Friday, February 13, 2009

மனசாட்சி...12

நாட்கள் வெகுவரைவாக செல்லத்தொடங்கின...கோபாலுவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அந்த வீட்டில் வளரத்தொடங்கினான். காலையில் தினமும் முற்றம் கூட்டும் போது பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு இருந்ததை, வாசுகி கவனித்துக்கொண்டாள். அதன் பயனாக ஈஸ்வரனிடம் சொல்லி கோபாலை பின்னேரங்களில் அயலிலுள்ள ஒரு வீட்டில் டியூசனுக்கு அனுப்ப முடிவுசெய்து கொண்டார்கள். கோபாலுவிற்கும் அது பெரிய சந்தோசத்தைக்கொடுத்தது. தினமும் தன் வேலைகளை முடித்துக்கொண்டு படிக்கப்போவதற்கு ஆர்வமாக தன்னை தயார் படுத்திக்கொண்டான்.
அதன் பயனாக தன் அம்மாவிற்கு ஓர் கடிதம் எழுதினான்...
அன்புள்ள அம்மாவிற்கு..உங்கள் அன்பு மகன் கோபால் எழுதிக்கொள்வது. நீங்களும், அப்பாவும் நலமாகயிருப்பதாக எண்ணுகிறேன்.
அம்மா நான் இங்கு வந்த நாட்தொடக்கம் நன்றாக இருக்கிறேன். உங்களைள விட்டுப்பிரிந்த துயரம் மட்டும்தான் அடிக்கடி என்னை வாட்டும். மற்றப்படி நான் எல்லோருக்கும் அன்பான கோபாலாக நடக்கிறேன். இப்பொழுது என்னை பின்நேரத்தில் டியூசனுக்கும் வாசுகியம்மா அனுப்பி படிக்கவைக்கிறாங்க...ரொம்ப பெரிய ஆளாக வந்ததும் உங்களை நான் என்கூட வைத்திருப்பேன். ஏம்மா நீங்க கூட என்னைப் பார்க்க வரவில்லை...? இங்கு வருவதானால் நிறைய பணம் செலவாகும். இப்ப வேண்டாம். நான் பணம் அனுப்பி வைத்ததும் வாருங்கள். அப்பாவும் பாவம் உதவிக்கு யாருமின்றி தனியாக கஸ்டப்படுவார் என்று நினைக்கிறேன். நான் எழுதும் அட்ரசுக்கு பதில் போடுங்கள்.
இப்படிக்கு உங்கள் நினைவால் வாழும்.
அன்புமகன் கோபால்.
கடித்ததை எழுதிமுடித்ததும் அதனை போஸ்ட் செய்வதற்கு வாசுகியிடம் கொடுத்தான் கோபால்...வாசுகியும் அதனை வேண்டி பார்த்துவிட்டு ம்.கெட்டிக்காரன்...உன் எழுத்துகூட முத்துமுத்தாக அழகாகயிருக்கு.நாளைக்கே ஐயாட்ட கொடுத்து போஸ்ட் பண்ணி விடுகிறேன் சரியா....
கோபால்...சின்ன பாப்பா ஒரே அழுகிறாள் கொஞ்சநேரம் வெளியில கூட்டிட்டு போய்வாப்பா.... டினர் செய்யவிடுகிறாளில்லை. ம்...இந்த மாமியிருந்தாலாவது கொஞ்சம் உதவியாகயிருக்கும்..
அம்மா பாட்டி எப்ப வருவாங்க.....
யாருக்கப்பா தெரியும்..அவங்க.சகோதரியாம் சொந்தம் விட்டுப்போகக்கூடாதென்று போயிருக்காங்க...அங்க ஏதாச்சும் சின்ன வாய்ச்சண்டை ஆரம்பிச்சதும் ஓடிவருவாங்க....
சிரித்துக்கொண்டு சொன்ன வாசுகி அடுப்படி நோக்கிப் போனாள்.
வெளியில் காரின் சத்தம்' கேட்கவே கோபால், சின்னபாப்பாவுடன்,ஓடிப்போய் கேட்டைத் திறந்துகொண்டான் ...சிரித்துக்கொண்டுவரும் ஈஸ்வரனின் முகம் வாட்டமாகக் காணப்பட்டது...கோபாலைக்கண்டதும்....சின்ன பாப்பாவை கையில் வாங்கி கொண்டு என்ர செல்லம்...அழவேணாம்....அழக்கூடாது அப்பா வந்திட்டன்...என்ற படி உள்ளே போனார்.கோபாலுவும் அவர் பின்னால போக கோபால்.....இனி இரவு நேரம் பிளாக்கியைப் போய் அவிழ்த்துவிட்டிட்டுவா...
சரிங்க ஐயா......என்று நாய்க்கூடு நோக்கி பிளாக்கி....என்று கூப்பிட்டபடி பின்பக்கம் போனான் கோபால்...
வாசுகி....
என்னங்க நேரத்தோட வந்திட்டிங்க....
இன்றைக்கு கடைக்கு பாண்டியன் என்று ஒருத்தர் வந்தார்....
யாரங்க அவரு.....
கோபாலுவின் அம்மா இறந்திட்டாங்களாம்...
அச்சச்சோ.........அடக்கடவுளே..இன்னைக்குத்தான் அவன் தன் அம்மாக்கு என்று கடிதம் எழுதித்தந்தவன்....பாவம்........இப்ப அவனை அனுப்பிவைக்கவேணுமே..
வேண்டாம்....அவரே சொல்லிட்டுப்போகிறார். அங்க எல்லா காரியங்களும் முடிந்துவிட்டதாம்...இனி இவன் அங்கு போனாலும் அவன் அப்பாகூட சேரமாட்டான்...ஆனா பாவம் அந்த மனுசன்தான்....எல்லா பக்கத்தாலும் வேதனையைத்தாங்கிக்கொண்டு வாழ்கிறார். இப்ப இவனுக்கு எப்படிச் சொல்லுவதென்றுதான் எனக்குத் தெரியல்ல..
ஏனங்க........அந்த அண்ணனை இங்க கூட்டிவந்து அவர் வாயால சொல்ல வச்சிருக்கலாமே....
ம்..நானும் அப்படி நினைச்சு அவரிட்ட கேட்டேன்.அவரோ மாட்டேன் என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார். தன்னைக்கண்டால் எப்படியும் தன் கூட வரப்போகிறேன் என்று அழுவான் என்று...
ஓமங்க.அதுவும் சரிதான் இப்ப நாங்க என்னதான் செய்யிறது...
இப்ப எனக்கு தெரிஞ்சதெல்லாம் இப்போதைக்கு அவன்கிட்ட ஒன்றுமே சொல்லவேண்டாம். அவன் படிப்பு குழம்பிவிடும். அதுமட்டுமல்ல அவன் ஏற்கனவே நொந்து போயிருக்கிறான்...நாங்க மிருகத்தனமாக நடக்கக்கூடாது...எங்களிட்டையும் பிள்ளைகள் இருக்கு.நாங்க செய்கிற நன்மை தீமைகள்தான் நாளைக்கு எங்கட பிள்ளைகளுக்கு வந்துசேரும்.அவனை நல்லா கவனியுங்க.பாவம் ஏழைகள் வயிற்றிலஅடிக்கக்கூடாது....நீங்க காட்டுற அன்பால அவனாக தாயின் பிரிவை அறிந்தாலும் தாங்கிற சக்திகிடைக்கவேணும்...இனிமேல் அவனுக்கு மாதம் மாதம் பாங்கில காசு போட்டுக்கொண்டு வரப்போகிறேன். அவன் இளைஞனாகியதும் அவன் சொந்த தொழில் செய்ய நாம வழிகாட்டியாகயிருக்கவேணும். எப்பவும்போல அவனிடத்தில அன்பாயிருங்க...சமயம் வரும்போது நானே சொல்லிடிறன். என் அம்மா வீட்டில இல்லாதது எனக்கு என்னவோ போலயிருக்கு....அவனோ சின்னப்பிள்ள...தாயின்ர பிரிவு மிகவும் பாதிக்கும்.
இந்தக்கடிதத்தை என்னங்க செய்யிறது. அதை போஸ்ட் பண்ணுவம். ஏதாவது பதில் அவன் அப்பாகிட்ட இருந்து வந்தா பார்ப்போம்.
உள்ளவங்களையே திரும்பிப் பார்க்காத உலகத்தில், எங்கையோ, பிறந்து இங்க வந்திருக்கும் கோபாலைப்போன்றோருக்கு அன்பு காட்ட, கருணை காட்ட மனிதருள் தெய்வங்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன..
அன்றிலிருந்து கோபால் அந்த வீட்டுப்பிள்ளையாக வளர்ந்தான்...மிகவும் சந்தோசமாக வாழ்ந்துகொண்டுவருகிறான். காலத்தின் மாற்றங்கள் அவன் பருவத்திலும் மாற்றம் காணப்பட்டது.
தொடரும்...
________________________________

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8782&hl=

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: