Saturday, June 28, 2008

நாணயம்.

மண்சோலைக் கிராமத்தில் இளைஞனாக குடியேறி, அங்குள்ள பாடசாலை ஆசிரியராகி பின்னர் தலைஆசிரியராக பதவியேற்றப்பட்டு ஓய்வு பெற்றவரே ராகவன் மாஸ்டர்.
காதலித்து கெளரியை கரம் பிடித்து இல்லற வாழ்வில் இனிதே வாழ்ந்து ஐந்து பிள்ளைகளுக்கும் அன்பான தந்தையானார்.



காலச் சக்கரம் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி எத்தனை பேருக்குத்தான் சுழறும்.
ராகவன் மாஸ்டரின் வாழ்விலும் பெரும் பள்ளம் விழுந்தாற் போல் பணக்கஸ்டம் வந்து வாட்டியது. மண்சோலைக்கிராமத்தில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் பெரும் மரியாதைக்குரிய அண்ணன் மகாலிங்கத்தை அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல அடுத்தடுத்த கிராம மக்களும் அறிந்து கொண்டிருந்தனர்.

மனம் கவலை அடந்தால் ஆலய வாசலில் மண்டியிடுவோம். பணம் தட்டுப்பாடானால், கடனாகப் பெற வட்டிக்கடை வாசலில் தவம் இருப்போம்.
ராகவனுக்கு மட்டும் என்ன ஆகாயத்தில் இருந்தா கொட்டப்போகிறது. அவரும் தன் மனைவி மக்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு மகாலிங்கத்தின் வீட்டுக்கதவைத் தட்டினார்.

அடடா வாங்க மாஸ்டர்...வரவேற்புக்கு ஒன்றும் குறைச்சலில்லை. அமோகமான வரவேற்பு. நிலமையை வெட்கப்பட்டும் வேதனைப்பட்டும் எடுத்துக்கூறி பெரியவர் முன்னிலையில் துண்டை விரித்து நகைகளை காண்பித்தார் ராகவன் மாஸ்டர்.

அட இதென்னங்க நீங்க......உங்களுக்கில்லாத பணமா...உங்கட நாணயம் தெரியாமலா மாஸ்டர். உங்கள நம்பாமலா. எடுங்கோ நகைகளை முதலில். எனக்கு உங்கள் மேல் உள்ள நம்பிக்கை ஒன்றே போதுமுங்க.....எவ்வளவு பணம் வேணும் என்றதை மட்டும் சொல்லுங்க...மாசம் 30 ம் திகதி வட்டிப்பணம் தந்தால் போதும்.

சொன்னபடி வட்டிப்பணம் மகாலிங்கம் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் மாரடைப்பால் மரணமானார் மாஸ்டர் ராகவன்.

சொல்லிக்கொண்டு வருவது பிரசவம். சொல்லாமல் கொண்டு போவது மரணம்.
ராகவன் மாஸ்டர் வீட்டில் மரணப்பந்தலும், மங்கிய விழிகளும், மார்பில் அடித்துக் கதறியழும் மனைவி மக்கள் மத்தியிலும்...

அட நான் ஏமார்ந்து போய்விட்டேனே....நகையை வாங்காமல் விட்டது என் மடத்தனம். இந்த மனுசன் தொப்பென்று மூச்சையடக்கும் என்று யாருக்குத் தெரியும்...இப்ப யாரிட்டத்தான் போய் கேட்பது....வாய்விட்டு வெந்து துடித்தார் மகாலிங்கம். இறந்த மனிதனுக்காக இல்லை. முடங்கிய பணமும் இறந்து விடுமா என்ற அச்சத்தில்.

ஒத்தாசை பாடிக்கொண்டிருந்தாள் அவர் மனைவி வதனா. போங்க...ஒரு நிமிசமும் தாமதிக்காது உடனே போங்க.. மையத்தை எடுக்கவிடாம ஒரு வழி பண்ணுங்க....கொடுத்த பணத்திற்கு வட்டியும் முதலும் உடனே வந்து சேர என்ன வழி என்றதைக் கேளுங்க....
அப்பவும் சொன்னனான் யாரையும் நம்பாதீங்க நம்பாதீங்க என்று கேட்டால் தானே....

பொங்கி எழுந்தாள் வதனா. மகாலிங்கம் கூடவே புறப்பட்டு மரண ஓலங்களின் மத்தியில் திடுதிப்பென்று கம்பீரமாக நின்றார்கள். இவர்கள் இருவரும் போதாது என்று அடியாட்களையும் காரில் போட்டு வந்திறங்கிய மகாலிங்கமும், மனைவி வதனாவும் நின்ற காட்சியைப்பார்த்து ஏதோ விபரீதமோ என அயலவர்கள் பின்வாங்கினார்கள்.

இவர்களைக்கண்ட ராகவன் மாஸ்டரின் முதல் புத்திரன் வீட்டிற்குள் ஓடிச் சென்றான்.
அங்க பாருங்கோ அவன்தான் மாஸ்டரின்ர மூத்த மகன். எங்களைக்கண்டவுடன் ஓடி ஒளியிறான். விடாதீங்கோ பிடியுங்கோ....வாங்கடா என்று கத்திக்கொண்டு அறையை நோக்கி ஓட்டம் போட்டார் மகாலிங்கமும் அவருடைய தடியாட்களும்.

போன போக்கில் எட்டி அவன் சேர்ட்டைப் பிடித்து இழுத்தார் மகாலிங்கம். எங்கடா ஓடி ஒளியப்பார்க்கிறாய். அப்பர் அம்போ என்று போயிட்டார். நீயாவது வாங்கின காசக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறாயோ....

நாங்க அந்த மானம் கெட்ட பரம்பரையில பிறக்கவில்லை ஐயா. இந்தாங்க உங்கள் பணம். இதை எடுக்கத்தான் நான் போனேன். என் அப்பா நாணயமானவர். நல்ல மனிதர். உங்கட பணத்தை குருவி சேர்ப்பது போலச்சேர்த்து தன் கையால் நன்றி சொல்லி கொடுக்கவேண்டும் என்று வெளிக்கிட்டபோது தான் இப்படி நேர்ந்தது. உங்களிட்ட பணம் இருக்கலாம். ஆனால் நல்ல மனம் இல்ல. அதை இப்ப நீங்களாகவே காட்டிக்கொடுத்துவிட்டீங்க....

இந்தாங்க எடுத்துக்கொள்ளுங்க உங்க பணத்தை. ஆயிரத்தில ஒன்று தப்பு நடக்கலாம். அதுக்காக எல்லோரையும் கள்ளன், கபடன் என்று எண்ணாதீங்க....நாங்க மிடில் கிளாஸ்தான். ஆனால் மனசால ஹைய் கிளாஸ்.

பேய் அறைந்தது போல வார்த்தைகள் எதுவும் பேசாது நின்ற வதனாவையும், மகாலிங்கத்தையும், சிவந்த ஈர விழிகளோடு....அதிகம் பேசாத மகனே அவர் செய்த நன்றியை நாம என்றைக்கும் மறக்கக்கூடாது. என்று சொல்லியபடி மாஸ்டரின் மனைவி கெளரி.

தலைகுனிந்தபடி நாணயமான மனிதர் என்று சொல்லி பூதவுடலருகே, அந்தப்பணத்தை வைத்துவிட்டு மகாலிங்கம் மனச்சுமையோடு சென்றார்.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

Sunday, June 22, 2008

ப்ளீஸ் மன்னிச்சிடுங்க...

வழமைபோல அதே பஸ் தரிப்பில் காலை 7.30 மணியிலிருங்து பஸ் வரும் திசை நோக்கி காத்துக்கொண்டிருந்தாள் தூவாரகா.
வழமையை விட அன்று காலை அதிக சனக்கூட்டம் பஸ்சிற்காக காத்திருந்தனர்.

" அடச்சே....இன்னைக்கு என்று இந்த பஸ் இப்படி லேட்டா வரவேணுமா..? எப்படியாச்சும் அந்த புதுசா வந்த மாங்காய் பிடாரி மனேஜருகிட்ட செம பேச்சு வேண்டத்தான் போறேன்.." மனதிலே பொங்கி வந்த கோபத்தில் வார்த்தைகள் வெளிவராது மனத்திற்குள் மட்டும் தீம் தக்க ததுமி தாளம் போட்டுக் கொண்டு இருந்தது தூவாரகாவிற்கு.

"அப்பப்பா.......என்னே சனநெரிசல்.." இதில தோளில பை, கையில புத்தகம்...ம்........இதெல்லாம்....ச்சே.பெண்ணாய் பிறந்ததே பாவம்"
மீண்டும் பேசியது அவள் மனதோடு மட்டும்.

" ஹலோ....ஹலோ......இஞ்ச பாருங்கோ....உங்களத்தான்..புளூ புடவை....இங்க....இங்க...இங்கபாருங்க..."

" ஆ....யாரது.......என்னத்தான் கூப்பிடறமாதிரியிருக்கே..."

எட்டிப்பார்தாள், அந்த இடை இந்த இடை வெளி என்று கூர்ந்து கூர்ந்து பார்த்தாள்...யாருமே அவள் கண்ணுக்கு தென்படவில்லை.

" ரவுடி பசங்க....பொம்பிள பிள்ளைங்கள சயிட் அடிக்க என்றே காலங்காத்தால புட்போட்டில தொங்கி வந்திடுவானுங்க...சீ......கழுதைகள்."

வாயிற்குள் முணுமுணுத்தாள். அவள் இறங்கவேண்டிய இடமும் வந்திடவே. சாறியை கையில் பிடித்தபடி மெதுவாக இறங்கினாள். மீண்டும் அதே குரலில்....

"தூவாரகா......நில்லுங்க....கொஞ்சம் நில்லுங்க..."

அவளும் கண்களில் கதிரவனை வைத்துக்கொண்டு காலில் மாட்டியிருந்த செருப்பை கையில வைச்சுக்கொண்டு......" என்னடா......என்ன...ஆ......என்டா வேணும் உனக்கு....??? என்னோட பேரை எப்படியாச்சும் தெரிந்து கொண்டு....இப்ப வேலையிடத்திற்கே வந்திட்டியா அயோக்கிய நாயே..."

" ஐயையோ......இது எனக்கு தேவையா..??? மாதவா...."

" ஓ...உன் பேர் மாதவனாக்கும்...அதுதான் சொல்லுறியோ..."

" இஞ்ச பாருங்க......ஏனங்க.....நீங்களெல்லாம் படிச்ச பொண்ணுக தானே.ஏன் எப்ப பார்த்தாலும், எந்த இளைஞர்களைப் பார்த்தாலும் வெடுக்கென்று சந்தேகப்படுறீங்க...எங்களுக்கும் உணர்வுகளை மதிக்க தெரியும், எந்தப் பொண்ணும் பார்க்காம நாங்க சயிட் அடிக்க மாட்டோம். ஆமா....
கொஞ்சமாவது பொம்பிள போல பேசுங்க..யாரையும் எடுத்தவுடனே சந்தேகப்படாதீங்க........இந்தாங்க பிடிங்க.உங்க டையறி. நீங்க பஸ்சில ஏறினபோது கீழே விழுந்தது. நான் பின்னால வந்தனான். அதை எடுத்துப்போட்டு எத்தனை தரம் ஒப்பாரி வச்சு கூப்பிட்டு பார்த்தேன். நீங்களும் பார்த்தமாதிரி தெரியல்ல. சரி.முதலாவது பக்கத்தையாவது பார்ப்போமே என்று பார்த்தேன். அதில" உயிருள்ள ரோஜா நான், உரிமையில்லாமல் தொட்டுப் பார்க்காதே, முள்ளால் எழுதுகிறேன். இவள் தொடங்க இதழ் புரட்டுகிறாள். தூவாரகா."

அம்முட்டு மட்டும்தான் பார்த்தேன். அப்படியே வச்சிருந்து....இந்தாங்க உங்க டையறி.....ஆளை விடுங்க.....எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். அப்பனே முருகா......ஐயோ......நான் போற பஸ் ......."

ஓடிச்சென்று தாவி ஏறினான் மாதவன். அப்போது......" ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.."
கண்கள் கலங்க நின்று வார்ததைகளால் சொன்னாள்.ஆனால் அவை அவன் காதுகளுக்கு எட்டவில்லை.




எழுதியவர்: தனிமதி.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7121

யார் மீது குற்றம்....?

வானத்தில் சிறகடித்துப்பறக்கும் பறவை போல் நானும் ஒரு காலத்தில், என் எண்ணச்சிறகை விரித்து இந்த உலகமே எனக்கு மட்டும்தான் சொந்தம் என பறந்து திரிந்து கொண்டு இருந்தேன். ஆனால் இன்று கண்ணீரால் உடல் கழுவி, விடும் பெருமூச்சு வெப்பத்தால் காய்ந்து வெந்து துடித்துக்கொண்டிருக்கிறேன்.

பெரிய மாடி வீடு, என் பெட்ரூமோடு சேர்த்து பெரிய சுவிமீங் பூல் போல் குளியறை, வெளியில் செல்ல கார். வீட்டிற்குள் நிறைய பொழுதுபோக்குகள்....ம்.இப்படியே என் வசதியான வாழ்க்கைக்கு பட்டியல் போட்டாலும் பக்கங்கள் நிறைந்து வழிந்துவிடும்.

இன்றோடு என் வயது 18. இதனை சந்தோசமாகக் கொண்டாட யாருமே என் அருகில் இல்லை. எப்படி எல்லாமோ வாழ்ந்த நான் இன்று இந்த சிறு கூண்டுக்குள் சிறைச்சாலை என்னும் இடத்தில் சிறு வெளிச்சத்தில் கண்ணீரால் இதனை எழுதுகிறேன்.

எல்லோரைப்போலவும் 17 வயதில் 12 ம் வகுப்பு முடித்து வெளியேறும் போது, எனது மொழியைச்சேர்ந்த ( தமிழ்) ஆரம்பத்தில் நண்பன் அவன், நாள் செல்லச்செல்ல காதலன் ஆனான். எப்படியாவது அம்மா, அப்பாவிடம் கூற வேண்டும் என முடிவெடுத்தேன்...அடிக்கடி போன் கதைப்பதைப்பார்த்து வீட்டில் பூகம்பம், போனை பறித்து வைத்தார்கள். கடுமையான காவல் போட்டார்கள்.

யாருமே என்னோடு அன்பாக கதைக்கவில்லை. அம்மாவின் அப்பாவின் சொந்தங்கள் எல்லோருக்கும் நான் பிழைவிட்டதாகச்சொல்லி என்னை வேறு நாட்டிற்குப் போகும் படி சொன்னார்கள் முடியாது என அழுது மறுத்தவிட்டேன். பல தடவை அப்பா அறைந்த வடுக்கள் கன்னத்தில் மறையாமல் இருந்தது. அது மறையும் வரைக்கும் என்னை வெளியில் அழைத்துச்செல்லமாட்டார்கள்.

கனடா நாட்டுச் சட்டம் பிள்ளைகளுக்கு அடித்தால் ஜெயிலுக்குப் போகவேண்டும். அதுபோல்தான் ஏனைய நாடுகளிலும் என்பது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரிந்த வியடம்.வீட்டிலும் தனியாக விட்டுச்செல்ல மாட்டார்கள்......எனது கொம்பியுட்டர் எல்லாம் இன்டர் நெட் கட் பண்ணி என்னை வீட்டுக் கைதிபோல் கண்காணித்து வந்தார்கள்.

அம்மா நித்திரைக்குப் போனாலும் எனது ரூம் சாவியை என்னை வைத்துப் பூட்டி எடுத்துவிட்டே தூங்குவா...தூங்குவதாக சொல்லுவா ஆனால் அவ யாரோடையோ வெகு நேரம் போனில கதைப்பா.......நான் குளிக்கும் போதுகூட பாத்றூம் கதவு சாத்தக்கூடாது என நிர்ப்பந்தம். அதற்காக கதவின் மேல் தடித்த டவள் போட்டுவிடுவா .இன்று இந்த ஜெயிலில் வாழ்வதைவிட மிகவும் கொடுமைப்பட்டே வாழ்ந்தேன்.

ஒரு நாள் நான் மயங்கி விழுந்துவிட்டேன். டொக்டரிடம் கொண்டு போனார்கள். அப்போது காரில் ஏறும் போது ஓடிவிட்டேன். எனது காதலனுக்கு போன் போட்டேன். அவனும் அந்த இடத்திற்கு வந்தான். இருவரும் ஒரு இத்தாலி நண்பன் வீட்டில் ரூமில் இருந்தோம். அம்மா அப்பா பொலிசுக்குப் போன் செய்த போது.....அவர்கள் 16 வயதிற்கு மேல் அப்படியிருக்கலாம் என்று நிராகரித்து விட்டனர்.கொஞ்ச நாள்தான்....மீண்டும் நான் சிறகடித்துப்பறந்தேன்.

என் காதலனுடன். என்னை படிப்பிப்பதாகச்சொன்னான். நம்பினேன். என்னையே கொடுத்தேன். அவன் ஆசைப்பட்ட நேரமெல்லாம் என்னோடு அவன் பொழுதுகள். அவனே தெய்வம் என்று வாழ்ந்தேன்.ஒரு நாள் வரவேயில்லை. அந்த வீட்டில் நான் தனியாகஇருந்தேன். போனில பேசினான். கார் பழுதாகிவிட்டதாகச் சொன்னான். நம்பினேன். மறு நாள் வந்தான் , கண்டவுடன் கட்டிப்பிடித்து ஓ....என்று அழுதேன்.

என்னை விட்டிட்டு எங்கேயும் போகாத என்று கதறினேன். ம்ம்.....என்று விட்டு போனில் யாரோடோ பேசினான். மீண்டும் நண்பனுக்கு சுகமில்லை என்று சொன்னான். நம்பினேன்.......உடனே போயிட்டு வருவதாகச் சொன்னான் வரவேயில்லை. இத்தாலிக்கார வீட்டு ஓனர் நல்ல ஆன்டி. அவ அப்பத்தான் 1 மாதம் இத்தாலிக்குப்போயிட்டு வந்தவ. அவ சொன்னா.......முதல் யாரோ பிலிப்பையின் கார பிள்ளையோட இவன் வந்து தங்கிப்போனவன்.

நான் கேட்டதிற்கு தன் கேர்ள் பிரண்ட் என்று சொன்னவன் என்றும். இவன் நல்லம் இல்லை. நீ உன் பேரன்ட்சோட போயிடு என்றா.எனக்கு தலைசுற்றியது. நம்ப முடியாமல் இருந்தது. எதுக்கும் அவன் வர கேட்போம் என்று இருந்தேன். மறு நாள் வந்தான்.....உடனே கேட்டேன். பளார் என்று அறைந்தான். அவ சொன்னா நீ நம்புவியா எனக் கேட்டான். ஐயோ மன்னித்துக்கொள் என காலைப்பிடித்து கெஞ்சினேன். கோபித்துக்கொண்டு போனான். பின்பு வந்தான். நாம வேற இடம் பார்க்க வேண்டும் என்றான். சரி என்றேன்.

நாளாக அவன் வரவேயில்லை. என் நிலமையை எண்ணி தலையில் அடித்துக்கொண்டேன். அம்மாதானே எப்படியும் என்னில் பாசம் இருக்கும் என்று அம்மாவிற்கு போன் போட்டேன். நான் பகுதி நேரமாக வேலை செய்ததால் கொஞ்ச பணம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு அம்மாவிடம் போக முடிவெடுத்தேன். அம்மா என் குரல் கேட்டவுடன் சீ நாயே என்று வைத்துவிட்டா. எனது சித்தி, பெரியம்மா, அத்தை, மாமா இப்படி எல்லோரையும் கெஞ்சினேன்.

உன்னை வீட்டில வைத்திருந்தால் எங்கிட பிள்ளையும் கெட்டுவிடும் என்றார்கள். செத்துப் போடி என்று கூட சொன்னார்கள்.மனம் மீண்டும் அவர்களை நாடியது. பலனில்லை. அம்மா வீடு போனேன்.அழுதேன்....மன்னிப்பு கேட்டேன். அப்பா தன்ர ஆட்களை கூப்பிட்டு என்னை வெளியில் மழைக்குள் தள்ளி விட்டார். யாரோ அங்கிள் எனக்காக கதைக்கப் போனார்.

அவரையும் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டனர் என்னைப் பெற்றவர்கள்.என்னிடம் இருக்கும் பணத்தில் ஒரு பாருக்குப்போனேன். எனது உயரத்தை பார்த்து விட்டு ஐடி எதுவும் கேட்காமல் எனக்கு 18 என்று சொல்ல நம்பி விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குடித்தேன். பெயர் தெரியாத வகை வேண்டி குடித்தேன். சத்தி எடுத்தேன். கவலைகள் மறந்தேன். பல தடவை போனேன். அதன் பிறகு ஒரு நாள் ஐடி கேட்டு பிடிபட்டுவிட்டேன்.இதோ இந்த ஜெயிலில் நின்மதியாகயிருக்கிறேன். என்னை வெளியில் எடுக்க யாருமே எனக்கு இல்லை. இன்றோடு எனக்கு 18 வயது.

ஒரு பிள்ளை லவ் பண்ணுவது குற்றம் என்றால் எங்க அம்மா, அப்பாவும் லவ் மரேஜ்தான். ஏன் அவர்கள் குற்றம் செய்யவில்லையா. நான் லவ் பண்ணினால் ஏன் அவர்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களால்தான் நான் இன்று இந்த நிலமைக்கு ஆளானேன். மன்னிப்பு கேட்டுக்கூட போனேன். ஏன் மன்னிக்க மறுத்தார்கள். பெற்ற பிள்ளையை விட மானமும், உறவுகளுமா பெரிது.

இப்பொழுது நான் தெளிந்து விட்டேன். எனக்காக மட்டும் வாழத் துணிந்துவிட்டேன். என்னாலும் நாலு ஏழைகளுக்கு வாழ்வு கொடுக்க முடியும் என வாழப்போகிறேன். இன்றோடு என்னை வெளியில் அனுப்பப்போவதாகச் சொன்னார்கள். அம்மா, அம்மா என்கிறார்கள். இப்படியும் அம்மா மார்கள் இருக்கிறார்கள்.நீங்கள் சொல்லுங்கள் யார் மீது குற்றம்

முற்றும்.

ஆக்கம்: தனிமதி
www.nilafm.com