Friday, February 13, 2009

மனசாட்சி...13

உலகம் எவ்வளவு வேகமானது. அன்றைய காலகட்டத்தில் தலை குனிந்து பக்கம், பக்கமாக பத்திரிகை புரட்டி வாசித்த காலம் குறுகிப்போய் விரலின் நுனியில் உலகத்தின் வியப்புக்களை வீட்டினில் இருந்து தலை நிமிர்ந்து பார்த்து வாழும் இக்கால கட்டத்தில்..

கோபாலுவின் வாழ்வும் புயலும், சுறாவளியும் அடித்து ஓய்ந்து போன கதைபோல் அவன் தாய் இறந்த செய்தி கேட்டு அதற்காக தன்னை நொந்துகொண்டு ஆதரவற்ற அனாதைபோல் தனிமையை உணர்ந்து அதிலிருந்து மீண்டு, மீண்டும் தந்தையை வெறுத்து தாயை வணங்கி, வழமைபோல தன் அன்றாட கடமைகளில் கவனம் செலுத்தி வந்தவனுக்கு..

காலம் மாறமாற அவன் கதையும் மாறியது. அதிக காலம் அவன் படிப்பு தொடரவில்லை. அவனின் உதவியின்றி யாராலும் எதுவுமே செய்ய முடியாது போக அவன் படிப்பும் பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்கு மிக முக்கியமான ஆலோசகராக பாட்டியும் முக்கிய காரணம்.தான் நடமாட முடியாது போக கோபாலை வேறு எங்குமே செல்ல தடையாகயிருந்தார்.

பருவ வயது.....வயது ஏறஏற அவனுக்கு வீட்டின் முன் முற்றம் கூட்டுவது பிடிக்காது போனது. பாடசாலைக்குச் செல்லும் கன்னிப்பெண்களின் கிண்டல்களுக்கு ஆளாகினான். அதனால் அதிகாலையிலேயே எழுந்து சென்று முற்றம் கூட்டி தன் கடமைகளை சரிவரச்செய்தான். அன்றும் அவன் அதிகாலை அவ்வாறு எழும்பி முற்றம் கூட்டும் போது அதிகாலை மலராக அவள் தென்பட்டாள்.

யார் அவள்...? தினமும் அதே வீதியால் காலையில் பூத்துக்கொண்டு போகும் அதே பெண். இன்று அவனுள் ஒரு மாற்றம். மங்களமான அதிகாலை, தென்னங்கிளிகளின் கீச்...கீச் இசையோடு, காகங்களின் உறவுகளை அழைக்கும் காக்கா சத்தம், அடுத்த வீட்டின் முற்றத்தில் யாரோ தண்ணீர் தெளிக்கும் சத்தம், இத்தனைக்கும் மத்தியில்.. ஆதவனின் வெளிச்சத்தில் மஞ்சள் நிறத்துடையாள் மெளனமாய் மதில் ஓரம் வழிந்து தெருவோரம் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த செவ்வரத்தம் பூக்களை எட்டி எட்டி ஒரு கூடையை கையில் வைத்துக்கொண்டு ஆய்ந்துகொண்டிருந்தாள்.

விளக்குமாறுடன் வீதிக்கு வந்தவன் சட்டென்று அதனை ஒளித்துவைத்துவிட்டு பின்வாங்கி...அவளைக்கண்டும் காணாதது போல தலையைக்குனிந்தவாறு.....கேட்டை சற்று திறந்து வைத்துக்கொண்டு எப்படி எதைக் கையிலெடுத்துக்கொண்டு முன்னுக்குச் செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். அதற்கிடையில் அவன் மூச்சு வாங்கியது. ஒருபோதும் இல்லாத மின்சார காந்த உணர்வில் கண்கள் சிவந்து கொண்டன. தான் அணிந்திருக்கும் மேல் உடுப்பை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டான். கை விரல்களினால் தலையை வாரிக்கொண்டான். மனதோ படக்படக் என்று அடிக்க....கேட்டை மீண்டும் திறப்பது போல வெளியில் சென்றான். அப்போதும் அவன் கண்கள் யாராவது பார்த்துக்கொண்டால் நிலமை என்னாவது என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்தான்....ஒருபோதும் இப்படி அவனை எதையுமே சிந்தித்ததில்லை. இன்று அவள் பார்வை படவே அவனுள் இந்த மாற்றம்...

அப்போதுதான் கவனித்ததாக பொய்யான பார்வையை அவள் மீது இமைகளை உயர்த்தி பார்த்தான்....உள்ளுக்குள் புன்னகை. உதட்டினில் சாந்தம். அவள் ஒரு கையிலே கை கூடையை கோர்த்துக்கொண்டு எட்டி எட்டிப் பறிக்கும் அழகை ரசித்துக்கொண்டு.....வேறு பூக்கள் வேணுமா....வீட்டு முற்றத்தினுள் இருக்கு கொண்டுவரவா என்றான்...தயங்கித் தயங்கி கேட்டான்...

அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....யெஸ் ப்ளீஸ்....

பூத்தும் பூக்காததும் போல இருந்த பூக்களை அதுவும் அவன் மனக்காதல் போல் நிறைய பிடுங்கினான். மிக அவசரவசரமாக அந்தக்கூடை நிறைய பல வர்ண பூக்களால் அலங்கரித்து அவள் கையிலே அவன் கொடுக்க அதனை தாங்ஸ் என்று அவள் வாங்கிக் கொள்ளவும் முதல் முறையாக இருவருள்ளும் மனசுகள் இடம்மாறிக்கொண்டன.

ஏதாவது விசேசமா..? அவனாகக் கேட்டான்..

இப்ப எங்கட ஸ்கூலில நவராத்திரி விழா நடக்குது. ஒவ்வொரு நாளும் பூக்கள் கொண்டு போகவேணும். ஏன் உங்கட ஸ்கூலில இல்லையா..? டப்டப்பென்று பேசினாள்.

இதுபோல் ஒரு போதும் யாருடனும் பேசாத கோபால், எந்தப்பெண்ணும் அவனுடன் பேசாத நிலையில் முதன்முதலில் அவள் வார்த்தையில் தடுமாறினான். மறு வார்தை பதில் சொல்லமுடியாத குழப்பத்தில் நாணிக்குறுகி நின்றான்.

சொல்லுங்க உங்க ஸ்கூலில சரஸ்வதி பூஜை இல்லையா....

மீண்டும் அவள் கேள்வி....பதில் சொல்லுவதற்கிடையில் அவன் இருதயம் தண்டவாளத்து ரயில்போல 100 கிலோ மீற்றர் வேகத்தில் படபடத்தது போய்க்கொண்டிருந்தது.

இதற்கு என்ன பதில் சொல்லுவது 15 வயதுச்சிறுவன், பாடசாலை போகவில்லை என்றதை சொன்னால் அவமானமாகயிருக்கும் என்று எண்ணி...அங்கேயும் நடக்குது என்றான்...

மீண்டும் அவள் தாங்கியூ என்று சொல்லிக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.அவள் அருகில் இருந்த போது எல்லா பூந்தோட்டங்கள் அவள் மட்டும்என்றே அவனுக்கு இருந்தது. அவள் செல்லச்செல்ல அவன் மனது பாலைவனம் போல இருந்தது.
அன்று அவன் எந்த வேலை செய்தாலும் பலதடவை சரிபார்த்துக்கொண்டான். தான் அதனை செய்தேனா, இதனைச்செய்து விட்டேனா என்று மீண்டும் மீண்டும் வேலை செய்தான். அவன் மனது அவனிடத்தில் இல்லை. அடிக்கடி அந்த மஞ்சள் நிற தேவதை அவன் கண்ணுக்குள் நிறைய பூக்களின் நடுவே மலர்ந்து மலர்ந்து மணம் பரவிக்கொண்டிருந்தாள். பல தடவை வீதிக்குச் சென்று பார்த்தான். அவள் வருவாளா...வருவாளா என ஏங்கினான். பூ மரங்களில் இருந்த மொட்டுக்களைப்பார்த்து வேண்டிக்கொண்டான்.....நாளையும் பூத்து என் மனநாயகிக்கு உதவுங்கள் என்றான். அவனுள் ஏற்பட்ட மாற்றம் நாளைடைவில் வாசுகிக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது. ஏதோ விபரீதமாக அவன் செய்கைகள் காணப்படுவதுபோல அவதானித்தாள். கடைக்குப்போவதாகயிருந்தாலும் பல தடவை கண்ணாடி முன்னின்று தன்னை அழங்கரித்தே போவான் கோபால்......

சந்திப்புக்கள் தொடர்ந்தன...மலர்கள் பறிக்க வந்த மங்கை இப்போது இவன் மனதையும் பறித்துவிட்டாள். நவராத்திரியும் முடிந்தது. அந்த 9 நாட்களும் இவனுள் ஆய கலைகள் 64 ம் உள்ளம் முழுக்க பரவியிருந்தது. அவளும் தினமும் வருவாள். அவள் முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு வந்திருந்ததைக்கண்டான். மறு நாள் அவனுக்கும் வந்திருப்பதைக் கண்டான். தனக்குள் சிரித்துக்கொண்டான். காதலை சொல்லாமல் கன்னங்கள் சொல்லியது.

அவள் பெயரை கேட்டு அறிந்தவன்...அடிக்கடி தன் உள்ளங்கையில் அவள் பெயரையும் தன் பெயரையும் எழுதினான்....மதுமிதா, கோபால் என்று எழுதினான். அவளுள்ளும் அதே எண்ணங்கள். அடுத்த தெருவில் அவள் இருப்பதையும் அறிந்த அவன் அடிக்கடி அவளைக்காண அந்த வீதியால் சுற்றிப்போய் கடைக்குப்போய் வருவான். இருவருள்ளும் பார்வைகளும் அன்பான நலம் விசாரிப்புகளும் வார்ததைகளில்லாமல் வெறும் புன்னகையினால் மட்டுமே காதலாக வளருகிறது.

நிலைக்குமா...? நீடிக்குமா..?
அடரும்..

-----------------
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8929&hl=
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: