Monday, July 14, 2008

மனசாட்சி.....1

காதைப்பிளக்கும் இடிமின்னல் வேறு...சோ வென மழை பெய்தபடியிருக்க..அதிகாலையிலேயே இப்படி மழை பெய்ய வேணுமா என்ன...?
என்று தனக்குள் பேசியபடி கந்தவர்மன் அலுவலக்திற்குத் தயார் ஆனார். காலையில வழமையாகத்தரும் இரண்டு பாண்துண்டுகள் ( ரொட்டித்துண்டுகள்) அதற்கு மேலே கத்தி படாமல் மெல்லிய பூச்சாகப்பூசப்பட்ட அன்னாசிஜாம் அத்தோடு நாளாந்த மாத்திரை இத்தனையும் லபக் என் விழுங்கிவிட்டு........காலையில் மழையைக்கண்ட ஆரம்பம் முதலான எரிச்சல் எனும் பயில் கட்டோடு தன் குடையைத் தேடலானார். எங்கதான் போய் துலைஞ்சுது...?

மூலைமுடக்குகளில் தேடியும் காணாததால் மனைவி மகேஸ்வரியை உதவிக்கு நாடினார்..

ஏம்மா.....இந்தக் குடையை காணலையே.எங்காச்சும் கண்டியோ...? வேலைக்கு நேரமாகிடிச்சு.......டைமுக்கு போகலைன்னா அப்புறம் வேலை காலி தெரியுமுல்ல...

இதோ வந்திட்டேனுங்க.....மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகளையும் ஆடுகளையும் இந்தா.....ம்ம்.....ம்....ச்...போ...போ...என்று அதுகள் கூட்டினுள் துரத்திவிட்டு 3 மூலைகளில் கம்பிகள் மட்டும் எட்டிப்பார்க்கும் ஓட்டக்குடையுடன் ஓடி வந்து கணவர் கந்தவர்மனிடம் காலையிலையே வெத்திலை போட்ட பற்கள் சிவக்க சிரித்தபடி கொடுத்தாள்.

அட நீதான் எடுத்தியோ.....கொஞ்சம் கூட புத்தியில்ல. எப்பதான் திருந்தப்போறியளோ...ம் சரவணா...

இல்லைங்க..ரொம்ப நேரமா ஆடுகள் எல்லாம் மழையில நனைஞ்சு......அப்புறம்..

மனுசன் வேலைக்குப்போகிற நேரமதுவுமா இந்த ஆடுகள்தான் ரொம்ப முக்கியமோ......சரி.சரி.....நான் போயிட்டுவாறன்.

காற்று வேகமாகக் வீச, சயிக்கிளக்கூட தெம்பாக மிதிக்கமுடியாமல் மிக கஷ்டப்பட்டு ஒரு கையிலே குடை, மறுகையிலே சயிக்கிள் கைபிடி. தலையைக்குனிந்தவாறு பாதி முதுகு நனைந்தபடி, தன்னால் முடிந்தவேகத்தில் தன்கந்தோருக்கு விரைகிறார்.

அடடா இது என்ன மழை..இப்படி டப்பென விட்டுவிட்டதே....குடையை மடித்துச்சுருக்கிவிட்டு சயிக்கிள் சாத்திவைக்கப்படும் இடத்தில அவருடைய சயிக்கிளும் நங்கூரமிடப்பட்டு விட்டது.

பி்.நே.....வேலைமுடிந்து வீட்டிற்குச்செல்லும் நேரம்.....அடடா...சயிக்கிள் டயர் காற்றுப்போய்விட்டதே என்று மனவருத்தத்துடன் அதனைப் பார்க்க அந்த காற்றுப்போன டயரில் பூத்துப்போனது பழையக்கடை மாயாவி. அட ஆமா அவன் இருப்பதே மறந்துட்டேன். சிரித்துக்கொண்டே சயிக்கிளைப்பிடித்துக்கொண்டு மாயாவியின் கடை நோக்கி நடையாய் நடைபோட்டார் கந்தவர்மன்.

ஐயா வாங்கய்யா! வாங்க!.....என்னங்க ஐயா டயரு பிரச்சனையா...? இந்தா இப்ப ஒரு நொடியில முடிச்சிடுறன். டேய் கோபாலு......கோபாலு.ஐயாவந்திருக்காருடா அந்தக் கதிரையை கொணார்ந்து போடுடா கழுதை.

இந்தா கொண்டுவாறனப்பா....

கதிரையும் வரவே உட்கார்ந்துகொண்டார் கந்தவர்மன்.

ஐயா பயல அனுப்பி டீ ஏதாச்சும் வாங்கிவரச்சொல்லட்டாய்யா.....

இல்ல.இல்ல....அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நீ முதல இதை முடிச்சுக்கொடுத்திடு.

ஆகட்டும் ஐயா.......டயருக்கு பட்ச் போடனுமய்யா. கொஞ்ச நேரமாகும் பறவாயில்லைங்கலா..

ஓ.அப்படியா, இந்தா மாயாவி....அப்படியே.. உன்ர மனுசி எங்க மங்காவைக்காணல்ல...

ஓ......அதுவா....இப்பத்தான் வூட்டிற்கு போயிருக்கு......யாரோக்கோ அரிசியிடிச்சுத்தாறதா சொல்லிப்போட்டாமுல்ல.அதனால அது போயிட்டுதய்யா.

ஏன்யா.ஏதும் வூட்டு வேலை இருக்குங்கலா...?

இல்ல...இல்ல....இந்தக்குடையையும் தைச்சு சரி பார்த்து தரச்சொல்லிக்கத்தான் கேட்டேன்.

அதுகென்னங்கய்யா.....இவன் பய இருக்கானுங்க.செஞ்சுமுடிச்சிடுவானுல்ல.......இங்க கொடுங்கய்யா....

அப்புறம் மாயாவி வீடு பக்கத்திலதான் நான் வீட்டிற்கு நடையில போறன்....மழையும் இல்ல.
நீ காலையில கொணார்ந்து தந்துடு என்ன..

ஆகட்டும் ஐயா. நான் காலையில சேவல் கூவ முதல் ஐயா வீட்டு வாசில நிற்பேன் சரியாங்க ஐயா...

சரி.சரி..சொன்தைப்போலவே செஞ்சிடு என்ன..அப்ப நான் வாறன். ஏதும் 10, 20 இப்ப தந்திடிறனே மாயாவி...

என்னங்க ஐயா நீங்க.உங்கள நம்பாமலா....காலையில எடுத்துக்கிறேனய்யா.

அப்ப சரி நான் வாறன்..

பொடிநடையாய் வீடுநோக்கி கந்தவர்மன் நடைபோட்டார்.

தொடரும்....

No comments: