பாட்டி மட்டும் எரிச்சல் பட்டாங்க.....மற்றப்படி அவன் சயிக்கிளை அங்கவுள்ள வாண்டுகள் அனைவருமே ஆசையாக தொட்டு பார்த்து மகிழ்ந்தார்கள்...
வாசுகியும்.....

கோபால் உனக்கு விருப்பமாகயிருக்கும் என்று நான் தான் ஐயாட்ட சொன்னான்....கவனமாகப் போய்வரவேணும் என்ன....

சரிம்மா.....

மீண்டும் என்ன நினைத்தானோ.......அம்மா......என்று கூப்பிட்டான்.

திரும்பிய வாசுகி என்னப்பா......என்ன.சொல்லு..தயங்காம சொல்லு.....

தாங்ஸ்.....என்றான் தயங்கியபடியும் சின்னசிரிப்புடனும்.

அட சமத்து...இதுகூட சொல்லத்தெரியுமா உனக்கு....சிரித்தக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள் வாசுகி.

அடிக்கடி துடைத்துக்கொண்டு......தனது போர்வையால் சயிக்குளுக்கு போர்த்து விட்டபடி இரவு நித்திரைக்கு போனான் கோபால்....

ஆனாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. தன் அம்மாவிடம் இதனை காட்டவேண்டும் அம்மாவிற்கு இது பற்றி சொல்லவேண்டும் என ஆசைப்பட்டான்.பின்பு ஒரு வித கவலை..மீண்டும் கண்ணீர்..மீண்டும் தூக்கம்..

தூக்கத்தில் கனவில் வந்துபோவதெல்லாம் அவன்தாய் மங்காதான்.அவன் கனவையோ...அவன் பேச வேண்டும் என்று ஆசைப்படும் பேச்சுக்களையோ யாருமே செவிமடுப்பதில்லை. அதற்கு கோபாலுவும் ஒருபோதும் துணிந்து யாருடனும் பேசுவதில்லை.

இனிமையான நாட்களாக அவன் வாழ்வு போய்க்கொண்டிருந்தது.

தொடரும்...
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8714

மனசாட்சி.....9

செளகரியமான வண்டியில், ஈஸ்வரன் அவர் மனைவி வாசுகி, அவர்கள் பிள்ளைகள் விஷாலினி, விஷ்ணு, விஷாகன்....இவர்கள் பாட்டி
ராஜேஸ்வரி...டிறைவர் செபஸ்தியான் மற்றும் ஓர் மூலையில் சாய்ந்திருக்க மனமின்றி நீர் வற்றாத விழிக்குளமாக யன்னல் ஓரம் பார்த்தபடி 8 வயது நிரம்பிய கோபால்.....

அவரவர்கள் எண்ணக்கனவுகள் நித்திரையிலும், பாடல் கேட்பதிலும், பழைய விடங்களைச்சொல்லி கதைப்பதுமாக பயணித்த அன்றைய பொழுதிற்கு முடிவுரையாக ரெத்தினபுரி மாவட்டத்தினுள் வண்டி உட்பிரவேசிக்கும் போது அதிகாலை 7 மணி....அங்கிருந்து சீரான பாதையூடாகச்சென்ற வண்டி ஒரு முடக்கில் திரும்பவும்....தார்போட்டிருந்தும் ஒழுங்காகஅமையாத .. பள்ளமும் திட்டியுமான ஓர் வீதியில் புழுதியைக்கிளப்பிக்கொண்டு சற்றுத் தூரம் ஓடி.....உயர்ந்த வீட்டின் முன் வண்டி நின்றது.....

பயணஅலுப்பைக் கைகளை மேலே உயர்த்தி விரல்களை கோர்த்துக்கொண்டு அலுப்பகற்றினார் ஈஸ்வரன்...

ஈஸ்வரன் சாவி போட்டு பூட்டைத்திறந்து கொண்டு வாலையாட்டிவரும் நாயை தடவிக்கொண்டு.....வீட்டினுள் யன்னல்களின் கொழுக்கிகளை தட்டி இதுவரை நாள் பூட்டியிருந்த வீட்டிற்கு காற்றோட்டம் வரும்படி ஆவணசெய்தார்...
டிறைவர் செபஸ்தியான் ஒருகையில் கடைக்குட்டி விஷாகனைத்தூக்கிக்கொண்டு மறு கையில் ஒரு பெட்டியையும் காவிக்கொண்டு வீட்டினுள் சென்றான்....

ஒவ்வொருவராக தத்தமது வேலைகள்.....
வண்டியை விட்டிறங்கிய கோபால் அப்படியே நின்றான் ...சுற்றவரப் பார்த்தான் தூரத்தே பெரிய மலை ஒன்று காணப்பட சுற்றிவர ஆங்காங்கே தென்னை மரங்கள் அதிகமாகப் பச்சைப்பசேலெனக்காணக் காலையில் பூத்த புது மலர்கள் காலைக்கதிரவனின் கதிர்கள் பட்டு பூத்துநிற்க....ரீங்கார ஓசையோடு கருவண்டுகள் மகரந்தத்தேனுக்கு வட்டமிட.........அந்த வீதியில் அநேகமான கல்வீடுகள் மாத்திரமே காணப்பட அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்...

நாய் குரைத்தது.....

சத்தம் கேட்டு ஓடி வந்தான் விஷ்ணு.....அம்மா......அம்மா.....கூப்பிட்டான் சத்தமாக......

அட ஏன்டா அங்கேயே நின்னுட்டாய்.வாடா.....உள்ள வாடா......ராஜேஸ்வரிப்பாட்டியின் கணீர் என்ற குரலில்...

தயங்கினான் கோபால்........

அடடா வாடாப்பா......என்ன பெயர் மறந்தட்டேன்......வாசல் வந்து எட்டிப்பார்த்த ஈஸ்வரன்....

அப்பா அவன் பெயர் கோபால்.....மூத்தபொண்ணு விஷாலி டக்கென்று கூறினாள்....

ஓ......கோபால் என்ன......சரி உள்ள வரச்சொல்லு.நாயிற்குப்பயப்பிடுறான் போல.....

வா கோபால் வா.....பயப்பிடாதே நம்ம பிளக்கி உன்ன ஒன்னும் செய்யாது வா....என் வீட்டைச்சுற்றிகாட்டுறன்.எங்ககிட்ட 2 வெள்ளை முயல்களும் இருக்கு....பார்க்கப்போறீயா..........வா....கோபால்...

ஆமாஆமா 1 என்னோடது மற்றது விஷாலியோடது....இனி உனக்கும் 2 ம் தருவோம்.என்ன.....விஷாலி......பதிலோடு கேள்வியுடன் கூறினான் விஷ்ணு...

முயல்கள் என்றவுடன்.....எங்கிருந்துதான் அவனுக்குத்துணிவு வந்ததோ.....உடனே மெல்ல ஒரு அடி முன்னால் வைத்தான்....பிளக்கி திரும்பவும்..குரைத்தது.....

பயப்பிடாதே பிளக்கி ஒன்னும் செய்யாது வா.....

பயந்தும் பயப்பிடாமலும் விஷ்ணு ... பின்னால் சென்றான் கோபால்.......உள்ளே சென்ற பாட்டி விஷாலி.......வாம்மா....பல்தேய்ச்சுக் குளிக்கவேணும் என்று கூப்பிடவும்.......விஷாலியின் பதில் வராதபடியால வெளியில் சென்று பார்க்கிறார்....பின்னால இருந்து சத்தம் வருகிறது.....ஓ...இவள் வந்தவுடனையே முயல்கூட்டிற்குப்போட்டாளோ......பாட்டியின் முணுமுணுப்போடு முயல்கூட்டருகே செல்ல.....கோபால் முகமலர்வோடு முயல்குட்டியைத் தூக்கித் தடவிக்கொண்டிருந்தான்....

டேய்.......முட்டாலே இப்படிக் கையில முயலை தூக்கிவைச்சிருந்தா அது செத்திடுமடா லூசே..........செவியில புடிச்சு தூக்கவேணுமடா......வந்த அன்றைக்கே காட்டிட்டியே உன்ர கைவரிசையை........உன்னை வைக்க வேண்டிய இடத்தில வைக்கவேணும்...போ.போ......இந்தப்பக்கத்தால போய் கிணத்துல அள்ளிக் குளிச்சிட்டு வா......கிடக்கிற அலுக்கெல்லாம் போகக்குளி......

விஷ்ணு கிணற்றடியை காட்டுப்பா....அப்படியே கட்டில துணிக்குப்போடுற பார்சோப்பையும் எடுத்துக்குடு சரியா....

பாட்டி....அவனைப்பேசாதீங்க பாட்டி பாவம் கோபால் அழுவுறான்....

சும்மாயிரு நீ.பெரியமனுசியாட்டம் கதைக்க வந்திட்டாய்...நீ போய் குளி பாத்தூறும்முக்குள்ள சுடுதண்ணி போட்டுக் கலக்கி வச்சிருக்கன்......

பாவம் அந்த பிஞ்சு மனங்களின் ஒரு நிமிட சந்தோசத்தைக்கூட பெரியவங்களான பாட்டியினால் பொறுக்கமுடியவில்ல....
நல்ல மனசுகளாக வளருவாங்க........நாளடைவில் உடல்தேயத்தேய மனசும் தேய்வடைகிற நிலமை இவர்களைப்போல ஒரு சிலரில் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பது உண்மை.....மனசாட்சியே இல்லாத இப்படிப்பட்டோர் வாழும்வரை நமக்கெங்கே விடிவுகாலம்....ம்...கர்த்தரே... நீதான் காக்கவேணும் அந்தப்பையனை...

மனதிற்குள் நினைத்தவாறு வாசுகி தந்த தேனீரை அருந்திக்கொண்டு வீட்டின் முன் கட்டப்பட்ட போர்ட்டிக்கோவின் கட்டில் இருந்தபடி மனங்கலங்கினார் டிறைவர் செபஸ்தியான்...

அப்பா...அப்பா......பாட்டி கோபாலுவை பேசுறாப்பா.அவன் அழுவுறான்......பாவமப்பா....பாட்டிகிட்ட சொல்லுங்கப்பா....பேசவேணாம்முன்னு...

சரி நான் பாட்டிக்கு சொல்லிவைக்கிறேன் சரியா....நீ போய் அம்மாட்ட ஏதும் வாங்கிச்சாபிடு......டி.வி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே பதிலுரைத்ததார் ஈஸ்வரன்.

அன்றைய பொழுதுகளின் நேரம் விரைவாகச்சென்று......சூரியனின் தூக்கத்தில் நிலவின் ஒளியில் சாப்பாட்டறையின் ஓர் ஒதுக்குப்புரத்தில் கோபாலுவின் தனிமையான தூக்கம்.....அவனால் தூங்க முடியவில்லை. அவன் தாய் கண்முன்னால் சிரித்துக்கொண்டு வருவதுபோலவும், அடுத்தகணம் நோய்வாய்ப்பட்டு ஹொஸ்பிட்டலில் இருப்பதும் மாறிமாறி நினைவுகளை மனதில் வைத்துக்கொண்டு அழுகிறான்.........அவன் அப்பாவை நினைக்கும் போது முகத்தில் ஓர் மாறுதல்.......கொஞ்சமும் தன்னில் பாசமில்லாது தன்னை விலைக்கு விற்றுவிட்டார் என்று எண்ணி வேதனைப்பட்டான்.....அவன் சோகத்தைக்கேட்க யாருமே அங்கில்லை. யாரிடமாவது தன் தாயைப்பற்றி கேட்கவேண்டும் என ஆழுகிறான்...இனி நான் என்ன செய்யப்போகிறேன்.இனி என் அம்மாவைப்பார்க்கமுடியாதா....? எனக் கடவுளிடம் கேட்கிறான்......

படுக்கையை விட்டு மெல்ல எழும்புகிறான்......திறந்திருந்த யன்னல்ஊடாகப்பார்க்கிறான்.....அங்கே முழு நிலவு. ஆனால் அவன் கண்களுக்குத் தெரிவதெல்லாம் அவன் தாய் மட்டும்தான்....யன்னல் கம்பிகளினூடே கையை நீட்டுகிறான் அம்மா வாம்மா......ஓர் தென்னை ஓலையின் கீற்றினுள் மறைந்து காணப்பட்ட அந்த நிலவில் தன் தாயின் முக்த்தைப்பார்க்கிறான். யன்னல் கம்பிகளை கைகளால் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுகிறான்.....பாட்டியின் காதில் கேட்டால் எனக்கு லூசா....மடையா எனப்பேச்சுக்கள் வருமென்று தெரிந்து சத்தம் வெளிவராமல் அழுகிறான்....

யாரிடமும் பேச்சு வாங்கியதில்லை.......அப்படி அப்பா பேசினாலும் மறு நிமிடமே தனக்கு ஐஸ்பழம் வாங்கித்தருவார்......தனிமையாகக்கூட உறங்கியதில்லை......இன்னும் அவனுள் வளரும் வேதனைகளுக்கு அவன் இதயம் தாங்க வேண்டும் என கடவுளை கும்புடுகிறான்.....மீண்டும் திரும்பிப் பார்க்கிறான் அவன் பாயருகே ஓர் கரப்பான் பூச்சி....அதனைக்கண்டவுடன் நடுங்கியபடி....கால்களை உயர்த்துகிறான்.......பூச்சி மெல்ல தன் இடத்தை மாற்றிக்கொள்ள.....தூங்காத இரவொன்றை முடித்துக்கொண்டு அதிகாலை யன்னலின் கீழே அப்படியே கால்களை சுருக்கிக்கொண்டு நல்லதூக்கம் கொள்ளுகிறான் கோபால்..

மறுநாள் விடியலில் பாட்டியின் அதட்டல் கிடைக்கும் என்றதை எண்ணாமல் இரவில் விழித்திருந்த விழிகள் இறுக மூடி துயில்கொண்டன.


தொடரும்....
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8518